வெற்றி தருமா? தமிழக வெற்றிக் கழகம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம், அரசியலுக்கு வரலாம் என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வரிசையில் தமிழகத்தின் புதிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உதயமாகியுள்ளது. ‘வரும் 2024 லோக்சபா தேர்தல் எங்கள் நோக்கமல்ல. எங்கள் இலக்க 2026 சட்டசபைத் தேர்தல்’ என்ற
கோஷத்துடன் தமிழக வெற்றிக் கழகம் களமாடத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவும் தமிழக அரசியலும்

தமிழகத்தின் அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. பெரும்பாலும் தமிழகத்தின் முதல்வர்கள் எல்லாம் சினிமாவில்தான் அடையாளம் காணப்பட்டு, அரியணையில் அமர்த்தப்பட்டனர் என்பது கடந்தகால வரலாறு. நாடு ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் சுரண்டல்களால் சோர்ந்து, சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நாடகக் கலை வழியாகவே சுதந்திர உணர்வு தமிழர்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. ஆனால், இதன் துரதிஷ்டம் என்னவென்றால், சுதந்திரத்துடன் நிற்காமல், அதன் தொடர்பாக ஜனநாயக ஆட்சியிலும் நாடகத்தின் பரிணாம வளர்ச்சியான சினிமாத்துறை தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

சினிமாதான் அடிப்படை தகுதியா?

இன்றைய அரசியல்வாதிகளின் தகுதி என்று பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், களப்பணி, கல்வி, சமூக உணர்வு, பொதுவாழ்வில் தூய்மை என்பார்கள். ஆனால் தமிழகத்தில் குடும்ப அரசியல், சினிமா தயாரிப்பு, ரசிகர்கள் பட்டாளம் இருந்தால் போதும். ‘பிரபல்யம்’என்பதே தமிழக அரசியலுக்கான போதுமான அடிப்படை தகுதியாக இங்கே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந்தப் பிரபல்யம்தான் தமிழகத்தின் இப்போதைய இழி நிலைக்கும் ஒருவகையில் தவிர்க்க முடியாத காரணமாகிவிட்டது, வருத்தமான உண்மை. தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்த்ததற்கு, திமுகவின் தேர்தல் வியூகங்களைவிட, வாய் ஜாலங்களைவிட, ஒருவரின் பிரபல்யமே மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அவர் முன்னாள் முதல்வர் எம்ஜிராமச்சந்திரன். 1967 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் பிரம்மாண்ட வெற்றிக்கு, அதாவது 179 தொகுதிகள் பெற்றதற்கு, எம்ஜி ராமச்சந்திரன், திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுதான். இதன் பின்னர் அவர் திமுகவில் இருந்து பிரிந்து, அதிமுக தொடங்கியது, அந்த வரிசையில் மதிமுக தோன்றியது என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

எம்ஜிஆர் வென்றதும், மற்றவர்கள் தோற்றதும் ஏன்?

எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதும், தன் பிரபல்யத்தை நம்பிதான். நடிகனால் நாடாள முடியும் என்று நிரூபித்தார். ஒரு சின்ன திருத்தம் என்ன வென்றால், பசி, வறுமை என்பது மக்களை எபட்டி பாதிக்கும் என்பதை அவர் தன் இளமைக் காலத்தில் உணர்ந்திருந்தார். இதனால், ஏழைகளை பாதிக்காத வகையிலான திட்டங்களை முன்னெடுத்து ஆட்சியை கொண்டு சென்றார். இதுதான் அவரது அரசியல் வெற்றி. ஒருபோதும் தேசம், தேசியம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் பேசியதும், நின்றதும் இல்லை.

எம்ஜிஆர் போலவே, எஸ்எஸ் ராஜேந்திரன் சினிமாவில் பிரபலமான நடிகர். கருணாநிதிக்கு நெருக்கமானவர். ஆனால், திமுகவில் அவரால் நீடிக்க முடியவில்லை. வெளியேறினார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் நடிகர் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், ஒரே ஆண்டில் அந்தக் கட்சி, ஜனதாதளத்துடன் இணைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் தீவிரமான காங்கிரஸ் அபிமான என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

இந்த வரிசையில் நடிகர் பாக்யராஜ், டி. ராஜேந்தர், ஆகியோர் கட்சியைத் தொடங்கினாலும், தாக்குப்பிடிக்க முடியாமல் மூடினர்.

அடித்து ஆடிய விஜயகாந்த்

நடிகர்கள் வரிசையில் விஜயகாந்த் 2005ம் ஆண்டு மதுரையில் தேமுதிக கட்சியைத் தொடங்கினார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இருப்பார் என்று விஜயகாந்த் எதிர் பார்க்கப்பட்டார். 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சட்டசபை எதிர்கட்சித் தலைவரானார். ஆனால், 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து காணாமல்போனார். இன்னும் சொல்லப்போனால், அவர் திட்டமிட்டே நசுக்கப்பட்டார். திமுக, அதிமுக கட்சிகளால்.

தப்பியோடிய ரஜினிகாந்த்

விஜயகாந்த் போலவே அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கட்சித் தொடங்குவதாக பகிரங்கமாகவே அறிவித்தார். இதற்காக தனக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடத்தி, ரசிகர்களை சூடாகவே வைத்திருந்தார். இடையே ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தொடங்கும் முடிவை கைவிட்டு, ஒதுங்கினார். ஆனால், கடைசியில் திமுகவின் சினிமா கம்பெனி வாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டு, தன் ரசிகர்களை திமுகவுக்கு ஒட்டளிக்கும்படி மறைமுகமான ஒரு சூழலை உருவாக்கினார் என்பது நடிகர் ரஜினி மீதான குற்றச்சாட்டு.

தமிழக வெற்றி கழகம்

இந்த நடிகர்கள் வரிசையில், இப்போது நடிகர் ஜோசப் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியைத் தொடங்கி, தன் அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர். இவருக்கு உள்ள ரசிகர் பலம் உண்மையில் கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால், நடிகர் ஜோசப் விஜய்யின் நகர்வுகள், வேறு தளத்தில் இருந்து, கூர்மையாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

2011 சட்டசபைத் தேர்தலில் ‘அணில்’ உதவுவதுபோல், அவரது ரசிகர்கள் அதிமுகவுக்கு வாக்களித்து, தங்கள் விசுவாசத்தை நிரூபித்தனர். கடந்த சட்டசபைத் தேர்தலில், அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த சூழலில், கருப்பு / சிவப்பு வர்ணம் கொண்ட சைக்கிளில் ஓட்டுச்சாவடிக்கு வந்த நடிகர் ஜோசப் விஜய், தன் ஓட்டளிப்பை உறுதி செய்தார்.

ஆனால், அவரது வருகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக, அதிமுக, பாஜ கூட்டணிக்கு எதிராக திமுகவுக்க வாக்களிக்கும்படி தன் ரசிகர்களுக்கு சங்கேதமாக அறிவுறுத்தினார் என்று திரிக்கப்பட்டு, திமுகவுக்கான திடீர் ஓட்டு அறுவடையாக மாறியது. விளைவு? 3 லட்சம் ஓட்டுகளில் அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்தது. திமுக ஆட்சிக்கு வந்தது

கொள்கை, நடைமுறை முரண்பாடு

சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை பேசியே பழக்கப்பட்ட நடிகர் ஜோசப் விஜய்க்கு, நாட்டின் நடைமுறை தொடர்பான விஷயங்களுக்கு அப்பார்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஜிஎஸ்டி வரிமுறை 2017ல் கொண்டு வரப்பட்டபோது, சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம், சிங்கப்பூரில் ஜிஎஸ்டி குறைவு என்று மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை, கூச்சமின்றி திரையில் பேசினார். 5 ரூபாய்க்கு டாக்டர்கள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய நடிகர ஜோசப் விஜய்யின் படத்துக்கு டிக்கெட் 500 ரூபாய்க்கும் அதிகம்.

இவர் சினிமாவில் வலியுறுத்தும் முன்னரே சென்னையில் 10 ரூபாய்க்கும், மதுரையில் 30 ரூபாய்கும் மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. இப்படி வாழ்வியலுக்கும், நடைமுறைக்கும் சம்பந்தம் இல்லாத கொள்கையாளர் நடிகர் ஜோசப் விஜய்.

வரிக்கும் முரண்டுதான்

தமிழ் சினிமா நடிகர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகப்படியாக ரெய்டு சென்ற நடிகர்கள் வீடுகளை பட்டியலிட்டால், அதில் நடிகர் ஜோசப் விஜய்க்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கும். காரணம், இவரது சினிமாவுக்கான சம்பளம் பெரும்பாலும் கணக்கில் வராத தொகையா கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இதுபோன்ற சூழல்களில், கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் வருமான வரித்துறையினர், இவரது வீட்டில் ரெய்டு நடத்தியது அதிகம்.

இந்த நிலையில், 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய சென்னை ஆர்டிஓ அலுவலகத்தை அணுகினார். அந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இது தொடர்பான வழக்கில், ‘‘நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’’என்றார். ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தன் மீதான எதிர்மறை விமர்சனங்களை நீக்ககக்கோரி நடிகர் விஜய் மீண்டும் கோர்ட் படியேறியது தனிக்கதை.

மங்களகரமான நாளில் பதிவு

என்னதான் சினிமாவில் தன்னை இந்துபோல் காண்பித்துக் கொண்டாலும், நடிகர் ஜோசப் விஜய்யின் கடைசி பல படங்கள், அவர் தன்னை ஒரு கிறிஸ்துவராக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன என்பதே உண்மை. அவரது சில படங்களையும் கிறிஸ்தவ அமைப்புகள் தயாரித்தன. இப்படி உடல், உள்ளம், ரத்தம் என்று கிறிஸ்தவம் ஊறிப்போன நடிகர் விஜய், தன் தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் கமிஷனில் பதிவு செய்த நாள் பிப்ரவரி 2. ஆம், கத்தோலிக்க கிறிஸ்வர்கள் கொண்டாடும், தேவமாதா பரிசுத்தமான நாள் பிப்ரவரி 2ம் தேதிதான்.

கையெழுத்தில் மாற்றம்

கட்சித் தொடங்கும் முன்னர் ஜோசப் விஜய் என்று கையெழுத்திட்டு வந்த நடிகர்
விஜய், தன் அரசியல் கட்சியைப் பதிவு செய்ததும், தன் கட்சியின் லெட்டர் பேடுகளில் சி விஜய். அதாவது சந்திரசேகர் விஜய் என்றே கையெழுத்திட்டு வருகிறார். எதற்காக அவர் தன் கிறிஸ்தவ அடையாளத்தை மறைக்க பெரிய அளவில் போராடுகிறார் என்பதுதான் விந்தை.
கிறிஸ்தவத்தை மறைத்துக் கொண்டு கட்சிகள் நடத்தும் நடிகர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் சைமன் என்ற சீமான் ஆகியோர் வரிசையில் நடிகர் விஜய்யும் தீடீரென களம் இறங்கியுள்ளார். முன்னவர்கள் 2 பேரும களம் இறக்கப்பட்ட நோக்கம் பொய்த்துப்போன நிலையில், இப்போது மிஷினரிகளின் 3வது ஆயுதமாக நடிகர் ஜோசப் விஜய் அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.

எல்லாம் மிஷினரிகள் மயம்

திமுக ஆட்சி என்பது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவும், இந்த ஆட்சிக்கு காரணம் கிறிஸ்தவர்கள் என்று சபாநாயகர் அப்பாவும், நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அமைச்சர் உதயநிதியும் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகத்தில் ஒரு தேசியக் கட்சி, திராவிட பிம்பத்தை நொறுக்கிக் கொண்டு முன்னேறுவதை திராவிடத்தை விதைத்த கிறிஸ்தவ மிஷனரிகளா ல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை திசை திருப்புவதற்கான ஒரு களமாகவே, நடிகர் ஜோசப் விஜய்யின் அரசியல் கட்சியின் தொடக்கம், அதன் பதிவுகள், அவரது பின்புலம் ஆகியவை தொடர்பாக யோசிக்க வேண்டியுள்ளது

ஆனால், எது எப்படியிருந்தாலும், அரசியலின் உண்மையான எஜமானர்கள் வாக்காளர்கள்தான். அந்த எஜமானர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.