கணைய அழற்சி கவனம் வேண்டும்

என்சாண் உடம்புக்கு தலையே பிரதானம். ஆனால், மருத்துவ உலகம் சொல்வது என்னவென்றால், உடலின் வெளிப்புற உறுப்புகள் பலவீனம் அடைந்தால், பாதிக்கப்பட்டால், மாற்றுத் திறனாளி என்று வெளிப்படையாக அறிவித்துவிடலாம். ஆனால், உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனை தீவிரமானால், அதன் எதிர் வினைகளை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டே பயணிக்க வேண்டியிருக்கும். சில உடல் உள்ளுறுப்புப் பிரச்சனைகளை சரி செய்யலாம். சிலவற்றை சரி செய்ய முடியாது. நம் அன்றாட வாழ்க்கை முறைகளில், உணவு முறைகளில் அவற்றை சரி செய்து கொண்டு வாழ் நாட்களைக் கடத்த வேண்டியிருக்கும்.

இந்த வகையில் ஒற்றைத் தலைவலி, உணவுப்பாதை பிரச்சனைகள், பித்தப்பை பிரச்சனைகள், கணையத்தின் பிரச்சனைகள் என்று சில தீர்க்க முடியாத சிக்கல்களைக் கூறலாம். இதிலும் கூட, பித்தப்பைக் கற்கள் அறுவை சிகிச்சை என்பது நவீனத்துவம் கொண்டு, நுண்துளை வழியாக முடிக்கும் வகையில் வந்துவிட்டது.

ஆனால், கணையம்? இப்போதும் கூட டாக்டர்கள் நன்கு யோசித்து, முடிவு எடுக்கும் ரிஸ்க் நிறைந்த விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. காரணம், கணையத்தின் செயல்பாடு, உடலின் ஜீரண மண்டலத்துடன் பின்னிப் பிணைந்தது. உடலின் இயக்கம், எடை கூடுவது, குறைவது என்று பல்வேறு வழிகளில் பின்னிப் பிணைந்தது.

கணையம் முக்கியம் ஏன்?

உடலின் உள் உறுப்புகளில் மிகவும் பாதுகாப்பான நிலையில் வைத்து பராமரிக்கப்படும் ஒரு உறுப்பு கணையம் எனலாம். அதன் அறுவை சிகிச்சை மிக சிக்கலான ஒன்று என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். கணையம் சுரக்கும் இன்சுலின் உடலின் இயக்கத்துக்கு மிகமிக தவிர்க்க முடியாத, அத்தியாவசியமான பொருளாகும். அதாவது, நாம் சாப்பிடும் உணவு இரைப்பையில் உள்ள அமிலத்தால் நொதிக்கப்படுகிறது. இந்த உணவுகள் நன்கு ஜீரணம் ஆவதற்கு, பித்தப்பை நீர் உதவி செய்கிறது.

எந்த உணவு சாப்பிட்டாலும் பித்த நீர்தான், அதை முழுமையாக கரைக்க உதவி செய்கிறது எனலாம். பித்த நீர் சுரப்பு, வெளியேற்றத்தில் தேக்கம் ஏற்பட்டால், அது மஞ்சள் காமாலையில் விடியும். இதற்கு அப்பால், இன்சுலினின் பங்களிப்பு, ஒட்டு மொத்த ஜீரண மண்டலத்தையும் அப்படியே பராமரிப்பதுடன், உடல் செல்களின் இயக்கத்துக்கும் வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது.

நாம் உண்ணும் உணவு சிதைக்கப்பட்டு, நொதிக்கப்பட்டு, சக்திகளாக மாற்றப்படுகிறது. இந்த சக்தியை உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு செல்லும் சேர்க்கையை இன்சுலின் செய்கிறது. இதனால்தான் இன்சுலின் உடலின் இயக்கத்துக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. உடலின் இயக்கத்துக்கு செல்களின் இடைவிடாத செயல்பாடே முக்கிய காரணம்.
அதாவது, ஜீரணத்துக்கு பின்னர் சக்தியாக மாற்றப்படும் உணவுகள், இன்சுலின் உதவியால் ஒவ்வொரு செல்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, சக்தியூட்டப்படுகிறது. இதனால், உடலின் உச்சிமுதல் உள்ள உள்ளங்கால் வரை உள்ள செல்களுக்கு, இன்சுலின் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொண்டது என்பதும், அதை உற்பத்தி செய்யும் கணையம் ஏன் தேவை என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

கணைய அழற்சி

கணையத்தின் முக்கியமான 2 என்சைம்கள் சுரப்பு சீராக இருக்க வேண்டும். அமிலேஷ், லைப்பேஷ் எனப்படும் 2 என்சைம்களின் சுரப்பும் சீராக இருந்துவிட்டால், ஆயுளுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 70 வயதிலும் கூட, டபுள் ஸ்ட்ராங் சர்க்கரை போட்டு சாப்பிட முடியும். ஆனால், இதில் பிரச்சனை ஏற்பட்டால், அம்புட்டும் மோசமாகிவிடும். ஆனால், கணைய அழற்சி திடீரென ஏற்படுவது இல்லை.

நாள்பட்ட பிரச்சனைகளால் ஏற்படுகிறது. அதாவது, சிலருக்கு பிறவியில் இருந்தே கணைய அழற்சி பிரச்சனை இருக்கும். ஏன், எதற்கு என்றே தெரியாது. இவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே இன்சுலின் செலுத்தப்பட்டு, வளர்ச்சி பாதுகாக்கப்படும். டீன் ஏஜ் வயதில் தாறுமாறான மற்றும் கட்டுப்பாடு இல்லாத உணவு முறைகளால் கணைய அழற்சி நோய் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

குடிப்பழக்கம்

தீவிர குடிப்பழக்கம் உள்ளவர்கள், அதீதமாக கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் குடிப்பவர்கள், புகைப் பழக்கம், அதீதமாக எண்ணைப் பதார்த்த ஆர்வலர்கள், நீண்ட நேரம் கண் விழித்து தூக்கம் கெடுபவர்கள், மன அமைதியின்றி இருப்பவர்கள் என்று கணைய அழற்சிக்கான காரணங்களை நீண்ட பட்டியலாக போடலாம்.

அதிலும், சிலருக்கு பணியின் தன்மை, பணிச் சூழல் காரணமாக எதிர்பாரத வகையில் கணைய அழற்சி ஏற்பட்ட மருத்துவ வரலாறுகளும் உள்ளன. சிலருக்கு பிறவிலேயே கணையத்தில் அழுக்குகள், கற்கள் தோன்றியது போன்ற சூழல்களில், அறுவை சிகிச்சையும் செய்ய முடியாத சூழலில், கணைய அழற்சி நோய் அப்படியே வந்து ஒட்டிக் கொள்கிறது.

என்ன செய்யும் ? பாதிப்பு எப்படியிருக்கும்?

கணைய அழற்சி ஏற்பட்டால் முதலில் உடல் எடை சம்பந்தம் இல்லாமல் அதிகரிக்கத் தொடங்கும். கொஞ்சம் சுதாரித்து, ஏன், என்று எதற்கு என்று கண்டு பிடிக்கவேண்டும். தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால், செய்கூலி, சேதாரத்தை குறைக்கலாம். இல்லாவிட்டால், அதிக செய்கூலி, கூடுதல் சேதாரத்தை கணைய அழற்சி ஏற்படுத்தும்.உடல் பருமன் அதிகரித்துக் கொண்டிருந்த அதேநேரத்தில், அப்படியே திடீர் வயிற்று வலி தோன்றும். சட்டென புரியாது. ரத்தத்தில் அமிலேஷ், லைப்பேஷ் சோதனை செய்து, அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும்போதுதான், நிலைமையின் தீவிரம் உணர முடியும். தொடர்ந்து, சில வாரங்கள் தொடங்கி, சில மாதங்கள் வரை சிகிச்சை வேண்டியிருக்கும். இந்த வகையில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்தாலும், தொடர் கண்காணிப்பு அவசியம்.

சிலருக்கு இந்த அழற்சி, பக்க விளைவாக இன்சுலின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தி, சக்கரை பாதிப்பை இலவச இணைப்பாக கொடுத்துவிட்டுச் செல்லும். கணையம் இயல்பில் இருப்பதாக தோற்றம். ஆனால், சர்க்கரை பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியிருக்கும்.

இது வேறவெலல் பாதிப்பு

இந்த 2 பாதிப்புகளுக்கும் அப்பால், 3வதாக ஏற்படும் பாதிப்பு கொஞ்சம் கொடூரமாக இருக்கும். அதாவது வயிற்றுப்போக்கு. நம்புவதற்கு சிரமம்தான். ஆனாலும், இதன் விளைவுகளை சொல்லித்தான் ஆக வேண்டும். அதாவது, சில வகையான கணைய அழற்சி, சம்பந்தப்பட்ட நபரின் அன்றாட வாழ்க்கையில் கை வைக்கத் தொடங்கிவிடும். நிம்மதியாக ஒரு வாய் சோறு சாப்பிட முடியாது.

கணைய அழற்சி பாதிப்பு உள்ளவர்கள் அசைவம் தொடவே கூடாது. முட்டையாக இருந்தாலும் சரி. ஓட்டல் / வெளியில் சமைக்கும் உணவுகளும் ஆகாது. வீட்டில் இருந்தாலும் எண்ணைப் பதார்த்தங்கள் கூடவே கூடாது. முடிந்தவரை எண்ணை சேர்க்காத சமையல், சிறிய அளவில் பருப்பு சேர்ந்த சாம்பார், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகளவு எடுத்துக் கொள்ளலாம்.
தானியங்களில் சிறுதானிய வகைகள் குறிப்பாக திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், தூயமல்லி அரிசி ரகங்களை பயன்படுத்தலாம். உணவுகள் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் நாள் உணவு என்றால், கஞ்சி தவிர மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதெல்லாம் முடியாது

நாங்கள் வழக்கமான உணவுதான் எடுப்போம் என்றால், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். காரணம், அசைவ, எண்ணை உணவுகள் எடுக்கும்போது, ஒட்டு மொத்த கழிவு நீக்க மண்டலமும் கலங்கிப்போய்விடும்.

நாள் இருமுறை மலக் கழிவு வெளியேற்ற வேண்டும். ஆனால், பாதிப்பு ஏற்படுமானால், நாள் முழுவதம் கழிவறையில் இருக்க வேண்டும். அத்துடன், மலத்துடன் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து, எண்ணையாக வெளியேறத் தொடங்கும். ‘ஆய்லி மோஷன்’ என்று ஆங்கில மருத்துவத்தில் இதைக் குறிப்பிடுவார்கள். இதை நிறுத்துவதற்கு மருந்து மாத்திரைகள் உண்டு. ஆனால், உடல் ஒத்துழைப்பு செய்தால், ஒரு சில நாட்கள் மட்டுமே மருந்து மாத்திரைகள் வேலை செய்யும். இதன் பின்னர் வழக்கம்போல் எண்ணை கலந்து வெளியேறத் தொடங்கும்.

சாதாரணமாக வாயு பிரிந்தாலே எண்ணைத் தன்மையுடன் இருக்கும். இதனால், உள்ளாடைகள் நாசமாகும். டயாபர் வைக்க வேண்டியிருக்கும். அத்துடன், மன உளைச்சல், விரக்தியும் வந்து சேரும். எனவே, மருந்து மாத்திரை உள்ளது என்பதற்காக நோய்களை எதிர்ப்பது வீண் வேலையாக இதுபோன்ற நேரங்களில் வந்து சேரும். எனவே, மருத்துவத்துடன், உணவும் நேர்த்தியானால் மட்டுமே, கணைய அழற்சி போன்ற உடல் பாதிப்புகளை, வெற்றிகரமாக எதிர் கொண்டு, வாழ்க்கையை நகர்த்திட முடியும்.