
பீதியில் திராவிட மாடல்
களத்தில் திமுக அமைச்சரவை
‘ஸ்டாலின்தான் வராரு. விடியல் தரப்போறாரு’ என்ற பாடலை, 2021 சட்டசபைத் தேர்தலில், தமிழகம் முழுவதும் ஓடவிட்டு, போட்டி போட்டு ஓட்டு கேட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, மீண்டும் ஒரு சோதனைக் களம் வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இந்தத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லைதான். ஆனால், திமுகவுக்கு இது வாழ்வா, சாவா என்ற நிலைப்பாட்டை கொடுத்துள்ளது.
நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகள்
கடந்த சட்டசபைத் தேர்தலில், எப்படியாவது ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்று களம் இறங்கிய திமுக, பீகார் மாநிலத்தின் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் உதவியுடன், மிகப் பெரிய ‘டியூசன் பீஸ்’ செலுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டது.
சாத்தியமே இல்லாத நீட் ரத்து, பழைய பென்ஷன் திட்டம் அமல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், காஸ் மானியம் என்று விதவிதமான 520க்கும் அதிகமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, தட்டுத் தடுமாறி, 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை திமுக கைப்பற்றியது. இதற்காக டியூசன் பீஸ் தவிர, வாக்காளர்களுக்கு ‘வல்லிய’ பணப்பட்டுவாடா நடந்ததையும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
ஆட்சிக்கு வந்த பின்னர் பல்டி
அதிமுக ஆட்சியில், திமுக எதிர்க்கட்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டது என்பது மறுக்க முடியாதது. ஜெ., இல்லாத நிலையில், பழனிச்சாமி ஆட்சியை தம் கட்டி கொண்டு சென்றாலும், ஒரு வாரத்தில் கவிழ்ப்பேன், ஒரு மாதத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டிருந்தனர் ஸ்டாலின் தரப்பினர்.

கரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு? மின்கட்ட கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது? சொத்து வரி உயர்வு எதற்கு விதவிதமான போராட்டங்கள் நடத்தினர். திமுக ஆட்சிக்கு வந்தால் சொத்து வரி உயர்வு இருக்காது. மின் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கிடுப்படும். டாஸ்மாக் இருக்காது என்று விதவிதமாக தூண்டில் போட்டனர்.
திமுகவின் வாய் ஜால தூண்டிலில், தமிழர்கள் சிக்கியதுதான் பரிதாபம். ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்த திமுக அரசு, லஸ்ஸி, நெய், மோர், தயிர் என்று அடுத்தடுத்த பொருட்கள் மீது விலையை உயர்த்தியது. லிட்டருக்கு 12 ரூபாய் வரை பால் விலை உயர்ந்தது.

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமானது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டது. பட்டதாரி ஏழை பெண்களின் திருமணத்துக்கான தாலிக்கு தங்கம் திட்டம் ரத்தானது. இதைவிடக் கொடுமை, அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்க இலவச பயணம் என்ற திட்டம்தான்.
பயனாளிகள் யார் என்று அடையாளப்படுத்தாமல், அரசு மடையைத் திறந்துவிட்டது. விளைவு? இப்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனில், போக்குவரத்துத்துறை மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய இதற்கு 10 சதவீதம் குறைவான கடனில் மின்துறையும், இதற்கு அடுத்த நிலையில், ஊழலில் சிக்கி, கல்வீச்சு அமைச்சர் நாசரின் ஆவினும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.
போராட்ட களத்தில் அரசு ஊழியர்கள்

சாத்தியமே இல்லாத பழைய பென்ஷன் திட்டத்தை, அமல்படுத்துவோம் என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறினாலும், ‘அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை’ என்கிறார் நிதி அமைச்சர். அத்துடன், பழைய பென்ஷன் திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தினால், மாநிலங்களின் நிதி நிலைமை திவாலாகிவிடும் என்று ஆர்பிஐ பகிரங்கமாகவே எச்சரித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சாந்தப்படுத்துவதற்காக அகவிலைப் படியை உயர்த்தி, அறிவித்து, தற்காலிகமாக சாந்தப்படுத்தியுள்ளது. ஆனால், தங்களை ஏமாற்றிய, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று கொதிப்பில் உள்ளனர்.
சவாலான களம்?
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியின் இடைத் தேர்தல், திமுகவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. உண்மையில், இந்த இடைத் தேர்தலை நினைத்து காங்கிரஸ்தான் பயப்பட வேண்டும். ஆனால், குடைச்சல் என்னவோ திமுகவுக்குத்தான். காரணம், சாத்தியமில்லாத வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர், இப்போது, மக்களின் பன்முனை எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது.
காசேதான் வாக்குகளடா…
இடைத்தேர்தல் என்றால் ஸ்பெஷல்தான்.
அதிலும், திமுக ஆட்சிக் காலத்தில் நடக்கும் இடைத் தேர்தல் என்றால், இன்னும் ஸ்பெஷல்தான். திருமங்கலம் மற்றும் பென்னாகரம் பார்முலா தேர்தல்களால், திமுக செய்த பணப் பரிவர்த்தனை ஜாலங்கள், இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில், பண பரிவர்த்தனை செயலிகள் கூட செய்திருக்காது. அந்தளவுக்கு பணத்தை இறைப்பார்கள்.
அதேநேரத்தில், கொங்கு மண்டலத்தின் ஒரு கம்பீரம், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேவலப்பட்டு போனது. கொங்கு மண்டல வாக்காளர்கள் பணம், பரிசுப் பொருளுக்கு விலை போகாதவர்கள் என்ற பிம்பத்தை உடைத்து, உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தை, கொலுசு மண்டலமாக்கிய பெருமை, அமைச்சர் ஒருவருக்கே சேரும்.
இந்தச் சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும், அங்கு பதிவாகும் ஓட்டுகள், திமுக ஆட்சியின் மீதான மதிப்பை பாதிக்கும் என்பதால், முதல்வர் ஸ்டாலினுக்கு இது அக்னி பரீட்சை என்றே சொல்ல வேண்டும். இதனால, மூத்த அமைச்சர்கள் நேரு, முத்துச்சாமி தொடங்கி கிட்டத்தட்ட தன் ஒட்டு மொத்த அமைச்சரவை விஐபிக்களையும் களப்படுத்தியுள்ளார். ஒரு கூட்டணிக் கட்சியின் வேட்பாளருக்காக, ஆளும் கட்சியின் ஒரு கேபினட்டே களம் இறங்கியிருப்பது, இந்தத் தேர்தலில் உள்ள அழுத்தத்தை சொல்லாமல் புரிய வைக்கும்.
பலம் இல்லாத எதிர்கட்சி

இந்தத் தேர்தலில் காங்., வேட்பாளர் இளங்கோவனை எதிர்த்து, அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யாராக இருந்தாலும், அதிமுகவின் பாரம்பரிய சின்னமான இரட்டை இலை இல்லாவிட்டால் சிக்கல்தான். காரணம், கொங்கு மண்டலத்தில் இரட்டை இலையின் செல்வாக்கு அப்படி. சின்னத்தை கைப்பற்றாமல் அதிமுகுவின் எந்த அணி போட்டியிட்டாலும், அது திமுகவுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும். விளைவு? 1989 சட்டசபைத் தேர்தலில் அதிமுக பிளவு பட்டு ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்ட வரலாற்றை நினைவு படுத்த வேண்டியுள்ளது.
பாஜவின் நிலைப்பாடு என்ன?
இந்தத் தேர்தலில் பாஜ, தன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கிறது. ஆனால், இரட்டை இலை யாரின் பக்கம் சாய்கிறது என்பதைப் பொறுத்தே பாஜவின் செயல்பாடு இருக்கும். அதேநேரத்தில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜ தனித்து களம் காண வேண்டும் என்று பல தரப்பிலும் கூறுகின்றனர். நல்ல விஷயம்தான். காங்கிரஸ் திமுகவை கை கழுவிவிட்டு, தனித்துப் போட்டியிட்டால், பாஜவும் போட்டியிடும். இந்த வகையில், அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவது அவற்றின் பலத்தைக் காண்பிப்பதாக இருக்கும். லோக்சபா கூட்டணியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பணம் மடை திறக்கும்.
வெள்ளிக் கொலுசு, திருமங்கலம் பார்முலா, பென்னாகரம் பார்முலா என்று தேர்தல்களில் புதுமை செய்யும் திமுகவுக்கு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பெரிய விஷயமே அல்ல. பணப்பட்டுவாடா சரியான நேரத்தில் தொடங்கும் என்கின்றனர் அந்தக் கட்சியின் தொண்டர்கள். காரணம், எந்த செந்தில்பாலாஜியை, எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் கழுவி ஊற்றினாரோ, அதே செந்தில் பாலாஜிதான் கொங்கு மண்டலத்தை கொலுசு மண்டலமாக மாற்றினார். இவர் ஒருவர் போதாதா? பற்றாக்குறைக்கு திமுகவின் ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் இந்த வார்டுகளின் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா திட்டம் எல்லாம் வகுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி, ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் தோல்வி அடையுமானால், அது தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கியுள்ளனர் என்பதன் அறிகுறிதான். மாறாக வெற்றிபெற்றால், தமிழகம் அழிவுப்பாதையில் பயணம் தொடர்கிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
