கலங்க வைக்கும் கள்ள(சாராய)குறிச்சி போலீஸ்துறைக் கேகளங்கம்

தமிழகத்தில் போதையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த மே மாதம் 3வது வாரத்தில் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர், தமிழகம் முழுவதும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி பிற்பகல் வரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவபுரம், முடியனூர், சங்கராபுரம் உட்பட பல கிராமங்களில் விஷ சாராயம் குடித்து 55 பேர் பலியான சம்பவம், தமிழகத்தை அதிரவைத்துள்ளது.
மறக்க முடியாத மரணக்கானம்…

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை அதிகரித்துள்ளது. இதை நாம் சொல்லவில்லை. போதைப் பொருள் ஒழிப்புக்காக தமிழக அரசின் போலீஸ்துறை மேற் கொண்ட கஞ்சா 1.0, கஞ்சா 2.0, கஞ்சா 3.0 என்ற தொடர் நடவடிக்கைகள்தான் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனையும், கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுப்பவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. குட்கா, புகையிலை தடையின்றி கிடைக்கிறது.
இந்நிலையில்தான் கடந்த
ஆண்டு மே மாதம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில், விஷ சாராயத்தை தயாரித்தவர்களுக்கும் நிதி உதவி அறிவித்து, தமிழக அரசு புதிய புரட்சி செய்தது. முன்னதாக, 2001ல் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர் 20 பேருக்கு பார்வை பறிபோனது. 2008ல் தமிழகம் – கர்நாடகா மாநிலங்களின் எல்லையில், கள்ளச்சாராயம் குடித்த 148 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் பலியானவர்களில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தில் 21 தமிழக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆனால், கடந்த ஆண்டு நடந்த மரக்காணம் கள்ளச்சாராய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மற்றும் துணை போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொர்டபாக தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
கள்ளச்சாராயத்தின் புகழிடம்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் கள்ளச்சாராயத்தின் பிறப்பிடம், உறைவிடம் என்றே சொல்லலாம். அதிலும், சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கல்வராயன் மலையில் தொடங்கும் கள்ளச்சாராய காய்ச்சல் தொழில், மலைக் கிராமங்களில் பல்கிப் பெருகி, உற்பத்தி செய்யப்பட்டு, இங்கிருந்துதான் திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது என்கின்றனர் இதன் நெட்வொர்க்கை அறிந்தவர்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, கட்டிக் காப்பாற்றி, வளர்த்து, இப்போது 60க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட பெருமைக்கு சொந்தக்காரர்கள், அந்த மாவட்டத்தின் ரிஷிவந்தியம் எம்எல்ஏ கார்த்திகேயன், சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் என்று பாமக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால், நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவோம் என்று 2 எம்எல்ஏக்களும் சட்டசபை கூட்டத் தொடரில் பகிரங்கமாக அறிவித்தனர். கைப்புண்ணுக்கு கண்ணாடியை காட்டுங்கள் என்ற கதையைத்தான் திமுகவினர் சொல்கின்றனர்.
பின்தங்கிய மாவட்டம்

இப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் 1993க்கு முன்னர் தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக, கடலூரை
தலைமையிடமாக கொண்டு இயங்கியது. கடலூரிலிருந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் செல்வதற்கு 90 கி.மீட்டர். ஒரு வழிப்பாதை. ஒருநாள் பயணம் என்பதால் அரசு ஊழியர்கள் மலைத்தனர். கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட பகுதியில் பசுமை நிறைந்த கல்வராயன் மலை உள்ளது. இதன் ஒரு பகுதி சேலம் மாவட்த்தில் உள்ளது. தென்னார்க்காடு மாவட்டத்துக்கு பின்னர் விழுப்புரம் மாவட்டத்துக்குள் கள்ளக்குறிச்சி வந்தாலும், அங்கிருந்தும் அரசு ஊழியர்கள் வந்து செல்ல சிரமப்பட்டனர். இதனால், கள்ளக்குறிச்சி பல ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தின் கண்ணில் படாத ஒரு பகுதியாக செயல்பட்டது.
ஓட்டு என்ற அட்சயபாத்திரம்

கல்வி அறிவு குறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் உழைப்பை மட்டுமே நம்பினர். விவசாயம் கை கொடுக்காத நிலையில், வருமானத்துக்காக கள்ளச்சாராயம் காய்ச்சத் தொடங்கினர். இந்த வகையில் கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களின் ஆயிரக் கணக்கான மக்களின் தொழிலாகவே சாராயம் காய்ச்சுதல் மாறியது. இவர்களுக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ உதயசூரியன் செயல்பட்டதாகவும், இதனால்தான் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்றும், சாராயம் காய்ச்சுபவர்களுக்க அரணாக இருந்தார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு. இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், ஆத்தூர், திருக்கோவிலூர், சேலம், திருவண்ணாமலை பகுதிவரை வினியோகமானது.
அழிக்க முடியாத சாராய சாம்ராஜ்யம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவுகள் தொடர்பாக எம்எல்ஏ உதயசூரியன் சட்டசபைக்கு வெளியில் பேசியபோது, ‘‘என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவேன்’’ என்றார். அதை அவரது மனசாட்சி சொல்ல வேண்டும். கள்ளக்குறிச்சி கலால்துறைக்கு போட்டி போட்டு போஸ்டிங் வாங்கிச் சென்ற அதிகாரிகள் சொல்ல வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு 8 மாதங்களுக்கு முன்னர் விஆர்எஸ் பெற்றுச் சென்ற எஸ்பி கோவிந்தராஜ் சொல்ல வேண்டும். விஷச் சாராய சாவில் 61 பேரை பலி கொண்ட சாராயத்தை வினியோகம் செய்து, இப்போது கைதாகியுள்ள சாராய வியாபாரி கன்னுக்குட்டி சொல்ல வேண்டும். கன்னுக்குட்டி வீட்டின் கதவில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் படம், அவர் பக்காவான திமுக விசுவாசி என்கிறது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறைக்கும் வகையில், திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன், கார்த்திகேயன் ஆகியோர், ‘‘தோல்வியின் விரக்தியால் பேசி வருகிறார் ராமதாஸ். அவர் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி அரசியலில் இருந்து விலகத் தயாரா?’’ கோரஸ் பாடுகின்றனர்..
மெத்தனால் பயங்கரம்
கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்த திமுக பிரமுகர் கன்னுக்குட்டி கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கன்னுக்குட்டியின் தம்பி தாமோதரன் ஆகியோர், வழக்கம்போல் கடந்த 18ம் தேதி பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்துள்ளனர். இதை வாங்கிக் குடித்த சுரேஷ். பிரவீன், சேகர், கந்தன் மற்றும் ஜெகதீசன் ஆகியோருக்கு நள்ளிரவில் வாந்தி, வயிற்று வலி, மயக்கம், கண்பார்வை மங்கல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றதற்கு, ‘குடித்திருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது’ என்று கூறி, டாக்டர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சில மணி நேரத்தில் சுரேஷ் துடிதுடித்து இறந்துள்ளார். காரணம் அவர்கள் அருந்த கள்ளச் சாராயத்தில் ‘‘மெத்தனால்’’ என்ற கொடிய ரசாயனம் கலக்கப்பட்டு, அது விஷ சாராயமாக்கப்பட்டது. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் சேர்ந்தால் அது விஷசாராயமாகிறது.
விஷ சாராயம்
இந்த விஷ சாராயத்தை குடித்ததால்தான் இதையடுத்து பிரவீன் உட்பட சிலரும் பலியாகினர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தில் 5 பேர் பலி என்ற செய்தி வெளியானதும், பதட்டம் அதிகரித்தது. காரணம், சுரேஷ், பிரவீன் உட்பட பலரின் துக்க நிகழ்வுக்கு காலையில் சென்றவர்கள், அவர்கள் யாரிடம் மது வாங்கி குடித்து இறந்தார்களோ, அதே கன்னுக்குட்டியிடம் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை வாங்கிக் குடித்தனர்.
வதந்தி???
இந்த சூழலில் கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்பி சமய்சிங் மீனா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘இந்த 5 பேரும் வாந்தி, பேதி, மயக்கத்தால் இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்று பகிரங்கமாக பேட்டியளித்தனர். இந்தப் பேட்டியைக் கண்ட பலர், நாம் நல்ல சாராயத்தைத்தான் குடித்துள்ளோம் என்று அசட்டையாக இருந்தனர். இதனால், எந்த கள்ளச்சாராயம் சுரேஷ், பிரவீன் உட்பட 5 பேரை பலி வாங்கியதோ, அதே கள்ளச்சாராயம் அடுத்தடுத்து 60 பேர் வரை உயிர்குடித்தது. உயிர்பலி அதிகரித்த நிலையில், கலெக்டர், எஸ்பி மாற்றப்பட்டுள்ளனர்.
பெயரளவுக்கு கைதுகள்..
மெத்தனால் கலந்த கள்ளச்சாராய பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில், சாராய வியபாரி கன்னுக்குட்டி கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் தாங்கள் விற்ற கள்ளச்சாராயத்தில், ஆபத்தான மெத்தனால் என்ற ரசாயனத்தைக் கலந்து, அதை விஷ சாராயமாக்கினர். இந்த வகையில், கன்னுக்குட்டி கோவிந்தராஜூக்கு மெத்தனால் வினியோகம் செய்த மரக்காணம் மாதேஷ், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஜோசப் என்று வரிசையாக கைது தொடர்கிறது.
தலை தப்பிய எஸ்பி..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குக்கு பெரிய சவாலாக இருப்பது கள்ளச்சாராய வியாபாரிகள் என்பதை, அங்கு எஸ்பியாக பணிபுரிந்த மோகன்ராஜ் உணர்ந்து கொண்டார். நேர்மையாக செயல்பட்ட அவர், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றபோது, குறுக்கே வந்து நின்றனர் ஆளும்கட்சியினர். இதனால், இந்தப் பிரச்சனையை டிஐஜி, ஐஜி, டிஜிபி மற்றும் உள்துறை வரை கொண்டு சென்றும், உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வரை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை. இதனால், தன் பதவிக் காலத்தில் விஷ சாராய சாவுகள் நடந்தால், அது
போலீஸ்துறையில் தான் இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றிய நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடும் என்று கோவிந்தராஜ் அஞ்சினார். இதையடுத்து தனக்கு விஆர்எஸ் வழங்கும்படி அரசிடம் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான அவரது விருப்ப ஓய்வு போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘சொந்த வேலை காரணமாக விஆர்எஸ் பெற்றுச் செல்வதாக’ முறைப்படி, தன்மையாக கடிதம் எழுதி பெற்றுக் கொண்டு விடுவித்தனர் என்பது, போலீஸ்துறையின் செயல்பாட்டின் கறுப்புப் பக்கம் எனலாம்.
தொடரும் சிகிச்சை

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியான 60 பேரைத் தவிர, 130க்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம் மற்றும் ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கண் பார்வை பறிபோனது, குடல் வெந்தது, காது கேட்கும் திறன் குறைந்தது, நரம்பு மண்டலம் பாதிப்பு, ஈரல், கல்லீரல், இரைப்பை பாதிப்பு என்று சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த உள் உறுப்புகளும் சேதம் அடைந்துள்ள நிலையில், இதற்காக சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி உட்பட பல மாவட்டங்களில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கினர்.
ஒருநபர் கமிஷன்
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம், மாதவபுரம், சங்கராபுரம் உட்பட பல பகுதிகளில் விஷ சாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த கமிஷன் 3 மாதத்தில் முழுமையாக விசாரித்து பரிந்துரைகளை வழங்கும். இதையடுத்து நீதிபதி கோகுல்தாஸ் அங்கு உடனடி விசாணையைத் தொடங்கியுள்ளார்.
கல்வராயன்மலையில் ரெய்டு
வட மாவட்டங்களுக்கு கள்ளசாராயம் வினியோகம் செய்யம் மாஸ்டர் சப்ளையராக கல்வராயன் மலைப்பகுதி உள்ளது.

இங்கு ஊற்று, தண்ணீர் உள்ள பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல்போடப்படுகிறது. ஊறல் போட்ட இடத்தில் போலீசார் ஊறலை அழிக்கும்போது, அங்கு ஊறல் போட்டவர் குறித்து தகவல் தெரிந்தாலும், மேலிட உத்தரவுக்கு பின் அடையாளம் தெரியாதவர் என வழக்கு பதிவு செய்கின்றனர். பறிமுதல் செய்யும் ஊறல், சாராய அளவை குறைத்து கணக்கு காட்டுவது வாடிக்கையான ஒன்று. கல்வராயன்மலையில், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், வனத்துறையினர் ஒருங்கிணைந்து, ரோந்து செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனால் போலீசார் ஒருபுறம் ரெய்டு செல்லும்போது, மறுபுறம் கள்ளச்சாராய வியாபாரிகள் தப்பிவந்தனர். சாராய சாவுகளைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், கல்வராயன்மலையில் ஆத்தூர் மதுவிலக்கு டிஎஸ்பி சென்னகேசவன் தலைமையில், 4 தனிப்படைகளாக 100க்கும் அதிகமான போலீசார், போலீசார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலையை சேர்ந்த 200க்கும் அதிகமான போலீசார் என்று ஒரே நாளில் 300 பேர் மலையில் முகாமிட்டு ஊறல், சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டுபிடித்து அழித்தனர்.
மெத்தனால் என்ன செய்யும்?
மெத்தனரால் எளிதில் ஆவியாகும் ஒரு ரசாயனம். ‘‘எத்தனால்’’ மது தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மெத்தனால் ரசாயனம் மிகவும் மலிவானது இது. உரம் உற்பத்தி, பேப்பர் உற்பத்தி, பிளைவுட் தயாரிப்பு, யூரியா தயாரிப்பு என்று மனிதர்களுக்கு தேவையான வெளிப்புற பொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக மெத்தனால் தோலில் பட்டால் அலர்ஜி ஏற்பட்டு அரிக்கும். இதே மெத்தனால் உடலுக்குள் சென்றால் நாக்கு தொடங்கி, தொண்டை, இரைப்பை, சிறுகுடல், ஈரல், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை செல்கள் பாதிப்பு, கண்பார்வை பறிபோதல் என்று ஒட்டு மொத்த வேலைகளையும் சில மணி நேரத்தில் செய்து முடிக்கும். 10 மில்லி மெத்தனால் ஒரு மனிதனை முடமாக்கும் என்றால், 15 முதல் 20 மில்லி மெத்தனால் ஒரு மனிதனை பிரேதமாக்கிவிடும்.
தீய முன்னுதாரணம்…
விஷ சாராயத்தைக் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் கலாச்சாரத்தை, மரக்காணம் சம்பவத்தின்போது தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த வரலாற்று நிகழ்வு கள்ளக்குறிச்சி சம்பவத்திலும் தொடர்ந்தது. மொத்தம் 60 பேர் பலியான நிலையில், தலா 10 லட்சம் ரூபாய் வழங்கி, தமிழக அரசு சிறப்பித்துள்ளது.
சோம்பேறிகளாக்கும் திட்டம்
இதை நாம் சொல்வதைவிட, ஐகோர்ட் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதை இங்கே மேற்கோள் காண்பிக்கலாம். ‘‘நூறு நாள் வேலை உறுதித்திட்டம் என்ற பெயரில் பாதி சம்பளம் எனக்கு, மீதி சம்பளம் உனக்கு என்ற கணக்கில் வேலைக்கு செல்பவர்களின் சம்பளத்தில் கிராம இளைஞர்கள் சோம்பேறிகளாக்கப்படுகின்ற்னர்.
கையில் காசு… வேலையும் இல்லை…
பாதி சம்பளம் வாங்கும் இளைஞர்கள் மதுபானக் கடைக்கு சென்று குடிக்கின்றனர். 200 ரூபாய் சம்பளம் கிடைத்தால் 150 ரூபாய் மதுவுக்கு செலவு செய்யமுடியாது. இதனால் மலிவு விலைக்கு ஏதாவது கிடைக்குமா என தேடுகின்றனர். அப்படி மலிவு விலையை தேடிப்போன கூட்டம் தான் கள்ளக்குறிச்சியில் மாண்டுபோய் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது எவ்வளவு பெரிய தீய முன்னுதாரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஆனால், மரக்காணத்தில் சூடு வாங்காத மாடா, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திருந்தப்போகிறது. திமுக அரசு தமிழகத்தின் இருண்ட அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.