புதிய சட்ட சீர்திருத்தங்கள்

இப்போது நடைமுறையில் உள்ள இந்தியன் பீனல்கோடு எனப்படும் ஐபிசி சட்டங்கள் அனைத்தும், இந்தியாவுக்கான பிரத்யேகமான சட்டங்கள் அல்ல என்றும், இவை அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சட்டங்களில் இருந்து, சில பக்கங்களை கிழித்து, ஒட்டி, தைத்து தொகுக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பு என்று பரந்த கருத்து உள்ளது. இது பெருமளவு உண்மையும் கூட..

குப்பைக்கு போன பஞ்சாயத்து நீதி

அரபு முஸ்லீம்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் பாரதத்துக்குள் நுழையும் முன்னர் இங்கு வளமையான அரசாட்சியும், நீதி பிறழாத மாட்சியும் இருந்தது. இதில், கிராமிய பஞ்சாயத்துகள் உடனுக்குடன் நீதி வழங்கின. ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் வருகைக்குப் பின்னர், குறிப்பாக இங்கிலாந்தின் வருகைக்குப் பின்னர், இந்தியர்கள் ஐரோப்பாவில் பெரும் அளவில் பாரியஸ்டர் எனப்படும் சட்டம் பயின்ற வக்கீல்களாக உருவாகினர். நேரு, காந்தி, வல்லபாய்படேல், அம்பேத்கர் என்று ஐரோப்பிய சட்டம் பயின்றவர்களின் எண்ணிக்கையை சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுதப்பட்ட நீதி

எழுதப்பட்டதுதான் நீதி என்ற நடைமுறையை ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் உருவாக்கினர். இதனால், ஐரோப்பிய பாணியைப் பின்பற்றி, சுதந்திர பாரதத்தின் புதிய சட்டங்கள், அரசியலமைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதுவரை பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்தியாவின் பஞ்சாயத்து சட்டங்கள் எல்லாம் குப்பைக்கு போனது.

இரவல் இப்படித்தான் இருக்கும்

பாரத குடியரசுக்கான சட்டங்கள், சட்டமேதை அம்பேத்கர் தலைமையிலான குழுவால் தொகுக்கப்பட்டது. இந்த சட்டங்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் என்று பல நாடுகளின் கலவையால் உருவாக்கப்பட்டது.

இதில், இங்கிலாந்தில் இருந்து பார்லிமென்ட் நடைமுறை,, சட்டத்தின் ஆட்சி, சட்டசபை, ஒற்றைக்குடியுரிமை, அமைச்சரவை, எழுத்துரிமை, பார்லிமென்ட் நடைமறை ஆகியவை பெறப்பட்டது.

அயர்லாந்தில் இருந்து ஜனாதிபதி தேர்தல், ராஜ்யசபா உறுப்பினர் நியமனம், மாநில கொள்கையில் வழிகாட்டுதல் கோட்பாடு ஆகியவை பெறப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டு, பார்லிமென்ட் தலைவர், துணைத் தலைவர் செயல்பாடு, சுப்ரீம்கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் நீக்கம், அடிப்படை உரிமைகள்

நீதித்துறை ஆய்வு

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் முகப்புரை பெறப்பட்டது.
கனடாவில் இருந்து மத்திய அரசின் அதிகாரங்கள், கவர்னர்கள் நியமனம், சுப்ரீம் கோர்ட் அதிகார வரம்பு முறையும், ஆஸ்திரேலியாவிடம் இருந்து லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக் கூட்டம், வர்த்தகம், வர்த்தக சுந்திரம் ஆகியவையும்.

ரஷ்யாவிடம் இருந்து குடிமகனின் அடிப்படை கடமை, நீதியின் லட்சியமும், பிரான்சிடம் இருந்து குடியரசு, கருத்து சுதந்திரம், சமத்தும், சகோதரத்துவம், ஜெர்மனிடம் இருந்து

அவசரநிலையின்போது அடிப்படை உரிமைகள் நிறுத்தம், தென்னாப்பிரிக்காவிடம் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் தேர்தல், அரசியல் அமைப்புத் திருத்தம் மற்றும் ஜப்பானிடம் இருந்து, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகள் ஆகியவை பெறப்பட்டன.

இந்த வகையில், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து பெறப்பட்ட இரவல் சட்டங்களின் தொகுப்பு, இரவல் சட்டப்படிப்பையும், இரவல் வாதாடல் மற்றும் இரவல் நீதிகளையும் பெற்றுக் கொண்டிருந்தது.

நீதிக்கு காலதாமதம்

சரி, இந்திய பீனல்கோடு சட்டங்கள் எப்படிப்பட்டவை? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று கூறியே, ஆயிரம் குற்றவாளிகளும் தப்பிச் செல்லும் வகையில்தான், நம் இன்றைய நீதி பரிபாலன முறை உள்ளது. மிகச் சமீப கால உதாரணங்களாக டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னின்று செயல்பட்ட ஜெகதீஷ் டைட்லர், காமன்வெல்த் ஊழல் நாயகன், பங்குச்சந்தை ஊழல் மன்னன் ஹர்ஷத் மேத்தா, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் என்று தொடங்கி நம் நீதி பரிபாலன முறையின் வேகத்தை தெரிந்து கொள்ளலாம். காரணம், இப்போது பீனல்கோடு சட்டங்களில் உள்ள ஓட்டை, உடைசல்கள் எல்லாம் அடைக்கப்படாமல், வலுவான நீதிக் கட்டமைப்பை உருவாக்க முடியாது என்பதால், நீதிக்கு காலதாமதம் ஏற்படுகிறது.

தமிழகமே சிறந்த உதாரணம்

நீதிப் பரிபாலனத்தின் தோல்விக்கு நம் தமிழகத்தை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும். உதாரணமாக இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் அமைச்சரவையில் இருக்கும் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்குகள், கடந்த சில வாரங்களில் மடமடவென விசாரிக்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரின் வாயுவேக விசாரணை

இதில், வேலூரில் நடந்த பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, வேலூர் மாவட்ட நீதிபதி வசந்தலீலா விசாரித்தார். வாயுவேகம், மனோ வேகத்தைவிட விசாரணை. ஜூன் 6ல் விசாரணை தொடங்கியது. ஜூன் 23ல் எழுத்துப்பூர்வ வாதங்கள் 2 தரப்பிலும் தாக்கலானது.

4 நாட்களில்

விசாரணையின்போது 4 நாட்களில் மட்டும் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 381 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, 266 பக்க தீர்ப்பு பக்கம் தயாரிக்கப்பட்டு, பொன்முடி, அவர் மனைவி உட்பட அனைவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அத்துடன், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜூலை 30ல் ஓய்வும் பெற்றார்.

அதிர்ச்சி

இந்த வேகத்தைக் கண்டு திகைத்த ஐகோர்ட் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், இந்தத் தீர்ப்புத் தொடர்பான வழக்கை சுமோட்டோவாக (தானே முன்வந்து வழக்கு எடுத்தல்) விசாரிக்கத் தொடங்கியுள்ளார். ‘‘சொத்துக்குவிப்பு வழக்கு விசாரிக்கப்பட்ட விதம், நீதித்துறையின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது’’ என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்னும் இந்த வரிசையில் மற்ற அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தூசுதட்டினால், நிலைமை என்னவாகும்?

காலத்துக்கு ஏற்ப நீதி வேண்டும்

இப்போதைய இந்திய சட்டங்களின் ஓட்டைகள் அதிகம் இருப்பதால்தான், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை கையில் எடுத்துக் கொண்டு சுப்ரீம்கோர்ட் வரை படியேறினார். இத்தனைக்கும் கீழ்கோர்ட் தொடங்கி சுப்ரீம்கோர்ட் வரை, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த அத்தனை நீதிபதிகளுக்கும், இந்த மனு தவறென தெரியும். ஆனால், சட்ட வரையறைகள் படி விசாரிக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது.

சட்டங்களும் மாற வேண்டும்

எனவே, இப்படிப்பட்ட சூழல்களில், ஊழல், கொலைக் குற்றவாளிகள், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் எல்லோரும் உடனடியாக தண்டிக்கப்படும் வகையில், கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். எப்படி கால நாகரீகத்துக்கு ஏற்ப பாரதம் மாறியதோ, அதற்கு தகுந்தார்போல், சட்டங்களிலும், நீதி முறைகளிலும் மாற்றம் வேண்டும். இதைத்தான் மத்திய அரசு இப்போது கொண்டு வந்துள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில், இந்த சட்டங்களின் மசோதாக்களை அறிமுகம் செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதுதான் அசத்தலானது.

அமித்ஷாவின் அதிரடி

‘‘நாட்டில் உள்ள குற்றவியல் சட்டங்களில் மறுசீரமைப்பைக் கொண்டு வரும் வகையில், இந்த சட்டமசோதாக்கள் தாக்கலாகிறது. 19ம் நூற்றாண்டின் சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய மசோதாக்கள் தாக்கலாகின்றன. தேசத் துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. அதை நீக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

ஐபிசி, குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சக்‌ஷயா ஆகிய பெயர்களில் சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

பாரதத்தில், 1860 முதல் 2023 வரை, குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்கள்படி செயல்பட்டது. ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 மசோதாக்களும் பாராளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இந்த 3 சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும்’’ என்றார்.

தண்டனைகளில் என்ன மாற்றம் இருக்கும்?

1860 இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா மசோதா 2023

1898 குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு பதிலாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மசோதா,

1872 இந்திய சாட்சிய சட்டத்துக்கு பதிலாக, பாரதிய சாக்ஷ்யா மசோதா தாக்கலாகியுள்ளது.

இந்த சட்டங்களுக்கு 18 மாநிலங்கள், 6 யூனியன்கள், சுப்ரீம் கோர்ட், 16 ஐகோர்ட்கள், 5 சட்ட அகாடமிகள், 22 சட்டப் பல்கலைக்கழகங்கள், 142 எம்பிக்கள், 270 எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள், புதிய சட்டங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த சட்டங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 4 ஆண்டு தீவிர விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, 158 ஆலோசனைக் கூட்டங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கலந்து கொண்டார்.

இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தச் சட்டத்தில் மொத்தம் 313 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இப்போது அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்குள் எவரும் நீதியைப் பெறமுடியும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் போலீசார் தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது.

ஒருபுறம், தேசத்துரோகம் போன்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மறுபுறம், பெண்களை ஏமாற்றுதல் மற்றும் கும்பல் கொலைகள் போன்ற கொடூரமான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, இப்போது நடைமுறையில் உள்ள கிரிமினல் புரோசிஜர் கோடுக்கு பதிலாக வரவுள்ளது. இப்போது 533 பிரிவுகள் உள்ளன, பழைய சட்டத்தின் 160 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக வரும் பாரதிய நியாய சந்ஹிதா மசோதா 2023, முந்தைய 511 பிரிவுகளுக்குப் பதிலாக 356 பிரிவுகளைக் கொண்டிருக்கும், 175 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய சாட்சிய சட்டத்திற்குப் பதிலாக வரும் பாரதிய சாக்ஷ்யா மசோதா 2023, முந்தைய 167க்குப் பதிலாக இப்போது 170 பிரிவுகளைக் கொண்டிருக்கும், 23 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 1 புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் 5 ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்னணு அல்லது டிஜிட்டல் பதிவுகள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினிகள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், எஸ்எம்எஸ், இணையதளங்கள், இருப்பிடச் சான்றுகள், மின்னஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவணங்களின் வரையறையை சட்டம் விரிவுபடுத்துகிறது.

எப்ஐஆர் தொடங்கி முதல் வழக்கு குறிப்பேடுவரை, வழக்கு குறிப்பேடு முதல் குற்றப் பத்திரிகை வரை, மற்றும் குற்றப் பத்திரிகை முதல் தீர்ப்பு வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் கைப்பற்றும்போது வீடியோ எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது வழக்கின் ஒரு பகுதியாக இருக்கும். மற்றும் அப்பாவி குடிமக்களை சிக்க வைக்காது, காவல்துறையின் அத்தகைய பதிவு இல்லாமல் எந்த குற்றப்பத்திரிகையும் செல்லாது.

குற்றங்கள் நடந்த இடத்தில் தடயவியல் குழுவின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைகள் கிடைக்கும் வகையில் போலீசாரிடம் அறிவியல் சான்றுகள் கிடைக்கும், அதன் பிறகு கோர்ட்டில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ முதல் தகவல் அறிக்கை அங்கீகரிக்கப்படும், குடிமக்களின் வசதிக்காக, இந்த முயற்சியின் மூலம், குடிமக்கள் தங்கள் காவல் நிலையப் பகுதிக்கு வெளியேயும் புகார்களை அளிக்க முடியும்.

முதன்முறையாக இ – எப்ஐஆர் வழங்குதல் சேர்க்கப்படுகிறது, ஒவ்வொரு மாவட்டமும் மற்றும் காவல் நிலையமும் ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்கும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் அறிக்கையின் வீடியோ பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புகாரின் நிலையை 90 நாட்களுக்குள்ளும், அதன்பின் 15 நாட்களுக்கு ஒருமுறையும், புகார்தாரருக்கு காவல் துறையினர் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் பேச்சைக் கேட்காமல் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை வழக்கை எந்த அரசாங்கமும் திரும்பப்பெற முடியாது, இது குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.

சிறிய வழக்குகளில் சுருக்க விசாரணையின் நோக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது, இப்போது 3 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றங்கள் சுருக்க விசாரணையில் சேர்க்கப்படும், இந்த விதியுடன் மட்டும், அமர்வு நீதிமன்றங்களில் 40 சதவீதம் வழக்குகள் முடிவடையும்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 90 நாட்கள் கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் சூழ்நிலையைப் பொறுத்து, நீதிமன்றம் மேலும் 90 நாட்களுக்கு அனுமதி அளிக்கலாம், விசாரணையை 180 நாட்களுக்குள் முடித்து, விசாரணையைத் தொடங்க வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை நீதிமன்றங்கள் வழங்க வேண்டும், வாதங்கள் முடிந்து 30 நாட்களுக்குள், நீதிபதி தீர்ப்பை வழங்க வேண்டும், இது முடிவை ஆண்டுக்கணக்கில் நிலுவையில் வைத்திருக்காது. அத்துடன், ஆர்டர் 7 நாட்களுக்குள் ஆன்லைனில் கிடைக்க வேண்டும்.

அரசு ஊழியர் அல்லது போலீஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 120 நாட்களுக்குள் அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் அது அனுமதிக்கப்பட்ட அனுமதியாகக் கருதப்பட்டு விசாரணை தொடங்கப்படும்.

அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ஒரு விதி கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைக்கான புதிய விதியும் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

திருமணம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, தவறான அடையாளம் போன்ற தவறான வாக்குறுதிகளை முன்வைத்து பாலியல் பலாத்காரம் செய்தல் முதல் முறையாக குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான குற்றங்கள், கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை ஆகிய மூன்று விதிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன், பெண்களிடமிருந்து மொபைல் போன்கள் அல்லது செயின் பறிக்க எந்த ஏற்பாடும் இல்லை, ஆனால் இப்போது அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு நிரந்தர இயலாமை அல்லது மூளைச்சாவு ஏற்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றத்தைச் செய்பவருக்கு தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல குற்றங்களில் அபராதத் தொகையை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசியல் லாபத்துக்காக மன்னிப்பைப் பயன்படுத்திய பல வழக்குகள் உள்ளன, இப்போது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியும், ஆயுள் தண்டனை குறைந்தபட்சம் 7 ஆண்டுகள், மற்றும் 7 ஆண்டுகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், எந்த குற்றவாளியும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

தேசத்துரோகச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும், ஏனென்றால் இந்தியா ஜனநாயக நாடு மற்றும் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது.

பயங்கரவாதத்தின் வரையறை அறிமுகம், இப்போது ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாதம் மற்றும் இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் குற்றங்கள் முதல் முறையாக இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

வழக்குகளில் குற்றவாளிகள் ஆஜராகாத நிலையில், ஒரு செஷன்ஸ் கோர்ட் நீதிபதியால் தப்பியோடியவர் என்று அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் இல்லாத நேரத்தில் விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால், அவர் உலகில் எங்கு மறைந்திருந்தாலும், தப்பியோடியவர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமானால், அவர் இந்திய சட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்று பல அதிரடிகளை இந்த மசோதாக்களில் அறிமுகம் செய்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் அமித்ஷா