பாதை தெரியாமல் குழம்பும் பழனிசாமி

தமிழக அரசியலில் இப்போது திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சி என்றால், அது சாட்சாத் அதிமுகவைத்தான் குறிக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சரியான தலைமை இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த அதிமுகவுக்கு, இப்போது பொதுச் செயலாளர் அந்தஸ்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்கார்ந்திருந்தாலும், அதிமுகவின் அரசியல்பாதை இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. காரணம், சிறுபான்மையினருக்கு வெண்சாமரம் வீசும் பழனிசாமியின் அரசியல் நகர்வுகள்தான்.

தப்பிப்பிழைத்த பழனிசாமி?

தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுக்கு, 2016 சட்டபைத் தேர்தல் கண்டனம் எனலாம். தேர்தலில் வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவியில் இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் அதே ஆண்டு டிசம்பரில் காலாமானார். அவரது இடத்தில் முதல்வர் பதவியை வகித்த ஓ.பன்னீர்செல்வத்தை, உடன்பிறவா தோழியாக வலம் வந்த சசிகலா, அமமுகவை உருவாக்கிய தினகரன் ஆகியோர் அசைத்தனர்.

சசிகலாவின் நெருக்கடியால் பதவியை துறந்த பன்னீர், ஜெ. சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார். அதேநேரத்தில் கூவத்தூர் ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்த பழனிசாமியை, தனக்கு விசுவாசமாக இருப்பார் என்ற எண்ணத்தில் முதல்வர் பதவியில் அமர வைத்து, அழகு பார்த்தார் சசிகலா. ஆனால், முதல்வர் பதவியை பெற்ற பழனிசாமி, அதை தக்க வைத்துக் கொள்வதற்கு படாதபாடு பட்டார்.

மிரட்டிய திமுக,
அரவணைத்த டில்லி

பதவி இழந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவின் 15 எம்எல்க்கள் ஒருபுறம், ஒரு வாரத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம், ஒரு மாதத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம், அடுத்த நாளே ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று உதார் விட்டுக் கொண்டிருந்த அப்போதைய எதிர் கட்சித் தலைவர், இப்போதைய முதல்வர் ஸ்டாலினின் குடைச்சல் மறுபக்கம் என்று பழனிசாமியால், ஒருநாள் கூட நிம்மதியாக முதல்வர் நாற்காலியில் உட்கார முடியவில்லை.

எப்போது என்ன நடக்கும் என்று நிலையின்றி தவித்த பழனிசாமிக்கு, பிரதமர் மோடியின் தலைமையிலான நிர்வாகம் அரவணைப்பு செய்து கொண்டிருந்தது. எனினும், ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம் காரணமாக, முதல்வர் பழனிசாமி வேண்டிக் கொள்ளாத தெய்வம், இல்லை, போகாத கோயில் இல்லை. அவரது வலது கையில் அணிவகுக்கான வண்ணக் கயிறுகளும் இல்லை. அந்தளவுக்கு தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள கோயில்கள், வழிபாடுகள், மந்திரித்த கயிறுகளுடன் பழனிசாமி வலம் வந்தார்.

இந்து பண்டிகைகளும் பழனிசாமியும்

முதல்வர் பதவியில் இருந்தவரை, அதாவது மத்தியில் பாஜ ஆதரவுடன் முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர்ந்தவரை, இந்துக்களுக்கு ஆதரவானவர் போல் நடந்து கொண்டிருந்தார். பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது தொடங்கி, அறநிலையத்துறை நிர்வாகம் வரை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார். பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை என்று அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்வதில் பழனிசாமி தவறவில்லை. அதேநேரத்தில் பிற மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி, தன்னை மதச்சார்பற்ற முதல்வராக அடையாளப்படுத்திக் கொண்டார்.

தேர்தல் தோல்வியும், பாதைமாறிய பழனிசாமியும்

தமிழகத்தில் 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக 13 கட்சி கூட்டணியுடன் வெற்றிபெற்று, ஆட்சியில் அமர்ந்தது. முதல்வராக இருந்த பழனிசாமி எதிர்கட்சித் தலைவரானார். தமிழகத்தில் கட்டமைப்பு செய்யப்பட்ட பாஜ மதவாத கட்சி என்ற பிரச்சாரம் காரணமாக, சட்டசபைத் தேர்தலில் தாங்கள் தோற்றதாக அதிமுகவில் மெல்ல மெல்ல சலசலப்பு கிளம்பத் தொடங்கியது. இதனால், உள்ளாட்சித் தேர்தல்களில் கடைசி நேரத்தில் தனித்துப் போட்டி என்று அறிவித்த அதிமுக, கூட்டணி முறிவுக்கான தன் அட்சாரத்தை அப்போதே மெல்ல தூபம் போடத் தொடங்கியது. இதன் பின்னர், நேரடியாக பாஜ தலைவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்ட எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, கட்சியில் பொதுச் செயலாளர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டும், தேர்தல் கமிஷனும் அங்கீகரித்ததும், பழனிசாமி தன் சுய ரூபத்தை காண்பிக்கத் தொடங்கினார்.

வரம்பு மீறிய ஜெயக்குமார்

பாஜவுடனான கூட்டணியை துண்டிப்பதில் சாதுர்யமாக செயல்பட்ட பழனிசாமி, நேரடியாக எதுவும் பேசாமல் தன் ஊதுகுழலாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பேச வைத்தார். அவருக்கு பக்கபலமாக கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ என்று ஒவ்வொருவரும் பாஜவை எதிர்த்து கருத்துகள் வெளியிடத் தொடங்கினர். கடந்த செப்டம்பர் 25ம் தேதி சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர், பாஜவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, அதிமுக பொதுச் செயலாளராக அறிவிப்பு செய்தார் பழனிசாமி.

கூட்டணி வேண்டாம்,
நாடகம் போடலாமா?

தமிழகத்தில் ஜெ., இருந்தவரை இந்துக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்துவந்தனர். மதமாற்ற சக்திகள் அடக்கி வாசித்தனர். ஆனால, பழனிசாமி பதவிக்கு வந்ததும், இந்துக்களின் எதிரியான திமுக, பழனிசாமிக்கு எதிரான ஒரு கட்டமைப்பு உருவாக்கும் பணியில் பாஜவை மதவாதக் கட்சி என்று மார்க்கெட்டிங் செய்வதில் கவனமாக இருந்தது. இந்த மார்க்கெட்டிங் உத்தியில் வீழ்ந்த பழனிசாமி, பாஜவை கழற்றிவிட்டால், தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டு அப்படியே அதிமுகவுக்கு திரும்பும் என்று கணக்குப்போட்டார்.

அவரது அரசியல் கணக்கு எல்லாம் ஒரு ஓரமாக இருக்கட்டும். ஆனால், அதிமுகவில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறிப்பாக இந்துக்களை ஒதுக்கிவிட்டு, இப்போது பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கும் நாடகம் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பாஜ கூட்டணியில் இருந்தவரை, தன் முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தவரை அவரை போகாத கோயில் இல்லை. வலது கையில் கட்டிக் கொள்ளாத கயிறுகள் இல்லை. பிரஸ் மீட் என்றாலே, நெற்றியில் சிறிய திருநீற்றுக் கிற்றுடன் ஆஜராகிவிடுவார். ஆனால், இப்போதைய நிலவரம் என்ன?

மதவாத கட்சியான பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்ற நிலையில், சிறுபான்மை மக்களை கவர்வதற்காக தன் பிராண்ட்டாக இருந்த நெற்றியில் திருநீற்று கீற்றை அழித்துவிட்டார். கையில் இருந்த கயிறுகளின் எண்ணிக்கை மாயமாகிவிட்டது. முழுக்க முழுக்க நீரில்லாத நெற்றி பாழ் என்பதுபால், பாழான நெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறுபான்மையினரை தாஜா செய்ய முடியுமா?

கடந்த லோக்சபா தேர்தலில் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை இழந்ததால் தோற்றுவிட்டதாக பழனிசாமி கருதிக் கொண்டிருக்கிறார். இதனால், வரும் லோக்சபா மற்றும் அதற்கு அடுத்த சட்டசபைத் தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டுகளை அப்படியே திருப்புவதற்காக நீரில்லாத நெற்றியுடன், சிறுபான்மையினர் விழாக்களில் வண்டியேறிக் கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டம் மேல்விசாரம் பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்த 350 வீடுகள் ஐகோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டது. இதில், 200 குடும்பத்தினர் முஸ்லிம்கள். நநீர் நிலைகளை ஆக்கிரமிப்பதே குற்றம். இதில், அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் தேடிக் கொடுக்க வேண்டும் என்று பழனிசாமி அறிக்கை விட்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதைவிட, கொடுமை சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு இயேசுவின் ஆசியால், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும், தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் பழனிசாமி முழங்கியுள்ளார். இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறிச் சென்றுவிட்டாலே அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் வரும்போது, பழனிசாமியின் இந்த இந்துமத விரோத அரசியல், இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தவர்களின் இடஒதுக்கீடு உரிமைக்கு வேட்டு வைப்பதாக உள்ளது.

உண்மையில் அதிமுகவை தோற்கடித்தது யார்?

லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு எதிரான ஒரு பிம்பத்தை கட்டமைத்து வெற்றி பெற்றதாக திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் பகிரங்கமாகவே ஒரு நேர்முகத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், பழனிசாமி தவறான கணக்குகளை போட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் பழனிசாமியை தோற்கடித்தது தமிழகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்தான். கிட்டத்தட்ட 11 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் 50 லட்சம் ஓட்டுகள் சிந்தாமல், சிதறாமல் திமுகவுக்கு சென்றது. காரணம், திமுகவின் தேர்தல் வாக்குறுதி.

கரோனா காலத்தில், தமிழகம் தவிர, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை சம்பளப் பிடித்தம் செய்தன. ஆனால், பழனிசாமியின் அரசுதன் ஊழியர்களுக்கு நூறு சதவீத சம்பளத்தை அப்படியே வழங்கியது.
இந்த விசுவாசத்தை மறந்த அரசு ஊழியர்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சாத்தியமில்லாத வாக்குறுதியை அறிவித்ததும், அதை நம்பி திமுகவுக்கு அப்படியே ஓட்டுப்போட்டனர். இதில், அதிமுக 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது. இதுதான் அரசியலில் நிகழ்ந்த நிதர்சன உண்மை.

ஏமாந்த பழனிசாமி

பாஜவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டால், இப்போது திமுக வசம் உள்ள 13 கட்சிகளில் சில கழன்று கொண்டு, நம்முடன் கை கோர்க்கும் என்று பழனிசாமி நினைத்தார். ஆனால், இதற்கு மாறாக, காங்கிரஸ் தலைமையில் திமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், தமுமுக என்று 21 கட்சிகள், இந்தியா கூட்டணியில் ஒட்டிக் கொண்டுள்ளன. தமிழகத்தில் இப்போது ஆளும் கட்சி மீதான அதிகரிக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக, கடந்த தேர்தலைப் போலவே, வரும் தேர்தலிலும் திமுக பல நூறு கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுக்கத் தயாராக உள்ளது. இதனால், திமுகவின் பணபலத்தை, நம்பியுள்ள தமிழகத்தின் அரசியல் கட்சிகள், அதிமுகவை இப்போது நட்டாற்றில் தவிக்கவிட்டுள்ளன. பாஜவை முறித்துக் கொண்டால், தமிழக அரசியலில் முன்னேறலாம் என்று கணக்குப்போட்ட பழனிசாமி, இப்போது முட்டுச் சந்தில் சிக்கிக்கொண்டதுபோல் தவிக்கிறார் என்பதே உண்மை..