ஒன்றிய அரசு என்ற சொல்லாடலின் பின் இருக்கும் உள்நோக்கம் என்ன??
அதன் பின்னே ஒளிந்திருக்கும் கட்டமைப்பு சதி என்ன??
வைகோவின் ஆரம்பம்
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினைவாதிகளின் பிரதிநிதி வைகோ இந்தியா என்ற பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னார்.
தற்போதைய திமுக கட்சி அரசு மற்றும் அவர்களின் ஆதரவு ஊடகங்கள் யாவும் ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது.
கேட்டால் யூனியன் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா என்ற சொல்லை தான் நாங்கள் தமிழாக்கம் செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.
இது பழைய அழுகிய முகம்
இந்த ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்துவதும் கடந்த ஆண்டு சட்டசபையில் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் கோஷம் தனை நீக்கி அதை தங்கள் ஆதரவாளர்கள் மூலம் கொண்டாடியதும் திமுகவின் தனி தமிழ் நாடு என்ற பிரிவினையின் அரசியலின் அழுகிய முகமே தவிர வேறொன்றும் இல்லை.
அமெரிக்காவிற்கு பொருந்தும்…
பல மாகாணங்கள் ஒன்றிணைந்து உருவானது அமெரிக்க ஐக்கிய நாடு. அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் என்று பொருள் படும் ஒன்றியம் என்ற சொல் பொருந்தும். (United States)
இந்தியா ஒரு சாம்ராஜ்யம்
நம் பாரதம் அப்படி அல்ல! இந்திய சமஸ்தானம் என்ற குடையின் கீழ் இங்கிருந்த சுதேசி சமஸ்தானங்கள் ஒருகுடையின் கீழ் இணைந்த மஹா சாம்ராஜ்யம்.
பிரிட்டிஷ் காலத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பல மாகாணங்கள் தான் சுதந்திரம் கிடைத்த பிறகு கூட நிர்வாக ரீதியாக தொடர்ந்தது.
மொழிவாரி பிரிந்தது…
நிர்வாக வசதிக்காக மொழி வாரி மாநிலங்களாக பிரித்த போது 60 களின் இறுதியில் தான் மதராஸ் மாகாணம் என்று இருந்த நிலப்பரப்புகள் மொழி வாரியாக தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் என்று பிரிந்தது.
தமிழ்நாடு எப்போது தனிநாடாக இருந்தது
தமிழகம் என்ற மாநிலமே சுதந்திரம் கிடைத்த கால் நூற்றாண்டு காலம் கழித்து தான் பிறந்தது அப்படி இருக்க தமிழ்நாடு எப்போது தனி நாடாக இருந்தது ? எப்படி இருக்கவும் முடியும்?
இராமநாதபுர வாரிசுகளின் வாக்குமூலம்….
இவர்களின் ஒன்றிய அரசு கோஷத்திற்கு இராமநாதபுரம் சமஸ்தான வாரிசுகள் கொடுத்த வாக்குமூலத்தை கவனிக்க வேண்டியது அவசியம். எங்கள் முன்னோர்கள் இணைந்தது இந்திய சமஸ்தானத்தோடே அன்றி தமிழகம் என்ற மாநிலத்தோடோ வேறு எந்த மாநிலம், மாகாணம், அல்லது மாவட்டத்தோடு இல்லை என்று ஆதாரங்களோடு அறிக்கை கொடுத்தார்கள். ஆனால் அதற்கு இன்று வரை திக திமுக மற்றும் ஆதரவாளர்கள் பதில் குரல் எழுப்பவில்லை…
விஷம பிரச்சாரம்
இந்திரா காந்தி கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்த விவகாரத்தில் இராமநாதபுரம் சமஸ்தான வாரிசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் என்று அனுமதி வாங்காத வகையில் சர்வதேச நடைமுறைகள் பின்பற்ற வில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
ஆனால் தேச நலன் கருதி பிரதமர் இந்திரா காந்தி எடுத்த முடிவிற்கு அதே தேச நலன் கருதி இராமநாதபுரம் சமஸ்தான வாரிசுகள் இன்று வரை ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
ஆனால் இதில் இருக்கும் சட்டபூர்வமான உண்மைகளையும். நடைமுறைகளையும் மறைத்து வைத்து கருணாநிதி காலம் முதல் தமிழ் நாடு தனிநாடு அதை இந்திய அரசு ஆக்கிரமிப்பு செய்து விட்டது என்றே விஷம் கொண்ட விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர் திராவிட கோஷ்டியினர்.
மாநிலமே இல்லையே!!!
அதனால் இவர்களின் ஒன்றியம் என்ற சொல்லாடலின்படி பார்த்தால் தமிழ் நாடு என்ற மாநிலமே இல்லை.
இங்கிருக்கும் நிலப் பரப்பு என்பது,
ஒன்று இந்திய அரசின் ஒரு மாநிலமான தமிழகம்
இல்லையேல் இந்திய சமஸ்தானத்தோடு இணைந்த சித்தூர் ஆற்காடு புதுக்கோட்டை இராமநாதபுரம் சமஸ்தானங்களின் நிலப்பகுதிகள் மட்டுமே.
அப்படி பார்த்தால், தமிழ் நாடு என்ற மாநிலமே இல்லை எனும் போது தமிழ் நாடு மட்டும் எங்கே இருக்கிறது ?
மதராஸ் மாகாணம் தான்…
60 களுக்கு முன் இருக்கும் ஆவணங்களில் மதராஸ் மாகாணம் என்று தான் குறிப்பு இருக்கும்
சுதந்திரத்திற்கு முன் பின் இருக்கும் ஆவணங்கள் எல்லாம் இந்திய சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட இந்த சமஸ்தானம் இந்த ஜில்லா என்று தான் இருக்கும்.
மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு 70 களுக்கு பிறகு தான் தமிழ் நாடு என்ற குறிப்பே இருக்கும். தமிழ்நாடு என்ற பெயரே 1969 இல் சூட்டப்பட்டது தான்.
தமிழகம் என்பதே சரியானது…
இந்த தமிழ்நாடு என்ற பெயரே முரண்பட்ட சொல் என்று அன்றே பலரும் இந்தப் பெயரை எதிர்த்து இருந்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டுக்குள்ளே இன்னொரு நாடு என்பதே முரண்பட்ட சொல் தானே. இந்த முரண்பட்ட பெயரை முன்மொழிந்ததற்கு பின்னே அன்றும்
தனித்தமிழ்நாடு என்ற அரசியல் இருந்தது. ஆதலால் தமிழகம் என்பதே சரியான சொல் பிரயோகமாக இருக்கும்.
அப்படி இருக்க எங்கே இருக்கிறது தனி தமிழ் நாடு ? அப்படியானால் எப்படி வரும் ஒன்றிய அரசு ?
மிஷனரிகளும் பிரிவினை வாதிகளும்
ஆனால் கிறித்தவ மிஷனரிகளின் மதமாற்றம் மற்றும் இந்தியாவிலிருந்து தமிழகப் பிரிவினை இவ்விரண்டும் தான் திக திமுக வின் அரசியல் இலக்கு. இவர்களுக்கு இதைத் தவிர வேறேதும் குறிக்கோள் இல்லை. இந்து விரோத சக்திகள் மட்டும் அன்று, தேசவிரோத சக்திகள் என்றுரைப்பதே சரி.
தனி தமிழ் நாடும் இலங்கையும்
இவர்களின் நோக்கம் பிரிவினையை இங்குள்ள மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்து பிரிவினையை பயிர் போல் வளர்த்தெடுத்தால் மட்டுமே இவர்களின் தனித் தமிழ் நாடு இலக்கை அடைய முடியும்.
அதன் தொடக்கம் தான் அண்ணா தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்! மொழிப்போர் என்ற பிரிவினை அரசியல்.
அதை கருணாநிதி 87-89 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு என்ற பெயரில் தமிழீழ ஆதரவு டெசோ மாநாடு என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினார்.
அந்த டெசோ மாநாடு தமிழீழ வரைபடத்தில் இலங்கை ஈழ பகுதிகளோடு தமிழ் நாடு கூட அடக்கம்
இன்றளவும் நாடு கடந்த தமிழீழ மாநாட்டில் அந்த வரைபடம் உண்டு இங்குள்ள தமிழ் தேசிய அமைப்புகளின் அதிகார பூர்வமாக வரைபடமும் அதை உறுதி செய்கிறது.
நாடு கடந்த தமிழ் ஈழ் அரசு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் தமிழகத்தில் இருக்கும் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டியவர்களே.
அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நாடு கடந்த தமிழீழம் என்ற அரசாங்க மாநாட்டில் இந்திய பாஸ்போர்ட்டோடு வெளிநாடு போய் கலந்து கொள்கிறாரகள்.
தமிழ் தேசிய வாதிகளா??
அவர்கள் அனைவரும் திமுக ஆதரவு அரசியல் நிலைப்பாடு உள்ளவர்களே. இவர்கள் அனைவரும் தமிழகத்தை இந்திய தேசியத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற இலக்கில் பிரிவினை வாத அரசியல் செய்பவர்களே. இவர்களுக்குப் பெயர் தான் தமிழ் தேசிய வாதிகள்.
ஜெய் ஹிந்த் மறுப்பு…
தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்ற பெயரில் தனி தமிழ் நாடு என்ற பிரிவினையை முன் எடுக்கிறது. அதற்கு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் பயன்படுத்திய ஒன்றிய அரசு ஜெய் ஹிந்த் மறுப்பு கோஷமே சாட்சியம்.
இதை இங்குள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கவே தங்களின் ஆதரவாளரகள் மற்றும் ஆதரவு ஊடகங்கள் வாயிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை ஆழமாக பதிய செய்து வருகிறது.
ஊடக கூட்டாளிகள்
உண்மை வரலாறு சட்ட பூர்வமான நடைமுறை என்று வெளிக்கொணர வேண்டிய எதிர் கட்சிகள் ஊடகங்கள் யாவும் இங்கு திமுக வின் பிரிவினைவாத அரசியலுக்கு கூட்டாளிகளே.
பாஜக மற்றும் இந்து அமைப்புகள்
சிலர் நேரடியாக பலர் மறைமுக ஆதரவாளர்கள். அவ்வளவு தான். அதனால் தான் திமுக வின் ஒன்றிய அரசு என்ற பிரிவினை கோஷத்திற்கு இங்கு ஆர்எஸ்எஸ் பாஜக அதன் பரிவாரங்கள் தவிர வேறு யாரும் இதுவரை பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை.
ஒன்றிய அரசு என்ற விஷ முள்
ஒன்றிய அரசு என்ற சொல்லின் மூலம் இங்குள்ள தமிழ்நாடு என்று நிலப்பரப்பு இந்திய அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது அதை இந்திய அரசிடம் இருந்து மீட்க வேண்டும். அதற்காக இந்திய அரசை எதிர்த்து போராட வேண்டும் என்ற மனநிலையை இங்குள்ள இளைய சந்ததிகள் மனதில் வளர்த்து வருகிறது. இது காஷ்மீர் தீவிரவாதத்திற்கு இணையானது என்று சொன்னால் மிகையாகாது.
உண்மை வரலாறு அறியாத மாணவர்கள்
உண்மை வரலாறு அறியாத மாணவர்களும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்குள்ள ஊடகங்கள் பிரச்சாரத்தில் தவறாக வழி நடத்தப்படும் மக்களும் இவர்களின் இந்த பிரிவினையை உணராமல் வீழ்ந்து போனதன் விளைவே இங்கு இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த காரணம்.
திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஒன்றிய அரசு என்ற சொல் தனி தமிழ் நாடு என்ற பிரிவினையின் கோஷமே.
மத்திய அரசு என்பதற்கு பதில் ஒன்றிய அரசு என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் சொல்வது இந்திய தேசத்தின் இன்னோர் பிரிவினைக்கான முன்னோட்டமே. ஒன்றிய அரசு என்னும் வார்த்தையை பிரயோகம் செய்பவர்கள் அனைவரும் தேசத்தை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத சக்திகள் மற்றும் தேச துரோகிகள் என்பதையும் திடமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
இதனை தமிழர்கள் உணர்ந்து முடிவெடுக்கவேண்டிய அவசரதருணமிது ! தேசியவாதி…