நடை பழகலாம் வாங்க

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி, இன்றைக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் மாறிவிட்டது. காரணம், மாறிக் கொண்டிருக்கும் இயந்திரத் தனமான உலக வாழ்வியல் முறைக்கு தகுந்தார்போல், நம்மை அறியாமலேயே நம்மை நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நேரத்தை மிச்சம் செய்வதாக கூறி போக்குவரத்துத் தொடங்கி, வீட்டில் சமையல் அறை வரை எல்லாம் மாற்றம்தான். இந்த மாற்றத்துக்குத் தகுந்தார்போல் நம் வாழ்வியல் முறைகள் மாறியிருக்கிறதா? இதை யாரும் நொடியும் யோசிப்பதில்லை. காரணம், உட்கார்ந்து யோசிப்பதற்கான நேரத்தை யாரும் ஒதுக்குவதும் இல்லை.

உணவியல் மாற்றம்

கடந்த 40 ஆண்டுகளில் சமூக வாழ்வியல் மாற்றம் என்பது, நீங்கள் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மாறிவிட்டது நிகழ்காலத்தில் நீங்கள் ஏற்க மறுக்கும் நிஜங்களில் ஒன்றாகிவிட்டது. இன்றைக்கு 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும், அல்லது அந்த வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் நபர்களைத் தேடி பேசினால், சமீபத்திய சில 10 ஆண்டுகளின் மாற்றங்களை அவர்கள் உங்களுக்கு அவர்கள் பட்டியலிடுவார்கள்.

விசேஷ நாட்கள், விசேஷ வீடுகளில் மட்டுமே கிடைக்கும் என்று நிலையில் இருந்த இட்லி, பொங்கல், பூரி வகையறாக்கள் இன்று வீடுகளில் நித்தமும் உணவாகிவிட்டது. தினமும் காலை, பகல், இரவு உணவு என்று பார்த்து பார்த்து செய்யும் நவீன டெடிகேஷன் இல்லத்தலைவிகள் இன்று அதிகம். இவர்களுக்காகவே யூ டியூப் சேனல்கள் வகை வகையான உணவுகளை வீடியோவாக்கி, பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.

கை தேர்ந்த இல்லத் தலைவிகள் இவற்றை நேர்த்தியான உணவாக்கி, அசத்துகின்றனர். பதம் தவறினால், அந்தக் குடுமபத்தினர் எல்லாம் பரிசோதனை கூட எலிகளாகும் பரிதாபம் நிகழ்கிறது.

உளவியல் மாற்றங்கள்

உணவியல் மாற்றத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், உளவியல் மாற்றங்களும் இன்றைய தலைமுறையில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, 15 முதல் 20 ஆண்டுகளில் டிவியின் ஆதிக்கத்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் செல்போன்களின் ஆதிக்கத்தாலும், சமூகத்தில் மிகப் பெரிய அளவில் உளவியல் மாற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மன உளைச்சல், இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பதால் உடல் உபாதைகள், நீண்ட நேரம் டிவி, செல்போன்களை பார்ப்பதால் கண் விழித்திரைகள் பாதிப்பு என்று பொதுவான நடைமுறை சிக்கல்களை அதிகம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

தவிர, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவு செல்போன்களில் சமூக வலைத்தள பக்கங்களில் நேரம் செலவிடுவதால், கல்வியில் கவனம் இல்லாதது, பொறுமை இன்மையின்மை, கவனச்சிதறல் என்று பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். அதிகப்படியான டிவி சிரீயல்களை பார்க்கும் பெண்கள், தங்களை அறியாமல், அவற்றுக்கு அடிமையாகி, தொடர்களின் எதிர்மறை தாக்கங்களை தங்களுக்குத் திணித்து, தங்களின் இயல்பான குண நலன்களை இழந்து, எதிர்பாராத வகையில் உளவியல் ரீதியான சிக்கல்களை சந்திக்கின்றனர். இதில், இளையோர் முதியோர் என்ற வேறுபாடு இல்லை.

மெல்ல தலையெடுக்கும் பாதிப்பு

உணவியல் மாற்றத்தால் போஷாக்கு உணவு நுகர்வு சமூகத்தில் மெல்ல அதிகரித்துள்ளது உண்மை. இதைவிட என்னதான் வீட்டில் சுவையான உணவுகள் பார்த்து பதம், பக்குவம் செய்து கொடுத்தாலும், ஓட்டல்களில் சாப்பிடும் உணவுக் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதுவும் நடந்து போக சிரமப்படும் சோம்பேறிகளுக்காகவே வீடு தேடி உணவை வினியோகம் செய்யும் செயலிகள் வந்துவிட்டது. இதனால் அதிக சுவையான, கொழுப்புச்சத்து நிறைந்த, எண்ணைப் பதார்த்தங்கள் என்று துரித உணவுகளை வீடுகளுக்கே வரவழைத்து சாப்பிடும் வழக்கம் மிகமிக அதிகரித்துள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை உட் கொண்டால், அதற்கேற்ற உடற்பயிற்சியும் வேண்டும். ஆனால், நடப்பதற்கே சோம்பேறித்தனம் காண்பிக்கும், இன்றைய சமூகத்தினர் இதை எந்தளவுக்கு சீரியசாக எடுத்துக் கொள்கின்றனர் என்று தெரியவில்லை. பணியிடச்சூழல், பணி நெருக்கடியால் உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்று சொன்னாலும், வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் மனம் இன்னமும் நம் சமூகத்தில் வரவில்லை. மேற்கு நாடுகளில் உணவே மருந்து என்பதை உணர்ந்து, உழைப்புக்கு ஏற்ற உணவு, உடற்பயிற்சி என்று மாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நம்
ஆட்கள் உடற் பயிற்சியைவிட்டு, உணவுக் கலாச்சாரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், இளம் வயதில் சிறுநீரகம், இதயம் பாதிக்கப்படுவதுடன், உடல் எடை அதிகரிப்பாமல் மூட்டு வலிப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

எளிய பயிற்சி எப்போதும் நலம்

வாழ்க்கையை ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால், இப்போதைய நடைமுறை வாழ்க்கையில் சில சிறிய மாற்றங்களை, மனதில் திணித்துக் கொண்டால் போதும். டாக்டர்களை நாடிச் செல்வதை குறைத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில், இன்றைய சூழலில் டாக்டர்கள் இல்லாமலும் வாழ்க்கையை ஓட்டமுடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, தினமும் காலையில் சாணம் கரைத்து வாசல் தெளிக்கும் பழக்கம் இன்றைய பெண்கள் மத்தியில் குறைந்துவிட்டது. ஆனால், பலரும் சலித்துக் கொள்ளும் விஷயம், ‘காலையில் எழுந்ததும் கைகளில் மதமதப்பு, மணிக்கட்டு வலிக்கிறது’என்பதுதான்.

இது நம் பாரம்பரியத்தை மறந்ததின் விளைவுதான். காரணம், சாணம் கரைத்து தெளிப்பது என்பது நம் உடற் பயிற்சியின் ஒரு அங்கம். விரல்கள் மற்றும் மணிக்கட்டு தோள்பட்டை, முழங்கை மூட்டு என்று அனைத்துக்கமான பயிற்சி. இப்படித்தான் கிணற்றில் தண்ணீர் எடுப்பது, பாத்திரம் தேய்த்தல் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டே செல்லலாம். சின்ன பயிற்சியை மறந்ததால், பெரிய பிரச்சனைகளை நாமே வரவழைத்துக் கொள்கிறோம்.

நடை பயிற்சி நலம் தரும்

இன்றைய காலகட்டத்தில் சாதரண தொழிலாளி வீட்டிலும் ஒரு பைக், ஒரு ஸ்கூட்டி அல்லது ஒரு டிவிஎஸ் எக்செல் என்று ஒரு சிறிய வாகனம் இல்லாமல் இல்லை. வேலை காரணமாக வாகனத்தை வாங்கினாலும், இதில் தவறவிட்டது அவரது அன்றாட வாழக்கையில் மேற்கொண்ட நடை பயிற்சியை. இதே வாகனம் தன் கைக்கு வருவதற்கு முன்னர், தன் கால்களுக்கு அவர் கொடுத்த பயிற்சியை மறக்கிறார். குறிப்பாக நடை பயிற்சியை மறக்கிறார். அத்துடன், மன அமைதியையும் இழக்கிறார். இன்றைய சூழலில், எந்தவித செலவும் இல்லாமல், உடல் நலம், மன நலத்தைக் காக்கும் ஒரே பயிற்சி நடை பயிற்சி மட்டுமே.

அதிகாலையில் நடங்க

நடை பயிற்சிக்கு எப்போதும் உகந்த நேரம் அதிகாலை. அதிலும் காலை 4 முதல் 6 மணி வரையிலான நேரம் மிகச் சிறப்பு. இந்த நேரத்தில் நடை பயிற்சி செய்தால் 2 விதமான லாபம். ஒன்று தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும். 2வது நிம்மதியான மன நிலை கிடைக்கும். ஆனால், தினமும் நடப்பது என்பது 100 சதவீதம் பேருக்கு சாத்தியம் இல்லாதது. எனவே, வாரத்துக்கு குறைந்தது 5 முதல் 6 நாட்கள் கட்டாயம் நடக்க வேண்டும்.

எவ்வளவு தூரம் நடக்கலாம்?

நடை பயிற்சி என்பது அவரவர் உடல் நலத்தைப் பொறுத்தது. உடல் எடையைப் பொறுத்தது. சராசரியாக 60 முதல் 70 கிலோ உடல் எடை கொண்ட நபர்கள் தினமும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் அடிகள் நடப்பது சிறப்பு. சராசரியாக ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 அடிதூரம் என்பது ஒரு கி.மீட்டர் என்று கூறலாம். குறைந்தபட்சம 3 முதல் 4 கி.மீட்டர் தூரம் தினமும் நடக்க வேண்டும்.

எப்படி நடப்பது?

அதிகாலையில் மட்டுமல்ல, எந்த ஒரு நேரத்தில் நீங்கள் நடந்தாலும், உங்கள் இயல்பான நடையை நடப்பது சிறப்பது. இயல்பான நடை என்பதை எப்படி மதிப்பிடுவது? ஒரு மணி நேரத்தில் 3 முதல் 4 கி.மீட்டர் தூரம் நடப்பது இயல்பானதுதான். ஆனால், 50 வயதைக் கடந்தவர்களுக்கு இதில் சிறிய இடர்பாடுகள் இருக்கலாம். சிலர் 60 வயதிலும் மணிக்கு 4 முதல் 5 கி.மீட்டர் நடப்பதும் உண்டு.
நடப்பதை நீங்கள் உணர வேண்டுமானால், உங்கள் கால்கள் சொல்வதைக் கேளுங்கள். உடல் எடை, வயது என்று பல காரணங்களை கவனத்தில் கொண்டு நடக்க வேண்டியது அவசியம். நடை பயிற்சியின்போது தனியாக நடப்பது சிறப்பு. 2 அல்லது 3 பேர் சேர்ந்து நடக்கும்போது, அனைவரும் ஒரே வேகத்தில் நடந்து செல்வது சாத்தியம் இல்லை.

வாக்கிங் பார்ட்னருடன் வேகமாக நடக்க வேண்டும் என்பதற்காக, உடல் எடை, கால்கள் சொல்வதை புறக்கணித்தால் விரைவில் மூட்டுப் பகுதிகளில் தேய்வு ஏற்பட்டு, அழுத்தம், வலி ஏற்படும். இதனால்தான் அதிக உடல் பருமன் கொண்ட இளம் வயதினருக்கு அதிகப்படியான மூட்டு வலிகள் ஏற்படுகிறது என்கின்றனர் டாக்டர்கள்.

சரி, கால்கள் வலி ஏற்படவில்லை என்பதற்காக மணிக்கணக்கில் நடக்கக்கூடாது. உடல் சோர்வு ஏற்படும். இன்றை நாளில் நடந்தது போதும் என்று உடலும், மனமும் தெரிவித்தால் சட்டென நடைபயிற்சியை நிறுத்த வேண்டும்.

தனியாக நடப்பது ஏன்?

நடை பயிற்சி தனியாக இருப்பது சிறப்பு என்பதற்கு காரணம், உளவியல் ரீதியாகவும் யோசிக்க வேண்டியுள்ளது. வாக்கிங் பார்ட்னர்கள் பெரும்பாலும் ஒரே சிந்தனை கொண்ட நபர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. கட்சி, பொருளாதாரம், அரசியல் சித்தாந்தம் என்று பல்வேறு முரண்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களது கருத்து நமக்கும், நம் கருத்து அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் நடை பயிற்சியின்போது வாக்குவாதம் ஏற்பட்டால், அது காலையிலேயே மன உளைச்சல், எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க தனியாக நடப்பதே சிறந்தது.

என்னதான் லாபம்?

அதிகாலை நடை பயிற்சியால் நுரையீரல் தனக்கு தேவையான தூய்மையான ஆக்சிஜனை தேவையான அளவு உள் இழுத்துக் கொள்ளும். கை, கால் மூட்டுப் பகுதிகளில் வலி ஏற்படுவது குறையும். உடல் தசைகளில் புதிய பாய்ச்சலுடன் ரத்தம் பாயும். இது உடலுக்கு உற்சாகம் கொடுக்கும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை பிரச்சனை இருப்பவர்களுக்கு, நடைபயிற்சி ஒரு சிறந்த கலோரி எரிப்பு வழி. காலையில் பசி உணர்வு அதிகரிக்கும். மலச்சிக்கல் குறையும். எல்லாவற்றுக்கும் மேலாக, நடை பயிற்சியின்போது உங்களால் தீர்வு காண முடியாது என்று நினைக்கும் பல பிரச்சனைகளுக்கும், இயல்பாகவே உங்கள் மனம் சிறந்த தீர்வை கொடுக்கும். அப்புறம் என்ன, நாளை முதல் நடை பயிற்சிக்குத் தயாராக வேண்டியதுதானே!