மோடி மேஜிக்! ஆர்ப்பரித்த தமிழகம்

இந்தியா வரும் ஏப்ரலில் லோக்சபா தேர்தலை எதிர் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக, தேசிய கட்சியான பாஜவும் லோக்சபா தேர்தலுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு 2 மாதங்கள் இருந்தாலும், பாஜ என்னவோ கடந்த ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாகிவிட்டது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையானது, அந்தக் கட்சியின் திட்டமிட்ட தேர்தல் பிரச்சார களம் எனச் சொல்லலாம்.

தொண்டர் பலம்/ ஓட்டு பலம்

ஒரு பெரிய மாநிலத்தில், 70 ஆண்டுகளாக திராவிட சித்தாந்த கொள்கைகள் ஆட்சியில் உள்ள மாநிலத்தில், தேசியத்தை கொண்டு போய் சேர்ப்பது என்பது சாமானியமான ஒரு வேலையல்ல. மிகமிக சவாலான பணிகளில் ஒன்று. திமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள், அதிமுகவுக்கு 2 கோடி தொண்டர்கள் மற்றும் உதிரி கட்சிகளுக்கு 50 லட்சம் தொண்டர்கள் என்று வைத்துக் கொண்டாலும், 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள் உள்ள தமிழகத்தில், குறைந்தபட்சம் 2 கோடி வாக்காளர்களை கவர்வது என்பது பாஜவுக்கு பெரிய இலக்குதான். இதில், இளம் தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்து பாஜ களம் இறங்கியிருப்பது கொஞ்சம் கை கொடுக்கும் என்று நம்பலாம்.

உடனடி வெற்றி சாத்தியமா?

சில மேஜிக்குகள் நிகழ்ந்தால் எதுவும் சாத்தியம்தான். தமிழகத்தில் கடந்த 2 லோக்சபா தேர்தல்களிலும் வெற்றிபெற்று, டில்லிக்குச் சென்ற திமுக, அதிமுக எம்பிக்களால், தமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களும், மாற்றங்களும் வரவில்லை என்பது கள எதார்த்தம். என்னதான் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் தயாரித்தாலும், மத்தியில் ஆதரவான ஆட்சி இல்லாவிட்டால், அறிக்கைகள் எல்லாம் காகித அச்சுடன் அப்படியே குப்பைக்கு போய் சேர்ந்துவிடும். திமுக மாநாட்டில் நீட் விலக்க கடிதங்கள குப்பைக்கு போனதைப்போல.

மம்த செயல் எம்பிக்கள்

இதுபோன்ற கட்சிகளின் செயல்பாடு இல்லாத எம்பிக்களின் பலவீனத்தை களப்படுத்துவதில் பாஜ எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அந்தக் கட்சிக்கு ஓட்டு வங்கியை மெல்ல அதிகரித்து, வெற்றிக்கு அருகாமையில் அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் தொடர்பாக அண்ணாமலை சொன்ன கருத்தை இங்கே குறிப்பிடுவது சிறப்பு.
‘‘தேர்தல் களத்தில் வெற்றி என்பது ஒன்று, பத்து, நூறு என்ற வரிசையில் வருவதுதான் வளர்ச்சியாக இருக்கும்’’என்றார். இந்த வகையில் வரும் லோக்சபா சபாத் தேர்தலில் தமிழகத்தில் பாஜ ஒற்றை இலக்கத்தில், அதாவது 5 முதல் 9 லோக்சபா தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கு இலக்கு நிர்ணயித்து காய் நகர்த்துகிறது.

மோடியின் மிஸ்டர் கிளீன் இமேஜ்

தமிழகத்தில் எந்த ஒரு பெரிய கட்டமைப்பும் இல்லாத சூழலில், பாஜ களம் காண்பது என்பது முழுக்க முழுக்க அண்ணாமலையின் அசராத பயணம், மத்தியஅரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பிரதமர் மோடியின் மீதான மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் ஆகியவற்றால் மட்டுமே. இந்த நிலையில், ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்காக தொடர்ந்து 11 நாட்கள் கடுமையான விரதம் மேற் கொண்ட பிரதமர் மோடி, தன் விரத நாட்களில் இளநீர் மட்டுமே அருந்தியதுடன், விரத நாட்களில் அதன் அரசு மற்றும் அரசியல் பணிகளை செய்வதற்கு தவறவில்லை.
இதன் ஒரு பகுதியாக கடந்த 19ம் தேதி சென்னையில் கோலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக விமானத்தில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, சென்னையின் மக்கள் கொடுத்த வரவேற்பு, திராவிட கட்சிகளை திகைக்க வைத்துள்ளது என்பதே உண்மை.

சாத்தியமாகும் நம்பிக்கை!

இன்னும் ஒரு நிதர்சமான உண்மையை சொல்வது என்றால், சென்னையில் தனக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதை பிரதமர் மோடியே எதிர்பார்த்திருக்கமாட்டார் என்பதுதான். விரதத்தால் உடல் சோர்வில் இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் இடம் வரையில் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான, லட்சக் கணக்கான மக்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இது பிரதமர் மோடிக்கு நிச்சயம் மிகப் பெரிய அளவில் மன வலிமையைக் கொடுத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

விஞ்சியது ஸ்ரீரங்கம்

ரகுகுல நாயகன் ராமனின் குல தெய்வமான ரங்கனை சேவிப்பதற்காக 20ம் தேதி காலையில் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வரையிலான ரோட் ஷோவில், சாலையின் 2 பக்கமும் திரண்டிருந்த மக்கள், பிரதமர் மோடியை கண்டதும் உற்சாகம் கரைபுரள, கை அசைத்து மகிழ்ந்தனர். ஸ்ரீரங்கம் ரங்கனை சேவிக்கும் முதல் பிரதமர் மோடி என்பதால், இன்னும் ஒரு சிறப்பு அம்சம் கூடியது எனலாம். கோயில் நிர்வாகம் பிரதமருக்கு தங்கக் குடத்தில் பூர்ண கும்ப மரியாதை வழங்கியது தனி.

வேத ஆட்சிகள்

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், ஸ்ரீரங்கம் மக்களின் வேத ஆசிகள். ஆமாம், ரங்கனை சேவிக்க வந்த பிரதமருக்கு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான வேத பண்டிதர்கள், சாலையின் 2 பக்கங்களிலும் பல இடங்களில் நின்று கொண்டு, மலர் தூவி வேத மந்திரங்கள் முழங்க ஆசிகள் வழங்கினர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற வேறுபாடு இல்லாமல் திருச்சியும், ஸ்ரீரங்கமும் பிரதமர் மோடியை தங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து, இப்படியொரு பிரமிப்பான வரவேற்பை வழங்கி அசத்தினர்.

எம்ஜிஆர் ஜெ மோடி!!!

ஸ்ரீரங்கத்தில் இப்படியொரு வரவேற்பை பெற்றவர்கள் 2 பேர் மட்டுமே. அவர்கள் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே. இப்போது, 3வதாக இந்த பெருமை பிரதமர் மோடியைச் சேர்ந்துள்ளது, திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

திகைக்க வைத்த ராமேஸ்வரம்

ஜனவரி 20ம் தேதி பிற்பகல் திருச்சியில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வந்த மோடிக்கு, அங்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு வேறு ரகம். பேக்கரும்பில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் தளத்தில் இருந்து ராமேஸ்வரம் கோயில் வரையிலான ரோட் ஷோவில், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் வந்திருந்த லட்சக் கணக்கான யாத்ரீகர்கள் திரண்டு பிரதமரை ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க வரவேற்றனர். நேராக அக்னி தீர்த்தக் கடலில் சென்று நீராடியதும், தொடர்ந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி தீர்த்தங்கள் சேகரித்துக் கொண்டு, ராமநாதரின் பாதம் பணிந்து வணங்கிய மோடி, ராமகிருஷ்ண மடத்தில் சாதாரணமாக தரையில் பாய் விரித்து உறங்கினார். 21ம் தேதி காலை தனுஷ்கோடி அரிச்சல் முனையில் ராமர் – சீதா தேவி மணல் லிங்கம் அமைத்த இடத்தில், மலர் கோலம் அமைத்து வழிபாடு, தியானம் நடத்தியமோடி, அங்கிருந்து தீர்த்தம் சேகரித்தக் கொண்டு, மதுரை வழியாக டில்லிக்கு விமானத்தில் பயணித்தார்.

பாஜவில் எழுச்சி

மத்தியில் 2014 முதல் இப்போது வரை ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அரசியலில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பிரதமர் மோடியின் இந்த திடீர் பயணங்கள், மக்கள் மத்தியில் குறிப்பாக நடு நிலை வாக்காளர்கள் மத்தியில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதை அப்படியே ஓட்டுகளாக கொண்டு செல்வது என்பது, தமிழக பாஜவின் களப் பணியில்தான் உள்ளது என்பதை, கட்சித் தலைமை கவனத்தில் கொள்வது சிறப்பு. இது சாத்தியமானால், தமிழகத்திலும் மோடி மேஜிக் என்பது நிச்சயம்!!!