மதுரை நகரா மண்டபம்

இன்று நேற்று அல்ல கி.பி. 1700-ம் ஆண்டு தொடங்கி தினமும் இரண்டுமுறை மதுரையில் ஓர் இசைக் கருவி ஒலித்துக்கொண்டே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் நகரா. போர்க் களத்தில் ஒலிக்கும் முரசு போல மெகா சைஸில் இருக்கிறது நகரா. அதை இரண்டு பெரிய குச்சிகளை வைத்து அடிக்க, அடிக்க ‘தொம் தொம்’ என்று அந்த அறையே அதிர்கிறது. இந்த நகராவை வைப்பதற்காகவே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி கிழக்கு கோபுரம் எதிரில் பிரத்யேகமாக இருக்கிறது நகரா மண்டபம்.

தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள்ளும் மாலை 4 முதல் 4.30 மணிக்குள்ளும் மீனாட்சியம்மன் கோயில் ஏரியாவுக்குப் போனால் நகரா இசையை அதிர அதிரக் கேட்கலாம் அந்தக் காலத்தில் கோயில் அதனைச் சுற்றி அமைந்து இருந்த வீதி களும் மட்டும்தான் மதுரை. அதனால், கோயில் நடை திறக்கப்படுவதை அறிவிக்கும் விதத்தில் அப்போது மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஏற்பாடு செய்ததுதான் இந்த நகரா.

அந்த காலத்தில் இந்த மண்டபத்தின் மீது இருந்து நகரா இசைத்தால் மதுரை மட்டுமல்ல தெற்கே திருப்பரங் குன்றம், கிழக்கே திருபுவனம் வரைக்கும் கேட்குமாம்.