கோயில்களில் யாகங்கள் நடத்தத் தடை? என்ன சொல்கிறது நீதித்துறை

மதம் மற்றும் மதம் சார்ந்த கோட்பாடுகளுடன் விளையாடுவது என்பது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமான ஒரு செயல், சில வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காண்பித்துள்ளது. அதேநேரத்தில், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 26, இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும், அவர்களின் பாரம்பரிய உரிமை, நம்பிக்கை, வழிபாட்டு முறைகளை உறுதி செய்கிறது. அதாவது முழுமையான மதச் சுதந்திரம் என்பதை வரையறை செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் பிரிவு 26ன்படி, ‘‘ பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உட்பட்டு மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம், ஒவ்வொரு மதப்பிரிவினருக்கும் அல்லது அதன் எந்தப்பிரிவினருக்கும் உரிமை உண்டு. மேலும், மதம் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல், மத விஷயங்களில் அதன் சொந்த விவகாரங்களை நிர்வகித்தல், மற்றம் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சொந்தமாகப் பெறுதல் ஆகியவற்றுடன், சட்டத்தின்படி அத்தகைய சொத்தை நிர்வகித்தல்’’ சுதந்திரத்தை, அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.

ஆனால், இந்தியாவின் நடப்பு சட்டதிட்டம் என்னவோ, எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் இந்துக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக மதச் சுதந்திரம். கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அனுமதிக்கக்கோரி, அந்த மாநிலத்தின் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, ஹிஜாப் உரிமையல்ல என்று தீர்ப்பாகிய பின்னர், அதற்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டங்கள், நீதிபதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் எத்தனை? இது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் ஜாமீன்கேட்டு வழக்குத் தொடர்ந்தவர்கள், ‘‘நாங்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தோம். ஏற்பாடு செய்தோம். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தவறாக பேசினார்கள். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஆனால், கோர்ட் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்’’ என்று கூறி, ஜாமீன் பெற்றனர்.

இப்போது, ஹிஜாப் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் 2 நபர் பெஞ்சில் இருந்து, ஏறக்குறைய ஸ்பெஷல் பெஞ்ச் அல்லது அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் மத உரிமை என்றால், இப்படித்தான் என்று சொல்வதுபோல் உள்ளது.

ஆனால், பெரும்பான்மை
மக்கள் நிலைமை?

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், விதிமீறல்கள் உள்ளதாக கூறி, நூற்றுக்கும் அதிகமான இந்து கோயில்களை மண்ணில் சரித்துள்ளனர். ஆனால், திருப்பூரில் ஒரு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட ஒரு மசூதியை அகற்ற முடியாமல், அகற்ற விடாமல் முஸ்லிம்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, திருப்பூரை ஸ்தம்பிக்கச் செய்தனர். இந்து கோயில்கள் இடிப்பும், சிறுபான்மையினர் வழிபாட்டு உரிமைக்கும், இதற்கு மேல் ஒப்பீடு தேவையில்லை. இந்துக்களின் வழிபாட்டு உரிமை, மதச் சுதந்திரம் எந்தளவுக்கு உள்ளது என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இது நீதித்துறை முறை…

ஆள்ஆளுக்கு அடித்து விளையாட ஒரு அடிமை கிடைத்துவிட்டதைப்போல், இந்தமுறை நீதித்துறையானது, ‘மத ஒழுங்கு மற்றும் சீர்படுத்துதல்’ என்ற மரபின் கீழ் தன் மேலான கருத்துக்களை முன்வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட பாஜ செயலாளர் சித்ரங்கநாதன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்செந்தூர் கோயிலின் கந்த சஷ்டி விழாவின்போது, கோயில் வளாகத்தில் பக்தர் தங்கியிருந்து விரதம் இருப்பார்கள். இந்தமுறை இதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கவில்லை. பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழக்கத்தை மாற்றுவது சரியல்ல. திருச்செந்தூர்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயிலின் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. அக்டோபர் 30ம் தேதி மாலை சூரசம்காரம் நடக்கும். சஷ்டி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள் பிரகாரத்தில், பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம் ஆனால், இந்த ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் அனுசரிக்க அரசு அனுமதிக்கவில்லை. காலம் காலமாக இருக்கும் நடைமுறையை மாற்றுவது சரியல்ல. எனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பிரகாரத்தில், கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என

மனுவில் கூறியிருந்தார்…

இந்த மனுவை மாட்சிமை தாங்கிய நீதியரசர்கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுதான், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்னதான் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயில் சத்திரமா??

‘‘திருச்செந்தூர் முருகன் கோயில், முழுவதும் தனியார் கையில் உள்ளது. இங்கே கோயிலில் விரதம் இருக்க அனுமதி கேட்பவர்கள், திருப்பதி கோயில்களில் இதுபோன்று விரதம் இருக்க முடியுமா? தமிழகத்தின் கோயில்கள் மட்டும் சத்திரமா? இந்த முறையை மாற்ற வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்யலாம். கோயில் பணக்காரர்களுக்கானது அல்ல. கடவுள் அனைவருக்கும் சமமானவர்.

உலகில் உள்ள முருகன் கோயில்களில், திருச்செந்தூர் முருகன் கோயில் மிகபிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே சென்று உட்கார்ந்தால் அனைத்தும் சரியாகிவிடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும். தேவையில்லா நடைமுறைகளை ஒழிக்கவேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோயில்களை காப்பாற்ற புதிய வழிமுறைகள் கொண்டு வர வேண்டும். திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதியில் உள்ளது போன்ற கட்டுபாட்டு நடைமுறைகளை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குள் யாகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும். இதனை இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர்,அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறை, கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

நீதி விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டது அல்ல…

எந்த மதத்திலும் தேவையற்ற மூடநம்பிக்கைகள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதில், இந்து மதமும் விதிவிலக்கு அல்ல. கோயில்களில் கட்டண தரிசனமுறையை கொண்டு வந்தது யார்? அறநிலையத்துறைதானே? கோயில் பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல என்று காலையில் கோர்ட்டில் தீர்ப்பு வாசித்தபோதே, மாலையில் முதல்வர் மகள் செந்தாமரை, திருச்செந்தூர் கோயிலில் சாமிதரிசனம் செய்தார். அந்த நேரத்தில், மற்றவர்களுக்கு அனுமதியில்லை. குறிப்பாக விரதம் இருந்த பக்தர்களுக்கு!!!

கோயில் வளாகத்தில் சஷ்டி விரதம் இருப்பது

பக்தர்களின் பல நூற்றாண்டு நம்பிக்கை. இதில் சில மாற்றங்கள் செய்யலாம் தவறு இல்லை. கோயில் வளாகத்தில் சில மணி நேரம் மட்டும் அனுமதி, மற்ற நேரங்களில் தற்காலிக கூடாரங்களில் விரதம் இருக்கலாம் என்று கூட சொல்லலாம். தவறில்லை. ஆனால், திருப்பதி கோயிலில் விரதம் இருக்க முடியுமா? என்கின்றனர். திருப்பதி கோயில் வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்யலாம். டோக்கன் வசதி உண்டு. தமிழகத்தின் கோயில்களிலும் செய்யலாம். ஏன், தமிழகத்தைப்பார்த்து திருப்பதியில் சில நடைமுறைகள் கொண்டு வரக்கூடாதா?

அமிர்தகடேஷ்வரர் கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி பூஜைகள், யாகங்கள் நடக்கும். தமிழகத்தின் பல முன்னாள் நீதி அரசர்கள், எம்எல்ஏக்கள், மந்திரிகள், இப்போதைய திமுக எம்பிக்கள் சிலர் தங்களுக்கான சஷ்டியப்த பூர்த்தி யாகத்தை அமிர்தகடேஷ்வரர் கோயிலில் செய்து கொண்டனர். இதன் முக்கிய நோக்கம், சிறிய அளவில் யாகம் வளர்த்து, மாலை மாற்றிக் கொள்வார்கள். கோயில்களில் யாகங்கள் கூடாது என்றால், அவரவர் வீடுகளில் மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்களா நீதியரசர்கள்?

கோயில்கள் அதிக அதிர்வுகள் கொண்ட இடங்களில் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. இந்த இடங்களில் நடத்தப்படும் யாகங்கள், வேள்விகளுக்கு என்று சிறப்பு வாய்ந்த சக்தி உண்டு. இதை தடை செய்யும் வகையில், நீதியரசர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதின் அவசியம் என்ன? இந்து சமய அறநிலையத்துறையின் முறையற்ற செயல்களால், கோயில்களில் இருந்து ஆன்மிகம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில், மத உரிமையைக் காப்பாற்ற வேண்டிய அரசும், இப்போது அறநிலையத்துறையுடன் கை கோர்த்துக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்.