கொடுப்போம் நல்ல எண்ணங்களை

ஒரு உளவியல் சிந்தனை

உளவியல் தத்துவத்தின்படி நாம் எதை தீவிரமாக எண்ணுகின்றோமோ அப்படியேதான் நமக்கு வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அமையும். இதையேதான் எண்ணம் போல் வாழ்வு என்று சொன்னார்கள்.

அதாவது நாம் எந்த எண்ணங்களை தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்திற்கு தக்கவாறுதான் நமது வாழ்க்கை அமையும் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த கருத்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ருக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ரிக் வேதத்தில்

ருக் வேதத்தில் உள்ள பிக்ஷு சூக்தத்தில் பின்வரும் மந்திரம் உள்ளது.

அந்த மந்த்ரம்: “ப்ரூணத: ரயி ந உபதஸ்யதி”

மேற்கூறிய மந்திரத்தின் பொருளாக சொல்லப்படுவது என்னவென்றால் “கொடுப்பவனுக்கு செல்வம் குறைவதில்லை” என்பதாகும்.

இங்கே செல்வம் என்பதை நாம் நல்வாழ்வு மற்றும் வளவாழ்வு என்பதாக பொருள் கொள்ளலாம்.
தர்மம் செய்யுங்கள்

இதனால்தான் தர்மம் செய்யவேண்டுமென்று நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. கொடுக்க கொடுக்க நாம் எதைக்கொடுக்கிறோமோ அது பலமடங்கு பல்கி பெருகும் என்கின்ற உளவியல் கருத்தைதான் மேலே சொல்லப்பட்ட வேத மந்திரம் கூறுகின்றது.

உற்சாகமூட்டும் சொற்களால் நாம் மற்றவரை உற்சாகமூட்டும்பொழுது நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டு விடுகின்றது.

அதைப்போல நல்ல எண்ணங்களை கொள்ளும்பொழுது அந்த எண்ணங்களின் பலனாக வள வாழ்வு நமக்கு அமைகின்றது.

எண்ணம் போல் வாழ்க்கை

ஆக்கபூர்வ எண்ணங்கள், தன்னம்பிக்கை எண்ணங்கள், வளமான எண்ணங்கள் போன்ற எண்ணங்களை நாம் இடைவிடாது கொண்டால் அந்த எண்ணங்களே நமது வாழ்வில் அதுபோன்ற நன்மைகளை ஏற்படுத்திவிடும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த கருத்தைத்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முனிபுங்கவர்கள் மேற்கூறிய வேதமந்திரத்தின்மூலம் சொல்லிவைத்தரர்கள்.

இந்த உலகிற்கு உளவியல் தத்துவம் எனும் ஒப்பற்ற மன விஞ்ஞானத்தை அளித்த நமது ரிஷிகளின் அருட்கொடையை நாம் இந்த இடத்தில் எண்ணி தலை வணங்குகிறோம்.