இதைத்தான் எதிர்பார்த்தோம் தமிழக அரசியலில் திருப்பு முனை

தமிழக அரசியலின் அதிகார துஷ்பிரயோகங்களில் திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. இதில், இந்துக்களை நித்தமும் நிந்தித்துக் கொண்டிருக்கும் திமுக நம்பர் ஒன் என்றால், இந்துக்கள் ஓட்டுக்களை வாங்கிக் கொண்

டே, அவர்களுக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டு, சத்தமின்றி சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கும் அதிமுக நம்பர் 2 எனலாம். ஆனால், நம்பர் 1, 2 ஆகியவற்றுக்கு எதிராக நம்பர் 3 உருவாகும் நிலையில், அதை எதிர்ப்பதற்காக மேற்கண்ட 2 கட்சிகளும் இணைந்தால் எப்படியிருக்கும்? கற்பனையல்ல. அரசியல் கள நிலவரம் அப்படித்தான் மாறியுள்ளது.

தமிழக அரசியலில் மாற்றங்கள்

காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, 1967 தேர்தலில் வீழ்த்தி, அண்ணாதுரை தலைமையிலான திமுக அரியணை ஏறியது. அண்ணாதுரை உடல் நலக் குறைவால் இடையே காலமாக, நெடுஞ்செழியனுக்கு முதல்வர் வாய்ப்பு வந்தது. அதை நடிகர் எம்ஜி ராமச்சந்திரன் உதவியுடன் சமாளித்து, முதல்வர் பதவியை தட்டிப் பறித்தார் கருணாநிதி. முதல்வர் பதவியில் அவரது அராஜகங்கள் எல்லை மீறியது. உலகத் தமிழ் மாநாடு உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டதில் திமுகவுக்கு திரண்ட நிதி தொடர்பாக எம்ஜி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதனால், அவரை கட்சியில் இருந்து கருணாநிதி வெளியேற்றினார்.

தமிழக அரசியலில் இருந்து திமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். அவருக்குப் பின்னர் வந்த ஜெயலலிதாவும் திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். எனினும், 1991 – 96 காலகட்டத்தில், ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக, 1996 -2001ல் ஆட்சி செய்த திமுக சிறப்பு விசாரணை கோர்ட்கள் அமைத்தது.

வாஜ்பாய் அரசை…

இடையே, 1998 கோவை குண்டு வெடிப்பு. தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜகவுடன் கை கோர்த்த ஜெயலலிதா 30 இடங்களில் வெற்றி பெற்றார். இதில், அதிமுக 18 எம்பிக்களை தன் வசம் வைத்திருந்தது. வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழகத்தில் திமுக அரசை கலைக்க நெருக்கடி கொடுத்தார். இதற்கு வாஜ்பாய் மறுத்த நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஒரு ஓட்டில் வாஜ்பாய் அரசை கவிழ்த்த பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.

துரோகமே வரலாறு…

பாஜக ஆட்சியைக் கவிழ்த்தாலும், இந்துத்துவத்தின் மீது ஜெலலிதாவுக்கு நம்பிக்கை உண்டு என்பதால், பாஜக அவர் மீது பெரிய கோபம் கொள்ளவில்லை. அதேநேரத்தில், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் ஜெயலலிதா மாறவில்லை. இதனால், தமிழக அரசியல் களத்தில் ஒரு சமநிலை நிலவியது என்பதுதான் உண்மை.

நேர் தேசிய கட்சி!!!

ஆனால், திமுக, அதிமுக கட்சிகள் ஒரே விஷயத்தில் மிகமிகத் தெளிவாக அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. ‘திராவிடத்தில் இருந்த பங்காளிகள்’என்ற ரத்த பாசத்தால், தமிழகத்தில் தங்களை மீறி 3வதாக ஒரு தேசிய கட்சி வளர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாகவே அரசியல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால்தான் காங்கிரசால் தமிழகத்தில் வளர முடியாத நிலை ஏற்பட்டது.

லோக்சபா, சட்டசபைத் தேர்தல்களின்போது, திமுக தேசிய கட்சியான காங்கிரசை, தன் கக்கத்தில் வைத்து, இடுக்கிக் கொண்டது. இதனால், காங்கிரஸ் நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது.

அதிமுக தனி ஆவர்த்தனம்

2014 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தனித்து களம் கண்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தர்மபுரியில் அன்புமணியும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் தங்கள் செல்வாக்கால் வெற்றி பெற்றனர். ஆனால், ஜெ.,வுக்கு பிரதமர் கனவு என்ற ஒரு தனி சேப்டர் இருந்தது. ஆனால், மோடி தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. இதனால், அதிமுகவின் ஆதரவு தேவைப்படவில்லை. அதேநேரத்தில், பிரதமர் மோடி, முதல்வராக இருந்த ஜெயலலிதாவை தன் உடன்பிறவா சகோதரியாகவே பாவித்தார். இதனால், 2014ல் சென்னை பல்கலைக்கழக விழாவுக்கு வந்திருந்த பிரதமர் மோடி, மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார். இதனால்தான் 2016 தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், டிசம்பரில் ஜெயலலிதா இறந்துவிட்டாலும், அதிமுக ஆட்சியை கவிழவிடாமல் தாங்கிப்பிடித்தார் என்பது நிதர்சனம்.

நம்பிக்கை துரோகமே தேர்தல்களம்?

திராவிட கட்சிகள், தங்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை எப்படியெல்லாம் குழிதோண்டிப் புதைக்கும் என்பதற்கு உதாரணமாக சில புள்ளி விவரங்கள் வலைத்தளங்களில் கிடைத்தது. இவற்றை சில தகவல்களை உறுதி செய்த பின்னரே இங்கு பதிவிடுவிறோம்.

பாஜக வலுவாக உள்ள கோவை தெற்கு தொகுதியில் 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக அம்மன் அர்ஜூனன் 59,788 வாக்குகள் பெற்றார். இதில் தனித்து நின்ற வானதி பெற்ற வாக்குகள் 33,113. இந்த ஓட்டுக்களை அப்படியே 2021 சட்டசபை தேர்தலுக்கு மாற்றினால் வானதிக்கு கிடைத்திருக்க வேண்டியது 92,901 வாக்குகள். ஆனால் கிடைத்தது, 53,209 வாக்குகள் மட்டுமே. சிறுபான்மையினர் வாக்குகள் என்று 20 ஆயிரம் பிரிந்தாலும், மீதம் உள்ள 20 ஆயிரம் அதிமுக வாக்குகள் எங்கே போனது.

லோக்சபா தேர்தலிலும்
சடுகுடு ஆட்டம்

தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் தனித்து பெற்ற வாக்குகள் 3,89.701. இந்தத் தேர்தலில் அதிமுக பெற்றது 4,31,717 வாக்குகள். இந்த 2 கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால் வருவது 8,21,418 வாக்குகள். ஆனால், 2019 தேர்தலில், பாஜக, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் பெற்ற ஓட்டுகள் 3,92,007. திமுக, கம்யூ. கூட்டணி வேட்பாளர் பெற்றது 5,71,150 வாக்குகள். 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜகவுக்குக் கிடைத்தது வெறும் 2 லட்சத்தி, 306 வாக்குகள் மட்டுமே. மீதம் உள்ள அதிமுக வாக்குகள் சத்தமின்றி திமுகவுக்கு மடை மாற்றப்பட்டது என்பது, அரசியல் ஆடுகளத்தின் திராவிட கட்சிகளின் திரைமறைவு ஆட்டம். ஆனால், திராவிட கட்சிகளின் இந்த உள்ளடி ஆட்டம் என்பது, கூட இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கே தெரியாத ஒரு விஷயமாகும்.

அலர்ட்டான அண்ணாமலை

இந்தச் சூழலில் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில், இதேபாணியில் தோற்கடிக்கப்பட்ட இப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வகையில், அரசியல் உள்ளடி வேலைகளை கொஞ்சம் கண்டு கொள்ளத் தொடங்கினார். இதனால்தான் தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக தனித்து களம் காணும் நிலை ஏற்பட்டபோதும், துணிந்து களம் இறங்கினார். அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுக்கு தகுதியான இடத்தை பாஜக வழங்கியபோதும், அதற்கு தான் கொஞ்சமும் தகுதியில்லாத நபர் என்பதை அதிமுக பொதுச் செயலாளராக இருந்த பழனிசாமி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டுக்குப் பின்னர், பாஜகவுடன் நேரடி கருத்து மோதலைத் தொடங்கினார்.

திமுகவுடன் கை கோர்த்த அதிமுக

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னர், அதிமுக 2 ஆக உடைந்தது. தொடக்கத்தில் பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த சூழலில் அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வத்தை வெளியேற்றி, பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய பழனிசாமி, எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பாஜகவுடன் பழனிசாமி நெருக்கமாக இருப்பதாக நினைத்துக் கொண்ட திமுக, எதிர்கட்சித் துணைத் தலைவர் சீட் பிரச்சனையில் அவரை கதறவிட்டது. ஒவ்வொரு சட்டசபைக் கூட்டத் தொடரிலும் இது பேசுபொருளானது.

இந்தச் சூழலில் எந்த ஒரு நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். இந்தச் சூழலில் கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், பழனிசாமி முதல்வர் ஸ்டாலினை புகழ, நீங்கள் எங்களுக்கு உதவினால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறலாம் என்று ஸ்டாலின் பழனிசாமியை புகழ, சட்டசபையில் ஒரே குதுகல காட்சிகள் அரங்கேறியது.

சிக்னல் காண்பித்த முதல்வர்

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பிரச்சனையில் தமிழகமே அரசு நிர்வாகத்தை துவைத்து காயப்போடும் நிலையில், ‘‘கிளாம்பாக்கத்தில் உள்ள சிறு சிறு குறைகளை சரி செய்த பின்னர் திறந்திருக்கலாம்’’என்று பழனிசாமி பேச, ‘‘பெரிய குறைகளையே சரி செய்து வருகிறோம்’’என்று முதல்வர் ஸ்டாலின் பதில் கூறினார். தொடர்ந்து, எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கைத் தொடர்பான பழனிசாமியின் கோரிக்கையை, சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேச, மறுநாளே ஓபிஎஸ் இருக்கை சட்டசபையில் மாற்றி அமைக்கப்பட்டது. எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் உட்கார்ந்தார். பார்த்தால் சிறிய பரிவர்த்தனைதான். ஆனால், இதன் உள் அர்த்தம் என்பதே வேறு.

அதிர்ச்சி கொடுத்த யாத்திரை

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக வேரூன்றிவிட்ட திராவிட கட்சிகளை மீறி, வளர முடியாமல் ஏற்கனவே ஆட்சியில் இருந்த தேசிய கட்சி காணாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் மத எதிர்ப்பு என்று வலுவாக கட்டமைப்பு செய்யப்பட்ட நிலையில், இதை உடைக்கவும், தமிழகத்தில் 3வது ஒரு கட்சியாக பாஜவை வளர்த்தெடுக்கவும், அண்ணாமலை கையில் எடுத்ததுதான் என் மண், என் மக்கள் யாத்திரை

அலட்சியமாக இருந்த கழகங்கள்

இந்த யாத்திரை தொடங்கும்போது திமுக மட்டுமல்ல, அதிமுகவும் கண்டு கொள்ளவில்லை. இந்த அரசியல் யாத்திரை பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்றே 2 கட்சிகளும் நினைத்தன.
ஆனால், நாட்கள் செல்ல இதன்தாக்கமும், வீரியமும், செல்லும் தொகுதிகளில் எல்லாம் அண்ணாமலை ஆதாரத்துடன் வைக்கும் குற்றச்சாட்டுகள், மத்திய அரசின் செயல்பாடு தொடர்பான உண்மை நிலைகள் மக்கள் மத்தியில் நமது மாநிலத்துக்கு 3வதாக ஒரு தேசிய அரசியல் கட்சி தேவை என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.

பீதியூட்டிய புள்ளி விவரங்கள்

இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில், மத்தியில் 3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்றும், தமிழகத்தில் 3வது பெரிய அரசியல் கட்சியாக பாஜ உருவெடுக்கும் என்றும் வெளியானது. இதில், இப்போதைய ஓட்டு வங்கியை இன்னும் கொஞ்சம் முடுக்கினால், பாஜவுக்கு அதிகபட்சமாக 5 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று உளவுத்துறை கொடுத்த அறிக்கை, திமுகவை மட்டுமல்ல, அதிமுகவையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் பாஜ வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், திமுக, அதிமுக உள்ளடி அரசியல் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

பங்கு பிரிக்கும் பங்காளிகள்!

திமுக, அதிமுக என்பது பங்காளி கட்சிகள் என்ற நிலையில், 2 கட்சிகளின் தலைவர்களும் இதை பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘திமுகவும், அதிமுகவும் பங்காளிகள். ஆனால், பாஜ எங்களுக்கு பகையாளி. தமிழகத்தில் பாஜவை கால் பதிக்க விடவே மாட்டோம்’’என்றார்.

இதே கருத்தைத்தான் அதிமுகின் கே.பி.முனுசாமியும், ‘‘ தமிழகத்தில் பல கட்சிகள் இனி நாங்கள்தான் என்று பேசலாம். ஆனால், அது நடக்காது. தமிழகத்தில் திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும். நாங்கள் பங்காளிகள்; ஆனால் பகை எப்போதும் இருக்கும்’’என்றார்.

இந்த வகையில், திராவிடத்தின் திருட்டு பங்காளிகள், 60 ஆண்டு அரசியலில், தங்கள் கசப்புகளை மறந்து கை கோர்த்துள்ளார்கள் என்றால், அது நிச்சயம் பாஜவை எதிர்த்துதான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இதைத்தான் மக்களும், தொண்டர்களும் எதிர் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் தாமரை மலராது, நோட்டாவுடன் போட்டி என்றார்கள். ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், பாஜவுக்கு எதிராக 2 பெரும் திராவிட கட்சிகள் வெளிப்படையாக இணைந்திருப்பது, தமிழகத்தில் ஒரு வாக்கு வங்கி சுனாமி உருவாகுவதை தெள்ளத் தெளிவாக்குகிறது.