இது தான் சமூக நீதி பாடம் நடத்திய மோடி!

தமிழகத்தின் திராவிட மாடல் அரசு மீது ஏதாவது சர்ச்சை, விமர்சனம் ஏற்படும்போது எல்லாம், முதல்வர் உட்பட அமைச்சர்கள் கையில் எடுப்பது ‘சமூக நீதி’ என்ற வார்த்தையை மட்டுமே.

வந்த வழி

சமூக நீதியைக் காப்பாற்றவே உருவாக்கப்பட்ட நீதிக் கட்சியில் இருந்து வழிவந்த திமுக, தொடர்ந்து தமிழகத்தின் சமூக நீதியைக் காப்பாற்ற போராடும் என்று நம் முதல்வர் ஸ்டாலின் பேசாவிட்டால், அன்றைய நாள் ஒரு ஸ்பெஷல் என்றே சொல்ல வேண்டும்.

எது மதவாத கட்சி

எந்தக் கட்சியை மதவாத கட்சி என்று விமர்சிக்கின்றனரோ, எந்தக் கட்சியை பாசிச கட்சி என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிட்கள், ஜனதாதளம், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் விமர்சிக்கிறதோ, அந்தக் கட்சி மட்டுமே ‘சமூக நீதி’ என்றால் என்ன என்று தேசத்துக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை

காசி விஸ்வநாதர் கோயிலை கட்டுமானத்துக்கு உதவிய தொழிலாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பாதங்களை, பிரதமர் மோடி கழுவியபோது, இங்குள்ள சமூக ஊடகப் போராளிகளும், எதிர் கட்சியினரும் நாடகம் என்று விமர்சித்தனர். ஆனால், விமர்சனங்களால் வளர்ந்த மோடி, எதையும் கண்டு கொள்ளவே இல்லை.

இந்த வகையில், அவரது மரியாதையை மேலும் அதிகரிக்கும் வகையில், கடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சி அமைந்தது. வழக்கமாக டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவின்போது, விவிஐபிக்கள், விஐபிக்கள் ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்து விழாவை கண்டு ரசிப்பார்கள். இதற்கென பாஸ் வாங்குவதற்குள் பெரிய லாபியை உடைக்க வேண்டியிருக்கும்.

10% பணியாளர்களுக்கு

ஆனால், நாட்டின் 74வது குடியரசு தினத்தின் 10 சதவீத இருக்கை யாருக்கு ஒதுக்கப்பட்டது தெரியுமா? கடமைப் பாதையை நிர்வகிக்கும் தூய்மைப் பணியாளர்கள், புதிய பாராளுமன்றத்தின் கட்டுமானத்துக்கு வியர்வை சிந்திய தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினர், சிறு மளிகைக் கடையினர் என்று சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் பங்கேற்றனர்.

சாமானியர்களின் பங்கேற்ற

‘ஸ்ரம்ஜீவிகள்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள், புதிய பாராளுமன்றக் கட்டடத்தை உருவாக்கியவர்கள். இவர்களை கவுரப்படுத்தும் வகையில், குடியரசு தின விழாவின் முன் வரிசையில், ‘சாமானியர்களின் பங்கேற்பு’ என்ற கோஷத்துடன், இவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். நாட்டின் 74வது குடியரசு நாளில்தான், அவர்களால் முன் வரிசையில் இடம்பிடிக்க முடிந்துள்ளது. இந்த சாதனையை செய்ய கூடியவர் ஒருவர் தான்.
அவர் சாட்சாத் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி மட்டுமே!!!

பத்ம விருதிலும் அசத்தல்

மத்திய அரசின் பெருமை மிகு விருதுகளில் பாரத் ரத்னாவுக்கு அடுத்தபடியாக ராணுவத்தில் பரம் வீர், மகாவீர் சக்ரா விருதுகள் உள்ளன. கலை, இசை, பொது சேவையில் தன்னலம் இல்லாமல் செயல்படும் பொதுஜனத்துக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பொது ஜனம் என்றுதான் பெயர்.

எல்லாம் அன்று சிபாரிசு

பத்ம விருதிலும் பெரிய லாபி உள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்களின் பலத்த சிபாரிசு இருந்தால் மட்டுமே பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

ஆனால், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பின்னர், சமூகத்தின் நிழற்பகுதியில், விளிம்பு நிலையில் சேவை செய்து கொண்டிக்கும் நூற்றுக் கணக்கான சேவகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பாம்புபிடி வீரர்கள்

இந்த வகையில் 2023 குடியரசு தினத்தையாட்டி அறிவிக்கப்பட்ட பத்ம விருதாளர்கள் பட்டியலில், 106 பேர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் தமிழகத்தின் சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி, பின்னணி பாடகி வாணி ஜெயராம், இருளர் இனத்தின் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் உட்பட 6 பேர் தேர்வாகியுள்ளனர்.

விளிம்பு நிலை மனிதர்கள்

பத்ம விருது பட்டியல் வெளியானதும், ஒரே அதிர்ச்சி. எப்படி இப்படிப்பட்ட விளிம்பு நிலை மக்களை பிரதமர் மோடியின் அரசு அடையாளம் கண்டு கவுரவிக்கிறது என்று பலரும் ஆச்சர்யத்தில் அசந்துநின்றனர். காரணம், இந்த விருதுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டது, நிச்சயம் அவர்களுக்கே தெரியாது என்பதுதான்.

அப்படி ஒரு விருது இருக்கா??

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டிருந்த மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோர் வியப்பு நீங்காமல் சொல்லும் வார்த்தைகள்…‘‘நீங்க பத்ம விருதுக்கு தேர்வாகியிருக்கீங்கனு டிஜிபி அலுவலகத்தில் இருந்து போலீஸ் அதிகாரி பேசினார். அப்படியொரு விருது இருப்பதே எங்களுக்குத் தெரியாது.

தீடீர்னு டிஜிபி ஆபீசில் இருந்து எங்களுக்கு பேசினாங்க. என்னனு தெரியலயேனு பயமா இருந்துச்சு… பத்மஸ்ரீ விருதுனு ஒன்னு இருக்கு, அதுக்கு நாங்க தேர்வாகியிருக்கோம்னு போலீஸ் அதிகாரி ஒருத்தரு சொன்னாரு.. அப்பறம் பத்திரிகைகாரங்க சொன்னாங்க.. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சந்தோஷம்

பத்திரிகையாளர்கள் எங்களைத் தேடிவந்து சொன்னபோது, மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் 16 வயது முதல் பாம்பு பிடித்து வருகிறோம். இந்தத் தொழிலை எங்களுக்க கற்றுக் கொடுத்த கன்னிமார் சாமிக்கும், முன்னோர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

50 வகை பாம்புகள்

30 ஆண்டுகளாக பாம்பு பிடித்தாலும், 3 முறை பாம்பு கடித்துள்ளது. பச்சிலை மருந்து சாப்பிட்டு, பின்னர் முதலுதவி பெற்றுக் கொள்வோம். இதுவரை 50 வகையான பாம்புகளை நாங்கள் கையாண்டுள்ளோம். எவ்வளவு பிடித்துள்ளோம் என்று எங்களுக்கே தெரியாது. இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, அமெரிக்கா நாடுகளிலும் நாங்கள் பாம்புகள் பிடித்துள்ளோம்’’ என்கின்றனர்.

கனவிலும் நினைக்கவில்லை

எங்களைப் போன்ற பாம்பு பிடிக்கும் நபர்களுக்கும் மத்திய அரசு இப்படியோரு விருதை, தேடிப்பிடித்து வழங்கியுள்ளது என்பதை நிச்சயம் கனவிலும் நினைக்கவில்லை என்று உருகுகினறனர்.

இது தானே சமூக நீதி

ஆம், இப்படி விளம்பு நிலை மக்களையும் வியப்பில், ஆனந்தத்தில் மகிழ்ச்சியில் உருக வைப்பதுதான் உண்மையான சமூக நீதி. அதை பிரதமர் மோடி, மிகவும் துல்லியமாக கணித்துச் செய்கிறார்.