ஹலோ ஒரு நிமிடம்…

இனி இப்படித்தான்!! உங்களால் என்ன செய்து கொள்ள முடியுமோ செய்து கொள்ளுங்கள்!! என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழக மக்களுக்கு செவிட்டில் அறைந்து சொல்லி விட்டார்கள்.

ஈரோடு இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்பது போல உருமாறி விட்டது. காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும் திமுகவினர் தங்களது தன்மானப் பிரச்சினை என்றே களம் இறங்கி உள்ளார்கள்.

கடந்த 2 வாரங்களாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரிய திடல்கள் போடப்பட்டுள்ளன…

மெகா சைஸ் டிவீக்களில் புது படங்கள் ஒடுகின்றன. இட்லி தோசை பிரியாணி குவாட்டர் என்று வஞ்சமில்லாமல் உணவு வந்துக் கொண்டு இருக்கிறது.

மாலையில் வீட்டிற்கு செல்லும் போது பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் ஆண்களுக்கு குவாட்டர் பிளஸ் 500 ரூபாய் கொடுக்கப்படுகிறதாம்!!

குக்கர், கொலுசு, குடம், டிபன்பாக்ஸ், ஒட்டுக்கு பல ஆயிரங்கள் என்று பரிசு மழை கொட்டி தீர்க்கிறது. திமுக கட்சி.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியும் தங்களுக்கும் இடைத்தேர்தல் வராதா என்று ஏங்கத் தொடங்கிவிட்டன என்பதை சமூக வலைதள மீம்ஸ் காட்டுகின்றன.

எங்கே இருந்து? எப்படி இவ்வளவு பணம்? என்பது தான் கேள்வி?? பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலத்தை வாங்குவதிலும், பரிசு பொருட்களை அள்ளுவதிலும் பல கேள்விகளை கேட்டு கொள்வதே இல்லை என்பதே வேதனை.

தேர்தல் ஆணையம் தன் பங்குக்கு எங்களுக்கு ஒரே ஒரு புகார் தான் வந்துள்ளது என்று காமெடியாக ஒரு வரி கூறியுள்ளது.

‘‘ நீ எதை எடுத்தாயோ அதை இங்கே இருந்தே தான் எடுத்தாய்’’ என்ற கீதையின் வாசகம் போல, டாஸ்மாக் இல் கொடுத்த பணத்தை, வரியாக செலுத்திய பணத்தில் தான் இந்த இலவச தேர்தல் திருவிழா என்பதை மக்கள் சிந்திக்க தவறுகின்றனர்.

தரமான சாலைகள், தரமான இலவச பள்ளி படிப்பு, தரமான மருத்துவ உதவி, வேலை வாய்ப்புகள், மலிவு விலை அரசு வீடுகள் என்று உரிமைக்காக போராட வேண்டிய மக்கள் ரொட்டிக்கும், எச்ச எலும்பிற்கும் அலையும் ஜீவன்களாக எப்போது மாறிப் போனார்கள்?

தவறு யார் மீது என்று சிந்திக்க வேண்டும் அன்பர்களே!! இந்த பகிரங்க ஜனநாயக அக்கிரமங்களை தட்டிக் கேட்காத அரசு தரப்பு அமைப்புகளை என்ன சொல்வது!!

கொடூர கொலைகாரன் அப்சல் குருவுக்காக இரவு 2.00 மணிக்கு விசாரணை செய்ய கண் விழித்த நீதிமன்றங்கள், பிற மத நிந்தனை என்றவுடன் தானே முன் வந்து வழக்கை எடுக்கும் நமது நீதிமன்றங்கள் ஏன் கண்மூடி, காது கேளாது நிற்கின்றன…

ஜனநாயகத்தின் 4வது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று கயமையின் தலைமையகமாக மாறி விட்டது கொடுமை.

இந்த சொற்ப காசுக்கு ஆசைபட்டு ஒட்டை விற்றுவிட்டால் பல ஆயிரம், பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்படும் என்பதை இனி சொல்ல வேண்டும். புரிய வைத்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. ஏனென்றால் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டுமே என்று தமிழ்நாடு போதை மருந்துகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. சீரியல்கள், சினிமா, டாஸ்மாக், போதை, இலவசங்கள் என்று தமிழ்நாடு சரிந்து கொண்டே இருக்கிறது.

இனியாவது நாம் ஒவ்வொரு வரும், ஜனநாய கடமையான, நமது உரிமையான வாக்குகளை தேர்தலில் அளித்து சரியான தலைவரை தேர்ந்தெடுத்து மீட்டெடுப்போம் நமது பூமியை…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்