என் பணி கட்சியை வளர்ப்பதே…

‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’’ – என்ற திருக்குறள் மோடிக்கு தெரியும்.. அதனால் தான் தமிழகத்தில் ஒரு ஆற்றல் மிக்க தலைவரை தேர்வு செய்து களம் இறக்கி உள்ளார். தமிழக அரசியலில் வரும் லோக்சபா தேர்தல் மும்முனைக் களமாக அதிமுக, பாஜ கூட்டணியின் முறிவு உருவாக்கிவிட்டது.
இது கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், இந்த முறிவு பாஜவில் உள்ள சில சீனியர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வருங்கால தலைமுறை இளம் வாக்காளர்களுக்கு, பாஜக ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். தமிழக வாக்காளர்களை முட்டாள்களாக்கி, அரசியல் செய்வதில், திராவிட கட்சிகள் கில்லாடிகள்.

பேராசை வாக்காளர்கள்?

அதேநேரத்தில் தமிழகத்தின் வாக்காளர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. வார்த்தை ஜாலங்களுக்கும், பொய் வாக்குறுதிகளுக்கும், 500 முதல் ஆயிரம் ரூபாய் கரன்சிக்கு தங்கள் தன்மான ஓட்டுகளை விற்கத் தயங்காதவர்கள். நூற்றுக்கு 70 சதவீத வாக்காளர்கள் இப்படித்தான் உள்ளனர். இதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உணர்த்தியது.

ரூபாய்க்கு 3 படி அரிசி

ஊழலற்ற ஆட்சி செய்த காமராஜரை தோற்கடித்த ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தொடக்கத்திலேயே பொய் வாக்குறுதி கொடுத்து தான் திமுகவின் அரசியல் தொடங்கியது. மதுக்கடை திறப்பு, பின்னர் மதுஒழிப்பு என்று மாறிமாறி எத்தனையோ கோமாளித் தனங்களை 2 திராவிட கட்சிகளும் வாயால் வடைசுட்டக் கதை அதிகம். இன்னும் சொல்லப்போனால், கரோனா காலத்தில் தங்களுக்கு முழு சம்பளத்தையும் பழுதின்றி கொடுத்த பழனிசாமி அரசை கவிழ்த்தனர், அரசு ஊழியர்கள்.

பழைய பென்ஷன் திட்டம்

காரணம், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என்று திமுக கொடுத்த வாக்குறுதிதான். இலவசம், வரைமுறையற்ற இலவசம். தகுதி பார்க்காத இலவசம் என்று அடிமை வாழ்க்கைக்கு பழகிவிட்ட வாக்காளர்கள். இதுதான் தமிழக அரசியலின் இன்றைய நிலை.

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி?

தமிழகத்தில் தேசிய கட்சியாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரசை வீழ்த்திய திமுகவுக்கும், திமுகவில் இருந்து உருவான அதிமுகவுக்கும் இடையே, மற்றொரு தேசியக் கட்சியான பாஜவை ஏற்பது எளிதான ஒன்றல்ல. ஆள் பலம், அதிகாரபலம், போலீஸ் என்று தன்வசம் வைத்துக் கொண்ட திராவிட கட்சிகளின் அரசுகள், தங்களை மீறி வேறு ஒரு தேசிய கட்சி தமிழகத்தில் கால் ஊன்றாமல் கவனமாக பார்த்துக் கொண்டன.

1999 -2004 லோக்சபாவில் கோவையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, மத்திய அமைச்சர் பதவி வகித்தார். இதே திமுக கூட்டணியுடன், 2001 சட்டசபைத் தேர்தலில், டாக்டர் கிருபாநிதி தலைமையிலான தமிழக பாஜ, திமுகவுடன் கூட்டணி அமைத்தது உண்மை. ஆனால், பெரிய அளவில் வளர முடியவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலிலும் தமிழகத்தில் பாஜவை சீண்டுவார் இல்லை.

திருப்புமுனை

இதனால், 2014 லோக்சபா தேர்தலில் தமிழக அரசியலில் பாஜவுக்கு ஒரு மெல்லிய திருப்பு முனை எனலாம். அந்தத் தேர்தலில் தமிழகத்தின் ஒட்டு மொத்த எம்பிக்களையும் அதிமுக அறுவடை செய்தது. கன்னியாகுமரி, தர்மபுரியைத் தவிர. இந்த 2 இடங்களிலும் பாஜ மற்றும் அதன் கூட்டணியில் இருந்த பாமக வெற்றிபெற்றது.

களம் கண்ட பாஜக

ஆனால், எந்த ஒரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இந்தத் தேர்தலில் களம் கண்ட பாஜக, 2 எம்பிக்கள் பெற்றாலும் மொத்தம் 75 லட்சத்து 23 ஆயிரத்து 829 ஓட்டுகளை பெற்றது. இதே 2019 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜ போட்டியிட்டது. இதில், தமிழக பாஜ பெற்ற ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா? 15 லட்சத்து 51 ஆயிரத்து 924 மட்டுமே. 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2019 தேர்தலில் பாஜ இழந்தது சராசரியாக 60 லட்சம் ஓட்டுகள். இத்தனைக்கும் தமிழகத்தில் பாஜ ஆட்சியில் இல்லை, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. ஆனால், வீழ்த்தியது, திராவிட பொய், பித்தலாட்ட அரசியலும் தமிழக பாஜக தலைமையின் மென்மை போக்கும்.

அண்ணாமலையின் அறிமுகம்

தமிழக அரசியலின் திருப்பு முனை என்றால் 2021 சட்டசபைத் தேர்தல்தான். இதில் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்கிய அண்ணாமலையை, திமுக திட்டமிட்டே தோற்கடித்தது. இதில், அதிமுகவின் உள்ளடி வேலையும் அதிகம்.

இளம் தலைவர்

இதற்காகவே காத்திருந்ததுபோல், தமிழக பாஜ தலைவராக அண்ணாமலையை தேசிய தலைமை முன்னெடுத்தது யாரும் எதிர் பார்க்காத ஒரு செயல். ஏன், கட்சியின் சீனியர்கள் பலரும் இதை சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. 37 வயது இளைஞன், 70 ஆண்டு திராவிட அரசியலை எதிர்த்து எப்படி பக்குவத்துடன் விளையாட முடியும் என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம்.

ஆட்டுக்குட்டி

அண்ணாமலையா? ஆட்டுக்குட்டியா? என்று திமுகவின் ஐடிவிங் தன் பங்குக்கு மறுபடியும் நையாண்டியைத் தொடங்கியது. ஆனால், திமுக எந்த வகையில் தன்னை வளர்க்கத் தொடங்கியதோ, அதே வழியில் பயணித்து பாஜவை வளர்க்க முடிவு செய்தார் அண்ணாமலை.

அதிரடி அரசியல்

திமுகவைப் போல் பொய் புரட்டு பேசாமல், எல்லா தகவல்களையும் சரியான புள்ளி விவரங்களுடன் பொதுவெளியில் வைத்து, மக்களின் கவனத்தை கவரத்தொடங்கினார்.

அதிமுகவுக்குள் புகைச்சல்

தமிழக அரசியலில் பாஜவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது, வேறு எந்தப் பகுதிகளையும்விட, கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நிறையவே சங்கடத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம் டெல்டாவின் தாக்கம், மறு பக்கம் கொங்கு மண்டலத்தின் தாக்கம் என்று அண்ணாமலை 2 பக்கமும் களமாடத் தொடங்கினார்.

ஆதரித்த வணிகர்கள்

அண்ணாமலையின் ஐபிஎஸ் அறிவும், தொழில், பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள், புள்ளிவிவரங்கள் ஆகியவை வளரும் இளம் தொழில்முனைவோரை அதிகமாகவே கவர்ந்தது. இதனால், அவர்கள் மறைமுகமாக அண்ணாமலையைத் தேர்வு செய்தனர். காரணம், என்னதான் தமிழகத்தில் ஆட்சி செய்தாலும், ஏற்றுமதி, வணிக விரிவாக்கத்துக்கு மத்திய அரசின் உதவி அவசியம் என்றும், தங்கள் நிலையை பக்குவமாக எடுத்துச் செல்வதற்கு அண்ணாமலை தகுதியான ஆள் என்றும் அவருக்கு ஆதரவு தரத் தொடங்கினர்.

பனிப்போர்

இதை உணர்ந்த பழனிசாமி, தன் கொங்கு மண்டலத்தில், அண்ணாமலை ஊடுருவல் செய்வதை ரசிக்கவும் இல்லை, விரும்பவும் இலலை. இதனால், 2 பேர் இடையே மெல்ல மெல்ல பனிப்போர் தொடங்கி, உக்கிரமானது.

பாஜவுக்கு எந்த இழப்பும் இல்லை

தேசிய அரசியலைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடியின் தலைமையினால் ஆன அரசு, எல்லா மாநிலங்களையும் சமமாகவே பார்க்கத் தொடங்கியது, 2014 மற்றும் 2019 என்று 2 முறை ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்துக்கான நலன்களை பாஜ அரசு கொஞ்சமும் புறந்தள்ளவில்லை.

அனைவருக்கும் வீடு திட்டம், வீடுகள் தோறும் கழிப்பறைத் திட்டம், முத்ரா வங்கிக் கடன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகைத் திட்டம் என்று எல்லா வற்றிலும் தமிழகத்தை சரியான முறையில் மத்திய பாஜ அரசு முன்னிலைப்படுத்தியது.
இத்தனைக்கும், 2014 மற்றும் 2019ல் தமிழகத்தில் இருந்து பாஜவுக்கு எந்த ஒரு எம்பிக்களும் இல்லை

நலத்திட்டங்கள் பல

இந்த வகையில், இந்த 2 தேர்தல்களிலும் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டு, லோக்சபாவுக்கு அனுப்பப்பட்ட 78 எம்பிக்களாலும் தமிழகத்துக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்லை. எல்லாமே பூஜ்ஜியம்தான். ஆனால், இந்த பூஜ்ஜியத்துக்கு முன்னாள் ஒற்றை இலக்க எண்களை வைத்து, தமிழகத்துக்கான பல நலத் திட்டங்களை பாஜ முன்னெடுத்தது உண்மை.

வாக்காளர்களே!!!

இந்த 2 திராவிட கட்சிகளும் இல்லாத நிலையில், பாஜவுக்கு நேரடியான தொடர்பு வாக்காளர்கள் மட்டுமே.

‘‘நீங்கள் எங்களுக்கு ஒரு எம்பியைக் கூட கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்துக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பளவு திட்டங்கள், வளர்ச்சியை பாஜ கொடுத்துள்ளது.

வளர்ச்சி என்றால் என்ன??

நீங்கள் லோக்சபாவுக்கு 2 முறை அனுப்பிய 78 எம்பிக்களும் சாதித்தது ஒன்றும் இல்லை. மாறாக, இந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நீங்கள் எங்களுக்கு எம்பிக்களை கொடுங்கள். நாங்கள் வளர்ச்சி என்றால் என்ன வென்று, தமிழக வாக்காளர்களுக்கு நிரூபிக்கிறோம்’’ என்று பாஜ பகிரங்க அரைகூவல் விடுத்து, வாக்காளர்களைக் கவரலாம்.

பேச வேண்டும், பேசியே தீரவேண்டும்.

தமிழகம் திராவிட மாயையுடன் சேர்ந்து, சினிமாவைப் பார்த்து முதல்வர்களை தேர்வு செய்த வரலாற்றைக் கொண்டது. இப்போதைய நடிகர்களும், எந்த ஒரு இலக்கும் இல்லாமல், போதிய அரசியல், அனுபவ அறிவு இல்லாமல் அடுத்த முதல்வர் என்று தங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் பாஜவை முன்னெடுப்பது சவாலான வேலை.

என் மண் என் மக்கள்

இப்படியொரு சவாலான வேலையைத்தான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மிகுந்த நெருக்கடிக்கு இடையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது என் மண், என் மக்கள் யாத்திரை, தொடக்கத்தில் சாதாரணமாகத் தொடங்கியது. ஆனால், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும், அண்ணாமலையின் அனல் பறக்கும், புள்ளி விவரங்கள் அடிப்படையிலான பேச்சு, இப்போது அனைத்து கட்சிகளின் வாக்காளர்களையும் கவரத் தொடங்கியுள்ளது.

அலை போதும் நடுநிலை கூட்டம்

தமிழக அரசியல் இப்போது கள யதர்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இந்த நகர்தலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றார்போல், அண்ணாமலை அந்தந்த பகுதிகளின் பிரச்சனைகளை சிறப்பாக முன்னெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால், இப்போது அவரது நடை பயணத்துக்கு பாஜ தொண்டர்கள் ஆதரவு என்பதைக் கடந்து, நடுநிலையாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு என்று மாறிக் கொண்டிருக்கிறது.

அரசியல் உண்மைகள் சுடும்

ஒரு மாற்றத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு தகுந்தார்போல் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். இதைத் தான் அண்ணாமலை செய்தார். திமுகவை உருவாக்கியத் தலைவர்களில் ஒருவரான அண்ணாதுரையைப் பற்றியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது திமுக தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டதையும் சுட்டிக் காண்பித்தார். நடை பயணத்தைத் தொடங்கும் முன்னர் திமுக பைல்ஸ் 1 தொகுப்பை அண்ணாமலை வெளியிட்டபோது, அதிமுகவினர் குதுகலம் அடைந்தனர்.

மறைக்கப்பட்ட வரலாறு

ஆனால், அதேநேரத்தில் நடை பயணத்தில் அரசியலின் கருப்புப் பக்கத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை அவர் பேசத் தொடங்கியதும், அண்ணாமலை செய்யக்கூடாத தவறை செய்துவிட்டதாக அதிமுகவினர் தடதடத்தனர். இது அவர்களின் பதட்டம் என்பதுதான் உண்மை. இதுநாள் வரை திமுகவை விமர்சித்தவர், இப்போது தங்களையும் மெல்ல மெல்ல அடிக்கத் தொடங்கிவிட்டார் என்ற உண்மையை அதிமுக சீனியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

வலி

தங்களது நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தை, 37 வயது இளைஞன் ஒருவன் நொறுக்கிக் கொண்டிருப்பதை திமுக வலியுடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதிமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், அண்ணாமலையை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியே தீரவேண்டும் என்று டில்லியில் பாஜ தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.

பாஜ தலைமை பதிலடி

அண்ணாமலையின் கட்சிப் பணிகள், அவரது செயல்பாடுகள் என்று அனைத்தையும் ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை கண்காணித்துக் கொண்டிருக்கும் பாஜ தலைமை, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் என் மண், என் மக்கள் யாத்திரையால் திமுகவினர் பீதியில் உள்ளனர் என்று லோக்சபாவில் கிண்டலடித்தார். இந்தக் கிண்டல் திமுகவுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் சேர்ததுதான் என்பதை உணர்ந்த அதிமுக
தலைமை, அண்ணாமலையை மாற்றச் சொல்லும் பேச்சை கைவிட்டு, மெல்ல மெல்ல கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தது.

கூட்டணி முறிவு

கடைசியாக பழனிசாமி, வேலுமணி, தங்கமணி உட்பட அதிமுகவின் சீனியர்கள் டில்லிக்குச் சென்றனர். இதில் பழனிசாமி சென்றபோது, பாஜ தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பார்த்து திரும்பினார். மறுமுறை 2ம்கட்டத் தலைவர்கள் சென்றபோது, பியூஷ்கோயலை மட்டுமே பார்க்க முடிந்தது.

15 சீட் பேரம் தான் பிரச்சினையா?

பாஜ 13 முதல் 15 தொகுதிகளைக் கேட்டதால், அதிமுக கொடுக்க விரும்பாமல், கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது என்கின்றன செய்திகள். ஆனால், அண்ணாதுரை, ஜெயலலிதாவை தவறாக பேசியதால், கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.

பிரிவு நல்லது

அதிமுக தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அல்லது திட்டமிட்டோ இந்த முடிவை எடுத்திருந்தாலும், அரசியல் சூழலில் இந்தப் பிரிவு மிகவும் நல்ல விஷயம் என்றே பார்க்க வேண்டும். காரணம், தமிழகத்தில் தாமரை கூந்தலில் கூட மலராது என்று கிண்டலடித்த திமுக இப்போது கதிகலங்கிப்போயுள்ளது.

தில் பாஜக

அதிமுக பல்வேறு குழப்பங்களால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியைப் போல், பெரிய கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டு ஒட்டுண்ணியாக இல்லாமல், தன் சுய பலத்தை கள ஆய்வு செய்வ;தற்கான வாய்ப்பு பாஜவுக்குக் கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

உறுப்பினர்கள் எவ்வளவு??

தமிழகத்தில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்டதாக சொல்லும் திமுகவும், 2 கோடி உறுப்பினர்கள் கொண்டதாக கூறும் அதிமுகவும், தேர்தலில் தனித்து களம் கண்டதில்லை. இதில், 2016ல் போட்டியிட்ட ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கு எனலாம். காரணம், அவரது ஈர்ப்பு. இந்த 2 கட்சிகளும் போட்டியிட்டால், உறுப்பினர் அடிப்படையில் அதிமுக வெல்ல வேண்டும். கூட்டணி இல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு சாதகம். ஆனால், கூட்டணியோடு போட்டியிட்டாலும் திமுக தடுமாறித்தான் வெற்றிபெற வேண்டிய சூழல்.

சிதறும் வாக்குகள்

தமிழகத்தின் வாக்காளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நூறு சதவீதம் ஓட்டுகளை பதிவு செய்வதில்லை. காசு கொடுத்தால் ஓட்டு என்ற நிலையில்தான் உள்ளனர்.

வாக்களிக்காத ஜென்மங்கள்

ஓட்டுச்சாவடிக்கு எட்டிப் பார்க்காத வாக்காளர்களையும், இளம் தலைமுறை வாக்காளர்களையும் ஈர்க்கும் சக்தியாக பாஜ உள்ளது.

லோக்சபா தேர்தல்

2024 லோக்சபா தேர்தலில் பாஜ பெரிய அளவில் வெற்றி பெறுமா என்பதை காலம் தான் சொல்லும். ஆனால் நிச்சயம் பாஜக 5 சீட்டுக்களை வெல்லும் என்பதே அவர்களின் கணக்கு.

தாக்கம்

2026 மற்றும் 2029 தேர்தல்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அசைக்க முடியாத உண்மை. இந்த வகையில் வரும் பாஜ தலைமையில் 3வது கூட்டணி தமிழக அரசியலில் களம் காணும்போது, அரசியலின் போக்கு பெரிய அளவில் மாற்றம் காணும். மாற்றம் ஒன்றே மாறாதது. அதை பாஜ நிச்சயம் சாதித்துக் காண்பிக்கும் என்பது காலத்தின் கட்டாயம் போதும் திராவிட அரசியல் என்று தமிழர்கள் நினைக்க தொடங்கி விட்டனர்.