அனலில் தவிக்கும் தமிழகம் அட்சாரம் போட்ட அரசுத்துறைகள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காலை 10 மணி முதல் வெப்ப அலைகளின் தாக்கத்தால், மக்கள் வெளியில் நடமாடுவதற்கே அச்சப்படும் அசாதாரணமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. நாம் ஏற்கனவே அச்சம் தெரிவித்திருந்தபடி, ஆங்காங்கே வெப்பத்தாக்கு காரணமாக பல மரணங்களும் நிகழத் தொடங்கியுள்ளன. கோடையின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் கத்தரி வெயில் காலத்துக்கு முன்னரே, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் வீசத் தொடங்கும் என்று வானிலை மையமும் தன் பங்குக்கு மிரட்டிக் கொண்டிருக்கிறது.

காலை வாரிய கோடை மழை

தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மத்தியில் தொடங்கிவிட்டாலும், இப்போது மெல்ல மெல்ல உச்சம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் தமிழகத்தில் 55 முதல் 60 மீ.மீட்டர் வரை மழை பெய்திருக்க வேண்டும். அதாவது கோடை காலமாக கணக்கிடப்படும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதிவரையிலான காலகட்டத்தில் இந்த மழையளவு கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்கள் முடிந்த நிலையில் இப்போது வரை தமிழகத்தில் சராசரியாக 10 மி.மீட்டர் மழையளவு கூடபதிவாகவில்லை. இதில், மாநிலத்தின் 16 மாவட்டங்களில் நிலைமை படுமோசமாக உள்ளது என்பது வேதனையான விஷயம்.

சதம் அடிக்கும் தமிழக நகரங்கள்

தமிழகத்தில் இந்தக் கோடையின் இறுதி நாள் வரை வெயில் மக்களை வறுத்தெடுக்கும் என்பது வானிலை மையம் கூறும் நிதர்சன உண்மை. கோடை மழை பொய்த்துப் போனதால், காற்றின் ஈரப்பதமும் வெகுவாகவே குறைந்துவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் பெரும் அளவில் வறண்ட வானிலையே நிலவிக் கொண்டிருக்கிறது. இதனால், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், சென்னை, காஞ்சிபுரம் என்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்கள் எல்லாம் சராசரியாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தினமும் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இதில் ஈரோடு மாநகரம் முன் எப்போதும் இல்லாத வகையில் 108 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வெயிலில் தகித்துக் கொண்டிருக்கிறது.

இதில், ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மலைகளின் அரசியாக வர்ணிக்கப்படும் ஊட்டி கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிகப்படியான வெப்ப நிலை கடந்த 28ம் தேதி பதிவானது வருத்தமான விஷயம். 1951ம் ஆண்டில் நீலகிரியில் 29 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவான நிலையில், இப்போது அதே வெப்ப நிலையை எட்டியிருப்பது, வனத்துக்கும், மனித இனத்துக்கும் இயற்கை அடித்துள்ள எச்சரிக்கை மணி என்றே சொல்ல வேண்டும்.

வெப்பத்தை தணிப்பதில் இயற்கையின் பங்கு

கோடை காலம் என்பது பாரத தேசத்துக்கு புதிய ஒன்றல்ல. ஆனால், இந்த வெப்ப அலைகளும், வெப்பத்தின் தாக்கமும் புதியது எனலாம். கோடை காலத்தில் வெப்பம் இயற்கையின் தாக்கம் என்றால், அதன் தாக்கத்தை தணிப்பதற்கென்றே இயற்கை பல மாற்று உபாயங்களை பூமியில் படைத்துள்ளது. அந்த படைப்புகள் பக்குவமாக இருந்த வரையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவில்லை. கால சூழலும் சம நிலையில் பராமரிக்கப்பட்டது. வெப்பத்தை தணிக்க இயற்கை அளித்த அந்த கொடைகள் மரங்கள், மலைகள், ஆற்று மணல் ஆகியவைதான். இந்த 3ம் பேணிப் பாதுகாக்கப்பட்ட நாட்களில் மழையும், வானிலையும் மாற்றமின்றி தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தன. எப்போது இயற்கையை மனிதர்கள் சூறையாடத் தொடங்கினார்களோ, அப்போதே இயற்கை நம்மை தண்டிக்கத் தொடங்கிவிட்டது எனலாம்.

இதுவும் திராவிட மாடலின் சாதனைதான்

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வெப்ப அலைகள், கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இதுவும் கூட ஒரு வகையில் திராவிட மாடலின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். வெளித் தோற்றத்துக்கு எதுவும் தெரியாது. ஆனால், கூர்ந்து நோக்கினால் மாநிலத்தை சூறையாடுவதில் நீர்வளத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கனிமவளத்துறை என்று பல இற்றுப்போனதுறைகளின் கொள்ளைகளால் மாநிலம் இப்போது கடுமையான எதிர் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

நீர்வளத்துறை

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடங்கியபோது, நீர்வளத்துறை என்று தொடங்கப்பட்டு, அமைச்சர் துரைமுருகன் வசம்
ஒப்படைக்கப்பட்டது. இந்தத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையே நேரில் தலையீடு செய்து விசாரிக்கும் அளவுக்கு மணல் அள்ளுவதில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வேலூர், திருச்சி மற்றும் தஞ்சை உட்பட 5 மாவட்டங்களின் கலெக்டர்கள் அமலாக்கத்துறையில் ஆஜராகி, விளக்கம் கொடுத்தனர். காரணம், இந்தத்துறையில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக வெளியான குற்றச்சாட்டுதான்.

கனிமவளத்துறை

தமிழகத்தில் இப்படியொரு சபிக்கப்பட்டத்துறை இருப்பதால்தான் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக் கணக்கான லாரிகளில் கருங்கல், புளு மெட்டல் மற்றும் எம்.சாண்ட் ஆகியவை கேரளாவுக்கும், பிற மாநிலங்களுக்கும் தங்கு தடையின்றி கடத்திச் செல்லப்படுகிறது. இதற்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்த விளக்கம், ‘‘கனிமங்களை கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் எந்த சட்டமும் தமிழகத்தில் இல்லை’’ என்பதுதான். ஆனால், கேரளாவில் இந்த சட்டம் சிறப்பாக உள்ளது, அமைச்சருக்குத் தெரியவில்லை.

நெடுஞ்சாலைத்துறை…

தமிழகத்தின் வளர்ச்சி என்ற பெயரில், அழிவைக் கொடுக்கும் துறைகளில் ஒன்று நெடுஞ்சாலைத்துறை. சாலைகளை விரிவாக்குகிறேன் என்ற பெயரில் சாலையோரம் இருந்த 30 முதல் 40 ஆண்டு பழமையான, லட்சக் கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்த மகத்தான துறை. இப்போது வரை இந்த மரங்களுக்கு மாற்றாக எந்த ஒரு செடியைக் கூட நெடுஞ்சாலைத்துறை அமைக்கவே இல்லை. சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சில பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறை, தன் மின் ரம்பங்களை இன்னமும் கீழே வைக்காமல் அடுத்த பல ஆயிரம் மரங்களை வெட்டுவதற்கு முகூர்த்தம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈரோட்டில் கடந்த சில நாட்களில் பதிவான சராசரி வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்.

வனத்துறை…

இது ஒட்டு மொத்த ஊழல்களில் ஒரு ரகசிய குகை என்றே சொல்லலாம். அரசியல் கட்சியினர் மற்றும் சமூக விரோதிகள், வனத்துறை ஆசியுடன் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள லட்சக் கணக்கான மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். மரம் வெட்டிய தடங்களை அழிப்பதற்கு அவ்வப்போது காட்டுத் தீயை வைத்து, மிச்சம் மீதியுள்ள வளங்களையும் அழிக்கின்றனர்.

மணல், மலை, மரம் வெப்பத்தை கட்டுப்படுத்துமா?

இந்தக் கேள்விக்கு அறிவியல் ரீதியாகவே பதில் சொல்லலாம். ஆற்றில் கோடை காலங்களில் பெரிய அளவில் நீரோட்டம் இல்லாவிட்டாலும், குடிநீருக்காக திறக்கப்படும் சில ஆயிரம் கனஅடி நீரானது, மெல்லிய நீரோட்டம் வழியாக கடல் முகத்துவாரம் வரை ஓடிக் கொண்டே இருக்கும். இதனால், பகல் நேரத்தில் ஆற்றின் மேல் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்தாலும், மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும். காரணம், ஆற்றின் கீழ் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய நீரோட்டம்தான். 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாலாறு, காவிரியில் அள்ளப்பட்ட மணல், இப்போது அனல் காற்றின் தாக்கத்தை அதிகரித்துள்ளது.

மலைகள்… இவை வெப்பத்தை உள்வாங்கி, மெல்ல மெல்ல வெளியிடும். மலைகளில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து, மெல்ல மெல்ல வெப்பத்தை கசிவு முறையில் வெளியேற்றும். இப்போது பல லட்சம் கியூபிக் மீட்டர் கனிம வளம் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு, அகற்றப்பட்டதால் வெயில் உள்வாங்கும் தன்மை குறைக்கப்பட்டு, அப்படியே வெயில் பிரதிபலிக்கிறது.

மரங்கள்… கோடையின் சிறப்புகளில் ஒன்று புங்கை மரம். மற்றும் சில மரங்கள் வேம்பு, அரச மரம். இந்த 3 மரங்கள் இருந்தால் போதும். கோடையில் எந்த வீட்டுக்கும் ஏசி தேவையில்லை. காரணம், புங்கை கோடையின் வெப்பத்தை தணிப்பதற்கு என்றே இயற்கை வழங்கிய கொடை எனலாம். மரங்கள் வளர்ப்போர், மழை பெறுவோம் என்று கோஷம்போட்டுக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறை உட்பட அரசுத் துறைகளில் கடந்த 30 ஆண்டுகளில் உருப்படியாக நடவு செய்த மரங்கள் என்று எதுவும் இல்லை. சாலையின் விரிவாக்கத்தின் பெயரில் பலியிட்ட மரங்கள் அதிகம். அதிலும், இந்த 3 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மணல் வளம், மலை வளம், வன மவளம், மர வளம் என்று பாரபட்சம் இல்லாமல் கொள்ளையடிப்பது தொடர்கிறது.

திராவிட மாடல், இயற்கையால் தண்டிக்கப்படும் காலம் வெகு விரைவில் இல்லை. ஆற்றின் கண்ணீரும், மலையின் கண்ணீரும் திருடர்களின் குடும்பத்தை உலுக்கட்டும்.