ஹலோ ஒரு நிமிடம்…

ஏ.ஆர்.ரஹ்மான் சாயிராபானுவின் விவாகரத்து சர்ச்சையில் ஒரு பெரும் ரகசியம் அடங்கியுள்ளது.
இஸ்லாமிய சட்டத்தில் ஆண்கள் விவாகரத்து செய்ய விதிமுறைகள் மிக மிக எளிமையாக்கப்பட்டது. பிரதமர் மோடி தான் பல சவால்களை சந்தித்து 3 முறை தலாக் சொன்னால் போதும்! விவாகரத்து தான்!!

என்ற நிலையை மாற்றி மும்முறை தலாக் செல்லாது என்ற சட்டம் இயற்றி, தண்டனை உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இஸ்லாத்தில் மனைவிகளுக்கும் விவாகரத்துக்கான உரிமை உண்டு என்று சொன்னாலும் அதற்கு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. கணவரின் சம்மதம் அல்லது திருமணத்தின் போதே ஒப்பந்தம், கொடுக்கப்படும் மஹர் எனும் பாதுகாப்பு தொகையையோ அல்லது வேறு தொகையையோ திருப்பிக் கொடுத்தல் போல விதிகள் உள்ளன. மேலும் பல பிரிவுகளுக்கு பல்வேறு முறைகள் உள்ளன.

பாடகரின் குடும்ப சோதனைகளை பற்றி நாம் அலச விரும்பவில்லை. பல ஆயிரம் கோடிகளில் புரளும் அவர்களது பிரச்சினையை அவர்கள் சமூகமாக தீர்த்துக் கொள்வர்.

ஆனால் இஸ்லாமிய சாமானிய, மிக எளிய பெண்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை இன்று நாம் பதிவு செய்ய வேண்டும்.

ஜீவனாம்சம் என்பது இந்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டது. குழந்தைகளின் உரிமை, சொத்துக்களில் உரிமை என்று எல்லாவற்றிக்கும் சட்டத்தின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று சாய்ராபானு உலகிற்கு எடுத்து காட்டி விட்டார். ஆயிரம் கோடி நன்றிகள்.

இந்து திருமணச் சட்டங்களும், பிறகு கிறிஸ்துவ மற்றும் பிற மத சட்டங்களிலும் சட்ட பாதுகாப்போடு உறுதி செய்யப்பட்டபோது, இஸ்லாமிய மதத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது அந்த மதத்து பெண்களுக்கு வில்லங்கமாகவே முடிந்துள்ளது.

சிங்கப்பூரில் ஒரு இந்திய இஸ்லாமிய பெண் இஸ்லாமிய கணவரின் மறுமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் விவாகரத்து கோரிய வழக்கில் இஸ்லாமிய அமைப்பின் தீர்ப்பை கேட்ட அந்த மனைவி மனம் நொந்தாள். அன்று சிங்கப்பூர் மூத்த அமைச்சரான லீ குவான் யூ சிங்கப்பூர் வாழ் இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு தீர்வை அளித்தார்.

தேசிய கலை மன்றம் மூலமாக தலாக்! தலாக்! தலாக்! எனும் ஓரங்க நாடகத்தை நடத்தியது ஒரு தொண்டு நிறுவனம். அதில் உணர்ச்சி பிழம்பாக நடித்தது பாதிக்கப்பட்ட அந்த மனைவியே தான்.

3 முறை நாடகம் நடந்தவுடன் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கவே அந்த நாடகம் நிறுத்தப்பட்டது.

ஆனால் சத்தமே இல்லாமல் சிங்கப்பூர் அரசு ஒரு தீர்வை அளித்தது. திருமணம் செய்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள் தங்களது திருமணத்தை அரசின் சட்டரீதியாக பதிவு செய்து கொண்டால் மற்ற பெண்களைப் போல அரசின் பாதுகாப்பு முழுமையாக கிடைக்கும். அவர்கள் வேறு எந்த தனிநபர் கோர்ட்டுக்கும் கட்டுப்பட தேவையில்லை என்று சட்டம் இயற்றியது.

எனது வேண்டுகோள் ஒன்றுதான்! ஷர்மிளா தாகூர் முதல் கரினா கபூர் வரை ஏன் தங்களுக்கு உள்ள இந்த சுதந்திரம் தனது ஏழை சகோதரிகளுக்கு கிடையாது என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்?!

சிறுவயதில் கல்யாணம்! பல குழந்தைகள் என்று போராடும் வேளையில் இன்னொருத்தி! சட்ட பாதுகாபபு இருந்திருந்தால் காட்சிகள் வேறு!

இனியாவது வசதியான இஸ்லாமிய பெண்கள் தங்களது ஏழை சகோதரிகளுக்கு குரல் கொடுக்கட்டும். இந்திய அரசின் சட்ட பாதுகாப்பை அவர்களுக்கு உறுதி செய்யட்டும்.

பத்மினிரவிச்சந்திரன்
WWW.sudesitamil.com