பதட்டத்தில் திமுக டார்கெட் அண்ணாமலை

அரசியலில் எதிர்பார்த்தது நடக்காவிட்டால், ஏற்படும் ஏமாற்றம் எந்தளவுக்கு மன உளைச்சளை ஏற்படுத்தும் என்பதை, திமுகவின் முன்னணி அரசியல் தலைவர்கள், தங்கள் சமீபத்திய பேச்சின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக கொட்டிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் அரசியல் ரீதியான எதிர் கட்சியாக அதிமுக இருந்தாலும், அரசு வளர்ச்சி கொண்ட எதிர் கட்சியாக, பாஜ வளர்வதை, திராவிட மாயை திமுகவினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் கிள்ளுக் கீரையாக இருந்த கட்சிகளில் ஒன்றாக பாஜ இருந்தபோது, அந்தக் கட்சியின் தலைவர்களை ஏளனம் கிண்டல் செய்தவர்கள் எல்லாம், இப்போதைய வளர்ச்சியைக் கண்டு கதறிக் கொண்டிருக்கின்றனர். கதறல் இப்போது திமுகவில் மட்டுமின்றி, பாஜ கட்சிக்கு உள்ளேயே ஒலிக்கத் தொடங்கியுள்ளதுதான் ஸ்பெஷல்.

திமுக எதிர்பார்த்தது என்ன?

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜ சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் களம் இறங்கிய அண்ணாமலையை, திமுக தோற்கடித்தது. ஆனால், ஏன்தான் தோற்கடித்தோம் என்று இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறது. காரணம், சாதாரண எம்எல்ஏவாக இருந்திருக்க வேண்டிய அண்ணாமலையை, இப்போது தமிழக பாஜவின் தலைவராக்கியது, திமுக செய்த வரலாற்று தவறுகளில் ஒன்று. இப்போது அண்ணாமலை திமுக அரசுக்கு நித்தமும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்று என்ன அரசியல் பூகம்பத்தை கிளப்பப் போகிறாரோ, என்ற பீதியில் ஒவ்வொரு துறையின் அமைச்சர்களும் கலக்கத்தில் உள்ளனர். டாஸ்மாக், மின்வாரியம், ஆவின், கனிமம் என்று அரசின் முக்கியத்துறைகளை அண்ணாமலை ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

சட்டப்படியான எதிர் கட்சியாக, அதிமுக செய்யத் தொடங்கும் விஷயத்தை, அண்ணாமலை சொல்லியடிக்கிறார். இழப்பதற்கு ஒன்றும் இல்லை, இருக்கும் வரை போராட்டம் என்ற நிலையில், அண்ணாமலையின் ‘நேர்மை’ அரசியலை எதிர் கொள்ள முடியாமல், ஒட்டு மொத்த திமுகவும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மின்கட்டணம், பால் விலை உயர்வு, டேன் டீக்கு சொந்தமான 5 ஆயிரத்து 300 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை கைமாற்றிவிடுவது என்று தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, அண்ணாமலை குடைச்சல் போராட்டத்தை தொடர்வதால், திமுக செய்தறியாவது தவிக்கிறது.

ஐடி விங்
பகீரத பிரயத்தனம்

அரசியலில் உள்ளவர்களுக்கு பலவீனங்கள் மூன்று பெண்ணாசை, பொன்னாசை மற்றும் மண்ணாசை. இவற்றில் பெண்ணாசையில் அரசியல் தலைவர்களை, ‘ஹனி டிரேப்’ முறையில் வீழ்த்தி, அவர்களது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்குவது என்பது, அரசியலில் நீண்ட காலம் பின்பற்றப்படும் ஒரு முறை. இதற்கு திராவிட அரசியல் முன்னோடி! இந்த வகையில், ஹனி டிரேப் முறையில் முதலில் வீழ்த்தப்பட்டவர் பாஜவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ராகவன். இந்தப் பிரச்சனைக்கு பின்னர் அவர் அரசியலில் காணாமல் போய்விட்டார்.

குறி அண்ணாமலை?

இந்த வரிச¬யில், இப்போதைய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை குறிவைத்து திராவிட அரசியல் களம் இறங்கியுள்ளது. ஆனால், ‘‘கட்சி அலுவலகத்தில் என் அறை கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே நடப்பதை எல்லோரும் பார்க்கலாம். அதிலும், பெண் நிர்வாகிகள் வந்தால், கண்ணாடி அறை கதவின் கதவு திறந்தே இருக்கும்’’ என்று பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலையிடம், திராவிடத்தின் ஹனி டிரேப் குசும்புத்தனம் எடுபடவில்லை.
அதேநேரத்தில், அண்ணாமலை பெங்களூரில் உதவி கமிஷனராக பணிபுரிந்த நாட்களில், அவர் தவறான செயலில் ஈடுபட்டார் என்று திமுகவின் ஐடி விங்க், போலியான ஆதாரங்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் உருட்டத் தொடங்கியது. ஆனால், எதுவும் பலிக்கவில்லை.

சொந்த கட்சியில்
முட்டுக்கட்டை

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று! இது கட்சியில் அண்ணாமலையின் அசூர வளர்ச்சி. ‘‘பாஜவில் இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் மாதிரி, இப்போதைய தலைவர் அண்ணாமலையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதைவிட, ஆர்எஸ்எஸ் தலைவர் சந்தோஷின் நேரடி வளர்ப்பு. இதற்கு முன்னர் அந்த பதவியில் இருந்தவர்கள் செய்ய முடியாத பல விஷயங்களை துணிந்து செய்கிறார். பாஜவின் முந்தைய தலைவர்களுடன் ஒப்பிடும்போது, அண்ணாமலை மிக மிக ஆபத்தான மனிதர். கட்சியின் வளர்ச்சிக்காக அவர் எந்தளவுக்கும் இறங்கியடிப்பார். அவரது பேச்சை கோமாளித்தனம் என்பவர்கள், அரசியல் கோமாளி ஆகிவிடுவார்கள்’’ என்று தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான மணி தன் பேட்டிகளில் சொல்வது உண்டு.

3வது கட்சி

இதுதான் கள நிலவரமும் கூட. அண்ணாமலை, தமிழக பாஜ தலைவராக பொறுப்பேற்றது முதல், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் செல்லும் பாதையில் உள்ள தடைகளை எல்லாம் அசால்டாக தூக்கி விட்டெறிந்து பறக்கிறார். உண்மையில், இன்றைய தமிழக அரசியலில், தமிழகத்தின் 3வது பெரிய அரசியல் கட்சியாக, பாஜவை அண்ணாமலை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

கள அரசியல்

கட்சியில் தனக்கு முன்னாள் இருந்த தலைவர்கள் அறிக்கை, பேட்டி அரசியல் நடத்திக் கொண்டிருந்த நிலையில், அண்ணாமலையின் கள அரசியல், அவரை இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலம் மட்டுமல்ல, டெல்டாவிலும், தென் மாவட்டங்களிலும் அதிகப்படியான இளைஞர்கள் பாஜவில் இணைய, அண்ணாமலையின் துணிச்சலும், அரசியல் நகர்வும் ஒரு காரணம்.

திண்டுக்கல்லில் நிகழ்ந்த மாயஜாலம்

நவம்பர் 11ம் தேதி திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரதமர் மோடி, வானிலை மோசமானதால், மதுரைக்கு ஹெலிகாப்டரில் பயணிப்பதை ஒத்திவைத்தார்.

காரில் பயணம்

சாலை மார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு பயணித்தார். அவரது குண்டு துளைக்காத காரில், யாரும் பயணிக்கவே முடியாது. பிரதமரும், டிரைவரும் மட்டும்தான் பயணிக்க அனுமதி. அப்படிப்பட்ட சூழலில், கட்சித் தொண்டர்களுடன் ஒருவராக ஒதுங்கி நின்ற அண்ணாமலையை, பிரதமர் மோடி தன் கார் பயணத்தில் உடன் இணைத்துக் கொண்டார்.

திண்டுக்கல் தொடங்கி, மதுரை விமான நிலையம் வந்து சேரும் வரை, காருக்குள் 2 பேரும் பேசிக் கொண்டது, அரசியல் தவிர ஒன்றும் இருக்கப்போவது இல்லை. ஆனால், இந்தப் பயணத்தால் பிரதமர் மோடிக்கு நிகரான, அரசியல் எதிரிகளை அண்ணாமலை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனமாகிவிட்டது.

அரசியல் சூறாவளி

தமிழகத்தில் ஒரு அரசியல் களத்தில் வெகு ஆபத்தான ஒரு பயணத்தை அண்ணாமலை மேற் கொண்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கட்சிக்காக, குடும்பத்தை ‘ரிஸ்க்’கில் நிறுத்திய பாஜ பிரமுர்கள் யாரும் இல்லை. அதேநேரத்தில், பிரதமர், மோடியுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்காத தமிழக பாஜ தலைவர்கள், சிலர் வருத்தத்தில் இருந்தது உண்மைதான்.

வெளியானது ஆடியோ டேப்

தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜவின் வளர்ச்சியை, எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவலாக கிடைத்தது, 2ம் கட்டத் தலைவர்களான சூர்யா, டெய்சியின் போன் உரையாடல். இந்த ஆடியோ வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளத்தில் ஒரு சவால் விடுக்கப்பட்டது. திருச்சி சூர்யாவிடம், அண்ணாமலையின் உருட்டல்கள் பலிக்காது என்று, திமுக ஐடிவிங் வீடியோ உருட்டலைத் தொடங்கியது. ஆனால், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சூர்யாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதித்து, 2 பேரும் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அடுத்தகட்டமாக, காயத்ரி ரகுராமை 6 மாதம் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்வதாக அதிரடித்தார். இதற்கு காயத்ரி ரகுராமின் சில பேச்சுக்களும் காரணம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் நீண்ட நாள் உழைத்தோம் என்ற அவரது பேச்சு, 10 ஓட்டுகளைத் கூட தேற்றாது என்ற நிலையில், பேச்சுக்கு முட்டுக் கட்டைப்போடும் வகையில் 6 மாதம் நீக்கம் என்று அதிரடித்தார். அதேநேரத்தில், ஆடியோ டேப்பை வைத்து, அண்ணாமலையை அசைத்துவிடலாம் என்று மனக்கணக்குப் போட்ட திமுக ஐடிவிங், இப்போது ஆப்பசைத்த குரங்காக மாறிவிட்டது என்பது உண்மை.

பீதியில் திமுக தலைவர்கள்

எந்த வகையிலும் பாஜவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முடியாமல் தவிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின், தன் கட்சியின் அமைச்சர்கள் வழியாக பேட்டிகள், பதில்கள் என்று பம்மிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. ஒரு அண்ணாமலை பேசினால், 3 அமைச்சர்கள் அதற்கு விளக்கம் / பதில் சொல்ல வேண்டிய நிலைமையில், இன்றைய தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

திமுகவின் பயம்

‘‘அதிமுகவை பற்றி பிரச்னையில்லை. ஆனால், பாஜ ராட்சசன், பிசாசு மாதிரி வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும்’’ திமுக பொதுச் செயலாளர் துரைமுகனின் பேச்சும், ‘‘பிசாசு இல்லை. ஆனால், இருப்பதாக சொல்லி உடுக்கு
அடித்தால்தான், பிழைப்பு ஓட்ட முடியும்’’ என்ற ஆண்டிமுத்து ராஜாவின் பேச்சும், இன்றைய திமுகவின் இயலாமையை படம் பிடித்துக் காண்பிக்கிறது.

பிதற்றல்

இன்னும் ஒருபடி மேலே போய், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
‘‘ஐபிஎஸ் படித்து, வேலையை விட்டு அரசியலுக்கு வருபவர்கள் மென்டல்கள். இதில் கவர்னரும், அண்ணாமலையும் ஐபிஎஸ் அதிகாரிகள். ஆனால், நான் எல்லோரையும் சொல்லவில்லை. திமுகவுக்கு துரோகம் நினைப்பவர்கள் நிலை என்னவாகும் தெரியுமா? ஒன்று கோர்ட்டுக்கு / சிறைக்கு செல்வார்கள். இல்லாவிட்டால் கை, கால் இல்லாமல் போவார்கள்’’ என்று நெல்லையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டத்தில் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். இப்படித்தான் திமுக தலைவர்கள் மேடைகளில் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அரவக்குறிச்சியில் பதில் சொன்ன அண்ணாமலை

திமுகவின் இன்றயை தலைவர்கள் பேசுவதற்கு தன் பதில் எப்படி இருக்கும் என்று, 2021 சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை சொன்ன பதிலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்பி அடிப்பேன்

குறிப்பாக, மின்சாரம் மற்றும் டாஸ்மாக்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுத்த பதில். இணையத்தில் உலவும் இந்த வீடியோ இப்போதும் உள்ளது. ‘‘இந்த ரவுடியிசம், பயமுறுத்துவது எல்லாம் என்னிடம் வேண்டாம். பெரிய பெரிய ரவுடிகளை பந்தாடிவிட்டுத்தான் களம் வந்துள்ளேன். என்னிடம் தேவையில்லாத சீண்டலை வைத்துக் கொண்டால், அதன் விளைவு வேறு மாதிரியாக இருக்கும்’’ என்று அண்ணாமலை அன்றே பதில் சொன்னார். மற்றொரு பேட்டியில், ‘‘ஒரு கன்னத்தை அடித்தால், மறு கன்னத்தை காண்பிக்க நான் ஒன்றும் இயேசுநாதர் அல்ல. அடிப்பேன் திருப்பி அடிப்பேன். 2 மடங்காக அடிப்பேன். அன்பு கொடுத்தால் 2 மடங்காக திரும்பக் கிடைக்கும். மரியாதை கொடுத்தால், 2 மடங்கு மரியாதை கொடுப்பேன். மாறாக, எதிர்வினை அரசியல் செய்தால், 2 மடங்கு திருப்பி அடிப்பேன்’’ என்று அண்ணாமலை சொன்ன பதில், அரசியல் நேர்மைக்கு ஒரு உதாரணம்.

நிற்குமா களையெடுப்பு?

எந்த ஒரு கட்சியில் புதிதாக இணைய வரும் தொண்டர்களிடம் நீங்கள் நன்னடத்தைச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று இப்போது வரை எந்தக் கட்சியும் கேட்டது இல்லை. இதற்கு பாஜவும் விதிவிலக்கு அல்ல. இந்த வகையில், திருச்சி சூர்யா, டெய்சி பிரச்சனையில், அண்ணாமலையின் நடவடிக்கை நியாயமான ஒன்றுதான். இன்னமும் சொல்லப்போனால், சைதை சாதிக் என்ற திமுகவின் பேச்சாளரின் நடத்தையுடன் ஒப்பிடும்போது, பாஜ இன்னும் ஒருபடி நாகரிக அரசியலில் முன்னேறியுள்ளது என்பதே உண்மை.

யாரும் சீட் தேய்க்க முடியாது

அதேநேரத்தில், ‘‘கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. கட்சி என்பது ஒரு பஸ். டிரைவர் என்பவர் தலைவர். பொதுச் செயலாளர் என்பவர் கண்டக்டர். எந்த நிறுத்தத்தில் யாரை இறக்கி, ஏற்றனால் பயணம் சிறப்பாக இருக்கும் என்பது முடிவு செய்து செயல்பட வேண்டும். நான் சீனியர் என்று கூறி, கட்சியில் சீட் தேய்க்க முடியாது. யாருக்கும் பதவி நிரந்தரம் இல்லை. நான் அடிப்படைத் தொண்டன். இந்தப் பதவி இல்லாவிட்டாலும், என் தோட்டமும், விவசாயமும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது’’ என்று தெளிவான ஒரு பதிலை அண்ணாமலை பதிவிட்டுளளார். இந்தத் தெளிவு வந்துவிட்டால், யாரையும் அசைதப்பது கஷ்டம்தான். திராவிட அரசியல்வாதிகளுக்கு நேரம் சரியில்லை என்பதைத் தவிர, சொல்வதற்கு ஒன்றும் இல்லை.