‘பிரதமர் மோடி, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி…’ இப்படி ஓயாமல் கதறிகதறி மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த, காம்ரேடுகள், காங்கிரஸ், திமுக மற்றும் இன்னும் பில சில்லறைக் கட்சிகளின் அரைகூவல்கள் இப்போது எங்கே சென்றது தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக டில்லியில் மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறைக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையேயான பொருளாதார மல்லுக்கட்டு, இப்போது உச்சத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசின் இரும்புப் பிடிக்குள் சிக்கி, ஐடியா வோபோன், பார்தி ஏர்டெல், டாடா உட்பட பல நிறுவனங்களும் கண்ணீர் விட்டு கதறத் தொடங்கியுள்ளன.
சலுகை கொடுத்த மத்திய அரசு…
இந்தியாவில் பிஎஸ்என்எல் என்ற மத்திய அரசு நிறுவனம் மட்டுமே தொலைத் தொடர்புத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு இணைப்பு கேட்டால், பதிவு செய்து, 6 மாதங்களுக்குப் பின்னர் ஆள் அனுப்பி, இடம் பார்த்து, தடம் பார்த்து சேவை வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், 1991ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங், சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் பாதையைத் திறந்துவிட்டார். இங்கே பிறநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கினாலும், தகவல் தொடர்பு கட்டமைப்பு சிறப்பாக இல்லை என்பதால், 1994ம் ஆண்டு முதல் தொலைத் தொடர்புத்துறையில் தாரளமயக் கொள்கை கொண்டுவரப்பட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்து போட்டியாக பார்தி ஏர்டெல் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மெல்ல மெல்ல இந்தியாவில் கால் பதிக்கத் தொடங்கின. ஏர்செல், ஐடியா, ஹட்ச் (இப்போ வோடபோன்) என்று ஒவ்வொரு தனியார் நிறுவனங்களாக கடை விரித்தன. இதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் ஒரு சின்ன வைப்ரேசனோடு உள்ளேவந்தது. இப்படி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட சூழலில், கட்டுப்பாடு இல்லாமல் சேவை வழங்கும் உரிமையை மத்திய அரசு இந்நிறுவனங்களுக்கு வழங்கியது.
அலைக்கற்றை உரிமைத் தொகை…
மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, தனியார் நிறுவனங்களுக்கு 1994ம் ஆண்டு முதல் லைசென்ஸ் வழங்குவதில் ஒரு சுதந்திரமான முறையைப் பின்பற்றியது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிப்பு செய்வதுடன், உரிமக் கட்டணத்தையும் செலுத்தியாக வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் அரசுக்கு சொற்மான அளவுதான் வருமானம் வந்தது. இன்னும் சொல்லப்போனால், இந்தப் பணத்தைக் கொண்டு தொலைத் தொடர்புத்துறையின் டீ செலவைக் கூட சமாளிக்க முடியாது என்ற நிலைதான் ஏற்பட்டது.
இந்நிலையில், 1999ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பம்பர் பரிசு வழங்கியது. அதாவது, உரிமத் தொகையை ஆண்டு தோறும், அந்நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதியில் இருந்து பகிர்ந்து கொள்வது என்பதுதான் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ், பல நிறுவனங்கள் தொடக்கத்தில் ஒழுங்காக தங்கள் வருமானத்தின் ஒருபகுதியை உரிமக் கட்டணம் மற்றும் லைசென்ஸ் கட்டணமாக செலுத்திக் கொண்டிருந்தன.
விளைந்தது சிக்கல்…
இந்தத் திட்டத்தின் கீழ் 2004ம் ஆண்டுக்குப் பின்னர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்
தங்கள் வாலாட்டத்தை தொடங்கின. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ், சரி செய்யப்பட்ட வருமானத்தின் ஒரு பங்காக, லைசென்ஸ் கட்டணத்தை செலுத்த வேண்டுமா? ஏன் அரசுக்கு இந்த வருமானத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அதிலும் கை வைக்கத் தொடங்கின. அனுமதி கொடுத்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம், கேட்டபோது, பணத்தை அப்புறம் கொடுக்குறோம். கடனில் இருக்கிறோம் என்று கதைவிடத் தொடங்கின. இந்த வகையில் மொத்த வருமானத்தில் அரசுக்கு 8 சதவீதம் செலுத்த வேண்டிய தொகையை கொடுக்காமல், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அல்வா கொடுக்கத் தொடங்கின.
அமைச்சர்களின் அமைதியும், ஊழல்களும்…
இந்தப் பிரச்னையால் தொலைத் தொடர்புத்துறை நெருக்கடியில் இருப்பது, 2004 மே மாதம் அந்தத் துறைக்கு அமைச்சராக பதவியேற்ற தயாநிதி மாறனுக்கும், 2007ம் ஆண்டு அந்த இடத்துக்கு வந்த ஆண்டிமுத்து ராசாவுக்கும் தெரியும். ஆனால், இந்தப் பிரச்னை மட்டுமல்ல, தொலைத்தொடர்புத் துறையில் உயர் அதிகாரிகளுடன் கை கோர்த்துக் கொண்டு, பல்வேறு ஊழல்களையும் கண்டும் காணாமல் இருப்பதற்காக இவர்களுக்கு வழங்கப்பட்ட ‘பலன்’கள் என்ன என்பதை நாடே அறியும். பிஎஸ்என்எல் இணைப்பு ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல்கள் என்று பல்வேறு ஊழல்களில் சிக்கித் திளைத்த தயாநிதி மற்றும் ஆண்டிமுத்து ராசாவுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை என்பதால், தொலைத் தொடர்புத்துறையை டீலில் விட்டனர்.
வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்கு கட்டணமாக செலுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது?
கோர்ட் படியேறிய தனியார் நிறுவனங்கள்
உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை சேவைக் கட்டணமாக, சரி செய்யப்பட்ட வருமானத்தில் 8 சதவீதம் வழங்க வேண்டும் என்ற தொலைத்தொடர்புத்துறையின் முடிவக்கு எதிராக செல்லுலார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு, தொலைத் தொடர்புத்துறை செட்டில்மென்ட் டிரிபியூனலில் 2005ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் போக்கைத்தான் மேற்கண்ட தயாநிதி, ஆண்டிமுத்துராசா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். 2005ல் தொடங்கிய இந்த வழக்கில் 2015ம் ஆண்டு தொலைத்தொடர்பு மேல் முறையீட்டு அமைப்பு, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனால், தொலைத் தொடர்புத்துறை நொந்துபோனது. ஆனாலும், துறையின் அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் விடாப்பிடியாக, இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
சுப்ரீம் கோர்ட் கொடுத்த சவுக்கடி?
அரசின் அனுமதியுடன், மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்கள் உரிமக் கட்டணத்துக்காக, சரி செய்யப்பட்ட வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்கு கட்டணமாக செலுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? இந்த வகையில் மத்திய அரசுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது. இந்தத் தொகையை மத்திய அரசுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தாமதம் இல்லாமல் செலுத்தியாக வேண்டும். இந்தப் பணத்தை வட்டியுடன் வசூலிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த வகையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. ஆனாலும், தன் தீர்ப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியது.
எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகை?
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல், ஐடியா வோடபோன், டாடா ஆகிய நிறுவனங்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் கூறிவருகிறது. ஆனால், இந்நிறுவனங்கள் தங்கள் சொந்த ஆடிட்டிங் முறையில், கணிசமான அளவுத் தொகையை குறைத்துக் காண்பித்துள்ளன. இதன்படி, டாடா நிறுவனம் 15 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், தான் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயை மட்டும் செலுத்த வேண்டியள்ளதாகவும், அதையும் செலுத்திவிடுவதாகவும் டாடா கூறியுள்ளது. இதேபோல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் மொத்தம் 53 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. இதில், இதுவரை 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மட்டுமே செலுத்தியுள்ளன. பார்தி ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய 35 ஆயிரம் கோடி ரூபாயில், இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் செலுத்தியுள்ளது. மீதம் உள்ள 25 ஆயிரம் கோடி ரூபாயை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்திவிடுவதாக கூறியுள்ளது.
மிரட்டிய நிறுவனங்களை கெஞ்ச வைத்த மோடி…
மத்திய அரசு, ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்திய தீரவேண்டும் என்று கூறிவிட்டது. ஐடியா, வோடபோன் நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லை. இதனால், இந்தத் தொகையை செலுத்த நெருக்கடி கொடுத்தால், நாங்கள் தொழிலைவிட்டு வெளியேறுவோம். இந்தியாவில் ஐடியா, வோடபோன் சேவை நிறுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் குமார்மங்கலம் பிர்லா, கடந்த ஆண்டு டிசம்பரில் எச்சரித்து இருந்தார். இதனால், இந்த நிறுவனங்களை நம்பி கடன் கொடுத்திருந்த எஸ்பிஐ உட்பட பொதுத்துறை வங்கிகள் கதிகலங்கிப்போயின.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல், ஐடியா வோடபோன், டாடா ஆகிய நிறுவனங்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் கூறிவருகிறது.
இதில், எஸ்பிஐ வங்கி மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்தத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருந்தது. இந்தச் சூழலில், வங்கிகளின் வராக்கடன் தொகையை, அதிகரிக்கச் செய்யும் வகையில், ஐடியா வோடபோனின் மிரட்டல் இருந்தது. இந்தப் பிரச்னையை லாவகமாக கையாள நினைத்த மோடியின் அரசு, வேறு வகையில் இந்நிறுவனங்கள் மீது கை வைத்தது. இதனால், 2 மாதத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது.
மிரட்டிய நிறுவனங்கள் எல்லாம் கெஞ்சத் தொடங்கிவிட்டன. ‘‘மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை நாங்கள் முறைப்படி செலுத்திவிடுகிறோம். ஆனால், எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். எங்களை நம்புங்கள்’’ என்று கதறிக் கொண்டிருக்கின்றன.
மேக் இன் இந்தியா திட்டத்தில் பல உதவிகளை செய்து வரும் பிரதமர் எதிர்பார்ப்பது எல்லாம் நிறுவனங்களின் லாபத்தில் முறையாக அரசுக்கு சேர வேண்டியதை கட்டுவது மட்டும்தான்.