டில்லி தேர்தல் சொல்லும் பாடம் காங்கிரசுக்கு மட்டுமல்ல பாஜவுக்கும்தான்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி சட்டசபைத் தேர்தல், பெரிய பாடம் நடத்தியே நடந்து முடிந்துள் ளது. ‘‘டில்லியில் பாஜவுக்கு தோல்வியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி’’ என்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தின் டுவிட்டுக்கு, முன்னாள் நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான பிரணாப்முகர்ஜி யின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘பாஜவை தோற்கடிக்கும் பணியை, மாநில கட்சிகளுக்கு கொடுத்துவிட்டால், தேசிய கட்சியாக நாம் இருந்து என்ன பயன்’ என்று சிதம்பரத்தை ஷர்மிஸ்தா முகர்ஜி விளாசியிருப் பது, அவர்களது உட்கட்சி விவகாரம் என்று கூறிக் கடந்துவிட முடியும். ஆனாலும், இந்தத் தேர்தலில், நடந்த பல விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, டில்லியில் நடத்தப் பட்ட அரசியல் நாடகங்கள். காய் நகர்த்தல்கள், கூட்டணிக் கணக்கு கள், மதவாத ஓட்டுகள், இலவச அறிவிப்புகள். இத்தனை நாடகங்க ளுடன், கூடவே என்று பாஜவுக்கு எதிராக டில்லியில், களம் இறக்கப்பட்ட நூற்றுக் கணக்கான போராட்டங்கள். அதிலும் குறிப்பாக, டில்லி ஜாமியா பல்கலைக் கழகம், ஜேஎன்யூ பல்கலைக் கழகம், ஷாகின்பாக் போராட்டங்கள் என்று நிறைய பட்டியல்களைக் கூறலாம்.

எத்தனை நாடகங்கள், போராட் டங்கள் நடத்தி வெற்றிபெற்றாலும், அரசியல் ரீதியாக ஆம்ஆத்மி பெற்ற வெற்றியை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இல்லை. இப்படிப் பட்ட தத்ரூப அரசியல், மதவாத அரசியல் நடத்தி வெற்றிபெற்றதற் காக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்
கொள்ளலாம்.

டில்லியில் நடந்த அரசியல் விளையாட்டுகள்

கடந்த டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கும், டில்லி சட்டசபைத் தேர்தல் அறிவிப் புக்கும் ஏறக்குறைய பொருத்தம் அதிகமாகவே இருந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத் தால், இந்தியாவின் குடிமகன் களாக உள்ளவர்கள் யாருக்கும், எந்த ஒரு பாதிப்பும் இல்லாவிட் டாலும் கூட, காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி, பட்டும் படாமலும் கலந்து கொண்டாலும், அதன் மறைமுக அரசியல் மிகவும் மோசமாக இருந்தது.
சிஏஏ சட்டத்துக்கு எதிராக டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில், நடந்த போராட்டங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள். அதாவது, பொய்யை மீண்டும் மீண்டும் உண்மையாக்கும் முயற்சியில், இடதுசாரிகள், காங்கிரஸ் மிகவும் தீவிரமாகவே இருந்தனர். இதில், ஷாகின்பாக் போராட்டங்கள் சகிக்க முடியாதவை. திட்டமிட்டே நடத்தப்பட்ட, சட்டவிரோத போராட்டங்கள்.
டில்லி சட்டபைத் தேர்தல் முடியும் வரை, ஷாகின்பாக் போராட்டங்களை ஆம் ஆத்மி சூடு குறையால் பார்த்துக் கொண்டது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். இந்தப் போராட்டக்காரர் களுக்கு உணவும், ஊக்கமும் கொடுத்தது ஆம் ஆத்மியின் கைங்கர்யம் என்றே சொல்ல வேண்டும்.

ஆம்ஆத்மியின் மதவாத அரசியல்

டில்லியில் மட்டும் ஆயி ரத்து 500க்கும் அதிகமான மசூதிகள் உள்ளன. இந்த மசூதிகளை ஒரு ஓட்டு சேகரிப்பு மையமாகவே ஆம் ஆத்மி பயன் படுத்திக் கொண்டது. என்னதான் மதச்சார்பின்மை சாயத்தை பூசிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஓட்டு மதவாத அரசியலில் ஆம் ஆத்மி மிகத் தீவிரமாக ஈடுபட்டது. மசூதிகளின் உலமாக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 2 மடங்காக உயர்த்திக் கொடுப்பது, இலவச மின்சாரத்தின் அளவை அதிகரிப்பது உட்பட பல்வேறு வகைகளில், ஆம் ஆத்மி தன் மறைமுக ஆதரவை முஸ்லிம்களுக்கு கொண்டு சென்றது. இதற்காக, தன் கட்சியில் உள்ள முக்கிய முஸ்லிம் தலைவர்களை பயன் படுத்திக் கொண்டு, டில்லி முழுவதும் உள்ள மசூதி களில் சிறப்புக் கூட்டம் நடத்தி, ஓட்டுகளை சிதறவிடாமல் பார்த்துக் கொண்டது. மதச்சார்பின்மை நாட் டில், இப்படி மதம் சார்ந்து ஓட்டுகளை சேகரிப்பதும் ஒரு ராஜதந்திரம்தான். இதை பாஜ கண்டு கொள்ளதது, அதன் சரிவுக்கு ஒரு பிரதான காரணம்.

ஜாமியா பல்கலை துப்பாக்கிசூடு

டில்லி சட்டபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஒருபுறம் தீவிரமாக இருக்க, ஓட்டுப்பதிவுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடும், ‘என் பிணத்தின் மீது காவித்துண்டு போர்த்துங்கள்’ என்ற அவரது முகநூல் வாசகமும், மிகவும் துல்லியமான, திட்டமிட்ட ஒரு நாடகம். மாணவர் கள் மத்தியில் துப்பாக்கி சூடு நடத்தினால், அதிலும் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில், துப்பாக்கி சூடு நடந்தால் என்னநடக்கும் என்று சாதாரண நபருக்குத் தெரியும் என்ற நிலையில், இந்த நாடக துப்பாக்கி சூட்டை பாஜவுக்கு எதிரான அமைப்புகள் மிகச் சிறப்பாக அரங் கேற்றினர் என்றே சொல்ல வேண்டும். அதாவது, மக்களை கடைசிவரை அச்சத்தில் வைத்திருக்க
வேண்டும், ஓட்டுப்போடும் வரை அவர்களது குழப்பம் தெளியக்கூடாது என்பதில் காங்கிரசை விட, ஆம் ஆத்மி மிகத் தீவிரமாக இருந்தது.

கெஜ்ரிவாலின் ஐஐடி மூளையும், பாஜவின் உறுதியும்

டில்லிவாழ் மக்களுக்கு வளர்ச்சியை, தூய்மையான நகரத்தைக் கொடுக்க பாஜ தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆம் ஆத்மி கட்சியோ மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம். அதேநேரத்தில், 201 முதல் 400 யூனிட் வரையிலான மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம். ஒவ்வொரு சட்டபைத் தொகுதியில் இருந்தும், ஆயிரத்து 100 முதியவர் கள் புனிதப் பயணம், 5 ஆண்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எம்ஆர்ஐ ஸ்கேன் இலவசம். மாதத்துக்கு ஒரு குடும்பத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசம். பணிபுரியும் பெண்களுக்கு பஸ் மற்றும் மெட்ரோவில் இலவச பயணம் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்துதான் கெஜ்ரிவால் ஒட்டு களை சேகரித் தார். இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தின் இலவச அரசியலை கெஜ்ரிவால் முன்னெ டுத்துள்ளார். இதில், ஹைலைட், வீட்டுக்கு வீடு ரேசன் விநியோ கம். ஆனால், இதில் எந்த ஒரு இலவசத்தை யும் பாஜ அறிவிக்க வில்லை. டில்லியின் கட்டமைப்பு வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றைத்தான் பாஜ முன்னெடுத்தது. தமிழக மீடியாக்கள் கொண்டாடு வது, கெஜ்ரிவாலின் இலவச அறிவிப்பு அரசியல் வெற்றியைத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது காங்கிரஸ் கட்சியின் உள்ளடி வேலை

டில்லி சட்டசபைத் தேர்தல் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் முகம் வாடிவிட்டது. பாஜ தலைவர்களுக்கு இருந்த உற்சாகம்கூட, காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும், அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா உட்பட யாருக்கும் இல்லாமல் போனதில் வியப்பில்லை. காரணம், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் தோல்வியடையும் என்று கூறியிருந்தனர். இதனால், காங்கிரஸ் கட்சி பெயரளவுக்கு வேட்பாளர்களை அனைத்துத் தொகுதிகளில் நிறுத்தியிருந்தாலும், அதன் நோக்கம் எல்லாம் பாஜவை டில்லியில் தோற்கடிப்பதில்தான் இருந்தது என்பது அசைக்க முடியாத உண்மை. இன்னும் சொல்லப்போனால், தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர், ‘நமக்கு ஒரு கண்ணு போனால், எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகணும்’ என்ற சித்தாந்தத்தில் களம் இறங்கிவிட்டனர். இதனால், பாஜவுக்கு எதிரான ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் ஆம்ஆத்மிக்கு கொண்டுபோய் சேர்க்கும் வேலையைப் பார்த்தனர். இதன் விளைவுதான், காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது.

டோன்ட் வொரி காவிஸ்…

டில்லி தேர்தல் பாஜவுக்கு கொடுக்கப்பட்ட மரண அடி என்று எதிர்கட்சிகளும், டில்லியில் துடைத்தெரியப்பட்ட காம்ரேட்களும் புலகாங் கிதம் அடைந்து கொள்ளலாம். ஆனால், உண்மை யில், கடந்த சட்டசபைத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் பாஜ தன் வலுவான வாக்கு வங்கியை நிரூபித்துள் ளது. கடந்த தேர்தலில் 3 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றிருந்த பாஜ, இந்தத் தேர்தலில் 5 எம்எல்ஏக்களை வென்றெடுத்துள்ளது. பாஜவை கிண்டலடித்த கட்சிகளில் எதுவும் ஒரு சீட்கூட வெல்லவில்லை என்பது, வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இதில், ஓட்டு சதவீதம் கவனிக்க வேண்டிய விஷயம். வாட்ஸ் அப் பக்கங்களில் பாஜ, பல தொகுதிகளில் 100 முதல் ஆயிரம் ஓட்டுகளில் தோற்றதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். ஆனால், நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஓட்டு சதவீதம் கூடியுள்ளதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள மறுக்கின்றன. 2015 சட்டபைத் தேர்தலில் ஆம்ஆத்மி வாங்கிய ஓட்டுகள் 48 லட்சத்து 79 ஆயிரம். இந்தத் தேர்தலில் ஆம்ஆத்மியின் ஓட்டுகள் 49 லட்சத்து 74 ஆயிரம். பெரிய அளவில் வளர்ச்சி, வித்தியாசம் இல்லை.

ஆனால், பாஜவின் வளர்ச்சியே வேறு. 2015ல் கிரண்பேடி தலைமையில் தேர்தலை சந்தித்தபோது பாஜ பெற்ற ஓட்டுகள் 28 லட்சத்து 91 ஆயிரம். இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காத நிலை யிலும், 35 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியுள்ளது. சதவீத அடிப்படையில் 6.21 சத வீதம் கூடுதல் ஓட்டுகளை பாஜ பெற்றுள்ளது. அதே நேரத்தில், சதவீத அடிப்படை யில் 0.73 சதவீதம் ஓட்டுகளை ஆம் ஆத்மி இழந்துள்ளது. ஆம் ஆத்மி, தன் வெற்றியைக் கொண்டாடினாலும், ஓட்டுகள் இழந்தது, அந்தக் கட்சிக்கு கவலையாகத்தான் இருக்கிறது.

காணாமல் போனது காங்கிரஸ் கட்சி

பாஜவின் வெற்றிகரமான தோல்வியை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி, டில்லியில் இருந் ததா? என்று யோசிக்க வைத்துவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 67 ஆயிரம். அதாவது, மொத்த ஓட்டுப் பதிவில் 9.7 சதவீதம். இது அதற்கு முந்தைய தேர்தலைவிட 14.9 சதவீதம் குறைவுதான். ஆனால், இந்தத் தேர்தலில் நிலைமை, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. நடந்து முடிந்தத் தேர்தலில் டில்லி மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரம் மட்டுமே. அதாவது, முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது 5 லட்சம் ஓட்டுகள் அவுட். ஓட்டு சதவீதம் 5.44 சதவீதமாகிவிட்டது. இந்த லட்சணத்தில்தான், பாஜவின் வெற்றிகரமான தோல்வியை, தேசிய அளிவில் காங்கிரசும், தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட பலரும் கொண்டாடு கின்றனர்.

துணிந்து நில், தொடர்ந்து செல்…

எந்த ஒரு இலவசமும் இல்லாமல், கடந்த சட்டசபைத் தேர்தலைவிட, 7 லட்சம் ஓட்டு களை பாஜ கூடுதலாக இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. இத் தனைக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு அச்சம், சட்டப் பிரிவு 370 நீக்கியதால் ஏற்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு, சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களின் எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சியின் வெறுப்பு அரசியல், கம்யூனிஸ்ட்களின் தேசவிரோத, பாஜவை விரோத கட்சியாக முன்நிறுத்தும் திட்டம் என்று பன்முனைத் தாக்குதலிலும், வீறு கொண்டு எழுந்து நிற்பதுதான் டில்லியில் பாஜவின் சாதனை. ஆம்ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால், தமிழக பாணியிலான இலவச அறிவிப்புகளை கொடுத்து 62 எம்எல்ஏக்களை வாங்கியுள்ளார். ஆனால், இவரால், கடந்த லோக்சபா தேர்தலில், ஒரு எம்பியைக் கூட டில்லியில் பெற முடிய வில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். மாநில நிர்வாகம் வேறு. தேசம் காப்பது வேறு. தேசம் காப்பதில் பாஜ துணிந்து நிற்கிறது. தொடர்ந்து பயணிக்கிறது.