குருவேசரணம்

பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்.. அந்த அனுபவம்..

ஸ்ரீரங்கம் கோவில் கட்டும் சமயத்தில் கோபுரத்தின் ஒரு பகுதியைக் கட்டித்தர ஒப்புக்கொண்டவர்கள் அந்த பணியிலிருந்து விலகிக் கொள்ள அப்போது ஜீயராக இருந்ததேசிகர் என்பவர் மூலம் பெரியவாளுக்கு திருமுகம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். பெரியவாள் அதைப் பார்த்துவிட்டு மௌனமாக இருந்து தரையில் கிராமபோன் தட்டை வரைந்து காட்டியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொரு சினிமாக்காரங்க பெயராகச் சொல்லி யிருக்கிறார்கள். யாரோ ஒருத்தர் என் பெயரைச் சொல்ல, அதுதான் என்பதுபோல பெரியவர் கையை ஆட்டியிருக்கிறார்.

பெரியவா அனுக்கிரகம்

இந்தத் தகவலை நண்பர் ஒருவர் மூலம் நான் கேள்விப்பட்டேன். அந்த நண்பர் பிரசாத் ஸ்டூடியோ வந்து ‘இதுபோல ஸ்ரீரங்கம் கோயில் கட்ட பெரியவர் அனுக்கிரகம் பண்ணியிருக்கா 22 லட்சம் ஆகும். நீங்க ஆறாவது நிலை மட்டும் கட்டினால் போதும் அதுக்கு 8 லட்சம்தான் செலவாகும்’ என்று சொன்னார். நான் 22 லட்சத்தையே தருகிறேன். பெரியவாளே சொல்லிவிட்டதால இது அவர் பாரமே தவிர என் பாரம் அல்ல என்று சொல்லி விட்டேன்.

தரிசனம்

இதன் பிறகு பெரியவாளை சந்திக்க ஆர்வம் வந்தது. நானும் ஓவியர் சில்பியும் புறப்பட்டோம். அப்போது சதாரா என்ற இடத்தில் அவர் முகாமிட்டிருந்தார். அங்கே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மஹாகாவ் என்ற கிராமத்தில் இருந்தார். அங்கு ஒரு தோட்டத்தில் மாட்டுக்கொட்டகையில் ஜமுக்காளம் விரிச்சு உட்கார்ந்திருந்தார் பெரியவாள். அது மதிய நேரம். அங்கிருந்தவர்கள் என்னை அவரிடம் அழைத்துப்போனார்கள். என்னைப் பார்த்ததும் யாரு என்பது போல் சைகை செய்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் கையை உயர்த்தி ஆசிர்வதித்தார். அவரளவுக்கு ஒளிபொருந்திய கண்களை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இது வரைக்கும் பார்க்கவில்லை. நான் கைகூப்பினேன். கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்தது. அவர் கையில் இருந்த மாம்பழத்தைப் பிரசாதமாக எனக்குக் கொடுத்தார்.

பாடல் சமர்ப்பணம்

அன்று இரவு பெரியவாள் வேறு ஒரு கிராமத்துக்குப் போவதாக இருந்தது. எனக்காகவோ என்னவோ அவர் போகவில்லை. அன்றைக்கு பௌர்ணமி இரவு. அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்திருந்தார். வானத்தில் மேகங்கள் இல்லாமல் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. பெரியவாளின் சீடர்கள், ‘இளையராஜா பாடவிரும்புகிறார்’ என்று என் அனுமதி இல்லாமலேயே கூறிவிட்டனர். அவரும் சரி என்று தலையாட்டினார்.

மறக்க முடியாத அனுபவம்

சாம கான வினோதினி என்கிற செம்பை வைத்திய நாத பாகவதரின் பாடலைப் பாடினேன். ‘சாம கான.. என்று தொடங்கும்போது என்னைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையால் உணர்ச்சி வயப்பட்டு அழுதபடியே பாடி முடித்தேன். பிறகு வானத்தில் இருந்த இருபத்தியேழு நட்சத்திரங்களை அடையாளம் காட்டி விளக்கினார். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்!