காய்ச்சல் சீனாவுக்கு…. பாதிப்பு இந்தியாவுக்கும்…

உலகின் 2வது பெரிய வல்லரசு நாடாக தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்ட சீனாவுக்கு, கடந்த 2 மாதங்களாக நேரம் சரியில்லை. காரணம், டிசம்பர் மாதத்தில் நிமோனியா காய்ச்சலாக அறியத் தொடங்கி, ஆராய்ச்சில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு நாளும் சீனாவுக்கு துக்ககரமான விடியலாக இருப்பதில் பெரிய வியப்பொன்றும் இல்லைதான். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் தவித்து வருகின்றனர். உண்மையான பாதிப்பை சீனா மறைத்தாலும், இந்தியா அதன் வீச்சை உணரத் தொடங்கியுள்ளது.

உண்மையை மறைக்கிறதா சீனா?

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள், புதிய பாதிப்புகள் குறித்து தினமும் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், சீனாவின் தட்பவெப்பத்துடன் ஒப்பிடும்போது, இது நம்பும்படியான செய்தியாக இல்லை. சீனாவின் வூஹான் உட்பட பல மாகாணங்களில் இப்போது 5 முதல் 8 டிகிரி செல்சிஸ் தட்பவெப்பம் நிலவுகிறது. ஏறக்குறைய கடும்குளிர். குளிரில் காற்றின் அடர்த்தி அதிகம் இருப்பதால், கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. சீனாவின் தொடர்பில் இருந்து வூஹான் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. மேலும், அந்த மாகாணத்தில் இருந்து கரோனா இறப்பு குறித்து வரும் செய்திகளை, சீன அரசு சென்சார் செய்தே வெளியிடுகிறது. அதிலும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த இறப்புகளும், நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கையையும் சீனா துல்லியமாக சென்சார் செய்து, தன் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடுகிறது. உண்மையை சொல்லப்போனால், பத்தில் ஒரு பங்கு மட்டுமே செய்கூலி, சேதாரம் உள்ளதாக சீனா கூறுவதுதான் இப்போதைக்கு பெரிய சந்தேகம் உள்ளது.

ஸ்தம்பித்துள்ள ஒட்டு மொத்த பொருளாதாரம்

சீனாவில் உருவாக்கப்பட்டு, இப்போது உலகின் 20க்கும் அதிகமான நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவின் பாதிப்பை, சீனா லேட்டாக உணர்ந்து கொண்டுள்ளது. கரோனா பரவும் வேகத்தை தடுப்பதற்காக, சீனாவின் தொழிற் சாலைகள், சுரங்கங்கள், நிறுவனங்களை சீன அரசு மூடியுள்ளது. சீனவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்று கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவின் கரோனாவின் பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலும் வராமல் இருப்பதற்கு காரணம், அந்நாடு தனக்கென தனியாக நெட்வொர்க், இணையதள தேடுபொறியை வைத்திருப்பதுதான்.
அதே நேரத்தில், அரசின் எச்சரிக்கையால் சீனர் கள் வீட்டைவிட்டு வெளியில் செல்வதில்லை. ஒட்டு மொத்த சீனாவும் அப்படியே நோயின் பிடியில் உறைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். சீனாவில் இருந்து எந்த ஒருநாட்டுக்கும் கப்பல்கள் செல்லவும் இல்லை. எந்த நாட்டின் கப்பலும் சீனாவுக்கும் செல்ல வில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆட்டம் காணும் இந்தியாவின் பங்குச்சந்தை

சீனாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், அதன் முதல் பாதிப்பு மற்ற நாடுகளை விட, இந்தியாவைத்தான் அதிகம் சீண்டியது. காரணம், இந்தியாவில் உள்ள பல ரசாயனங்கள், தொழிற்துறை உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு சீனாவில் இருந்துதான் மலிவுவிலையில் அதிகளவு மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள பல நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு சீனாவின் மூலப்பொருட்கள் மட்டுமே பிரதான ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக கப்பல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்திய நிறுவனங்களின் உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது.
சிறிய நிறுவனங்களை நம்பி முதலீடு செய்த பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை மளமளவென விற்கத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் தொழிலில் பாதிப்பு இல்லாத நிலையிலும், இந்தியாவின் பங்குச் சந்தைகள் இந்த வகையில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிப்டி ஆகியவற்றிலும் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்கிறது

சீனாவின் தொழிற்துறை முடக்கம் இந்தியாவை மட்டும் பாதித்துள்ளதாக நாம் நினைத்தால், அது தவறான ஒரு கணிப்பு என்றே சொல்ல வேண்டும். காரணம், நம்மைவிட 50க்கும் அதிகமான நாடுகள் சீனாவின் கனிம மூலப் பொருட்கள், ரசாயன மூலப் பொருட்களை தங்கள் தொழிற்துறைக்கு நம்பியே உள்ளன. இதனால், இந்தியாவைப்போல் மத்திய கிழக்கு, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவும் இந்தத் தாக்கத்தை மிகக் கடுமையாகவே உணரத் தொடங்கியுள்ளன. இதனால், இந்தியாவைப்போல், அந்நாடுகளிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் தினமும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பங்குச் சந்தையில் இருந்து எடுத்து, தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இனால், இங்கிலாந்தில் உள்ள உலக தங்கக் கவுன்சில் கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தங்கத்தின் உற்பத்தி நிலையான ஒன்றாக உள்ள நிலையில், அதிகப்படியான முதலீடுகள் தினமும் தங்கத்தின் மீது குவிவது, அதன் தேவையை அதிகரித்து, செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

கிராம் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயரும்…

இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிராம் 4 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்ந்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இது முதல் அபாய சங்குதான்.
காரணம், சீனாவின் வர்த்தகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாத வரையில், தங்கத்தின் மீதான முதலீட்டுக்குவிப்பு தொடர்கதையாகவே நீடிக்கும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச தங்கக் கவுன்சிலில் ஒரு அவுன்ஸ் தங்கம், அதாவது 31.03 கிராம் தங்கம் இப்போது ஆயிரத்து 635 டாலர்களை எட்டியுள்ளது. முதலீடுகள் குவிவு அதிகரிப்புத் தொடர்ந்தால், இதே அளவு தங்கத்தின் விலை ஆயிரத்து 700 டாலர்கள் வரை உயரக் கூடும் என்று கவலை தெரிவிக்கின்றனர் சர்வதேச முதலீட்டாளர்கள். இது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கவே முடியாது. இதே நிலை தொடர்ந்தால், 22 காரட் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 500 ரூபாய் என்ற உச்சத்தை இன்னும் சில நாட்களில் எட்டும் என்பது உறுதி..

மருந்துகளுக்கும் காய்ச்சல்…

உலகில் அதிகளவு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யும் நாடு சீனாதான். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா, மலிவு விலையில் அதிகளவு மருந்துகள் உற்பத்தி செய்தாலும் கூட, இதற்கும் தேவையான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீனா ரசாயனங்களின் உதவியால்தான் பாராசிட்டமால் உட்பட அடிப்படை வலி நிவாரணிகள் தொடங்கி, இதய நோய், சர்க்கரைப பாதிப்புக்கான மருந்துகள் வரை சீனாவின் ரசாயனங்கள் தான் அடிப்படை. இப்போது, 2 மாதங்களாக சீனாவின் ரசாயனப் பொருட்கள் வராத நிலையில், இந்தியாவின் மருந்து உற்பத்தித்துறை மெல்ல மெல்ல ஸ்தம்பிக்கத் தொடங்கியுள்ளது. பாராசிட்டமால் உட்பட சில மருந்துகள் 40 சதவீதம் வரையும், ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், 70 சதவீதம் வரையும் விலை உயரும் அபாயத்தில் உள்ளன. இதில், பாராசிட்டமால் விலை உடனடியாக பாதிப்பை ஏற்படுத் தும் நிலைக்கு வந்துவிட்டது. காரணம், ஒட்டு மொத்த இந்தியாவிலும் பொதுப்பயன்பாட்டில் உள்ள வலிநிவாரணியாக பாராசிட்டமால் இருப்பதுதான்.

ஜவுளித்துறையிலும் பாதிப்பு…

உலகின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தித்துறை நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. ஆனால், சீனா தனக்குத் தேவையான பருத்தியை இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது. உள்நாட்டில் அதிகளவு உற்பத்தி செய்தாலும், கணிசமான அளவு பருத்தியை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. காரணம், சீனாவுக்கான அன்னிய செலாவணி ஈட்டும் துறைகளில் ஒன்றாக ஜவுளித்துறை உள்ளதுதான். சீனாவின் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகளில் கோலோச்சுகிறது. இதனால், பருத்திக்கு அதிகம் தேவை உள்ளது.
சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியா ஜவுளித்துறையில் கிட்டத்தட்ட 30 முதல் 40 ஆண்டுகள் வரை பின்தங்கியுள்ளதாக திருப்பூர் மற்றும் கரூரைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இப்போதைய சீனாவின் பரிதாப நிலை காரணமாக, சீனாவுக்கு செல்ல வேண்டிய ஜவுளி ஆர்டர்கள், 2வது மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி நாடான இந்தியாவுக்கு திரும்பியுள்ளன. வழக்கமாக 5 சதவீத ஆர்டர்கள் கிடைக்கும் இடத்தில், 30 சதவீத ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 10 சதவீத ஆர்டர்களை மட்டுமே நம்மால் ஈடு செய்ய முடியும் நிலைமை உள்ளது.
தரமான இயந்திரங்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, ஜவுளித்துறைக்குத் தேவையான பிளீச்சிங், டையிங் உட்பட பல பிரிவுகளுக்கான ரசாயனங்களும் சீனாவில் இருந்துதான் வரவேண்டியுள்ளது. இருக்கும் ஸ்டாக்கை வைத்து, உள்நாட்டில் குதிரை ஓட்டினாலும், இது சில வாரங்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால், ஜவுளித்துறையைச் சேர்ந்தவர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

ரிலாக்ஸ் மூடில் கச்சா எண்ணை சந்தை

சீனாவின் இந்தச் சிக்கலிலும் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், கச்சா எண்ணை சந்தைதான். உலகில் கச்சா நுகர்வு செய்யும் நாடுகளில் 2ம் இடத்தில் உள்ள சீனா, 50 நாட்களாக கச்சா எண்ணைக் கப்பல்களை தன் துறைமுகத்துக்கு அனுமதிப்பது இல்லை. வந்தால் வைரஸ் பாதிப்புதான் மிஞ்சும் என்று கச்சா எண்ணை சப்ளை செய்யும் நாடுகளுக்கு எச்சரித்துள்ளது.
இதனால், தங்கள் பொருளாதார பலத்துக்கு சீனாவை மட்டுமே மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக், ரஷ்யா உட்பட பல நாடுகள் இப்போது ஏகத்தடுமாற்றத்தில் உள்ளன. இந்தியாவும் திடீரென தன் நுகர்வை உயர்த்திக் கொள்ள முடியாத சூழலில், சீனாவும் காலை வாரியதால், ஓபெக் நாடுகளின் உற்பத்தி உலக கச்சா எண்ணை சந்தையை ஆக்கிரமித்துள்ளது. நுகர்வு மந்தமாக உள்ளதால், பெரிய அளவில் விலை உயர்வை எதிர்பார்க்க முடியவில்லை.

சீனாவின் பரிதாப நிலை காரணமாக, சீனாவுக்கு செல்ல வேண்டிய ஜவுளி ஆர்டர்கள், 2வது மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி நாடான இந்தியாவுக்கு திரும்பியுள்ளன. வழக்கமாக 5 சதவீத ஆர்டர்கள் கிடைக்கும் இடத்தில், 30 சதவீத ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 10 சதவீத ஆர்டர்களை மட்டுமே நம்மால் ஈடு செய்ய முடியும் நிலைமை உள்ளது.

இதனால், முதல்தர கச்சா எண்ணை ரகமான பிரென்ட் ரகம் ஒரு பேரல் 64 டாலர்களில் இருந்து இப்போது 58 டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிது கந்தகம் நிறைந்த டபிள்யூடிஐ கச்சா எண்ணை ஒரு பேரல் 53 டாலர்களாக குறைந்துள்ளது.
எண்ணை விலையைக் கட்டுப் படுத்த உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வர ஓபெக் நாடுகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால், திடீரென உற்பத்தியை குறைக்கத் தொடங்கினால், தங்கள் நாட்டின் அடுத்த சில மாதங்களுக்கான செலவினங்களுக்கு திடீரென நிதிப்பற்றாக்குறை ஏற்படுமே என்ற அச்சமும் அந்நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன் றாடச் செலவுகளுக்கே பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஓபெக் நாடுகள் தவிக்கின்றன.

இப்படி கரோனா வைரஸ் சீனாவுக்கு கம்யூனிஸ சர்வாதிகாரத்திற்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று மெள்ள புரிய வைக்க தொடங்குமோ….