ஏழை இறுதிகட்ட புற்று நோயாளிகளுக்கு இனி ஒரு வலியில்லா பயணம்…

ஏழை புற்று நோயாளிகளுக்கு ஒரு காப்பகம். இனி ஒரு வலியில்லா பயணம்! இந்த இரண்டு கடினமான சேவைகளில் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ள ஸ்ரீ மாதா கேன்சர் கேர் அறக்கட்டளையின்
நிர்வாக அறங்காவலர் விஜயஸ்ரீ மகாதேவன் அவர்களுடன் ஒரு பேட்டி…
உங்கள் லட்சிய கனவான ஏழை புற்று நோயாளிகளுக்கான இலவச புகலிடம் இறுதி கட்ட நிலையில் உள்ளது என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி.

நம்ப முடியவில்லை. கடந்த எட்டு வருடங்களின் கஷ்டம் கணத்தில் கரைவது போல தோன்றுகிறது.
முடியும் நிலையில் உள்ளது என்பதே உண்மை. அந்த இறுதி கட்டத்தை தாண்டி, எங்களது இல்ல வாசிகள் புதிய இல்லத்தினை சேர இன்னும் கட்டுமான பணிகள் நிறைவடைய வேண்டும்.
பொன் போன்ற மனம் கொண்ட நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியோடு தான் நாங்கள் இந்த அளவு கட்டுமான பணியினை செய்துள்ளோம்.
அடிப்படை வசதிகளுடன் உள்ளே செல்லவே எங்களுக்கு அவசர தேவை ஒரு கோடி!
எங்களது அவசியத்தை புரிந்து கொண்டுள்ள நல் உள்ளங்களின் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.
எனது கனவு, எனது இலட்சியம் எனக்கானது இல்லை. சமூகத்திற்கானது. நோயிலிருந்து மீட்க முடியாவிட்டாலும் அவர்களது இறுதி காலத்தை வலியில்லாமல், ஆரோக்கியமான அன்பான சூழலில் வைத்திருப்பதே எங்கள் இல்லத்தின் ஒற்றை இலக்கு.

இறுதி கட்ட புற்றுநோயாளிகளுக்கு என்ன தேவை?

ஓரளவு பணம் உள்ளவர்களுக்கே இறுதி கட்ட புற்று நோயாளிகளை சமாளிப்பதும், பராமரிப்பதும் கடின வேலை.
ஏழை புற்று நோயாளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சவால். தங்களுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டு பிடிப்பதே ஓர் அதிசயம் தான். ஏதோ வலி இருக்கே என்று அவர்கள் அரசு மருத்துவரை அணுகும்போதே நோய் ஆரம்ப நிலையை பெரும்பாலும் கடந்திருக்கும்.
புற்றுநோய் தான் என்று உறுதி செய்ய ஆகும் ஸ்கேன் போன்ற செலவுகளுக்கான பணத்தை இவர்கள் ஏற்பாடு செய்து முடிப்பதற்குள், புற்று நோய் அபாய கட்டத்தை தாண்டியிருப்பார்கள்.
கான்சருக்கான மருத்துவம் கடினமானது தான். அரசு இந்த செலவை குறைத்துவிட்டாலும், ஏழைகளுக்கு இது ஒரு வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது.
சரியான சிகிச்சை, உணவு, பராமரிப்பு என இருந்தால் மட்டுமே காலனுடனான அவர்களின் போராட்டத்தில் ஓரளவு வெற்றி வாய்ப்புகள் உள்ளது.
ஏழை புற்று நோயாளிகனின் குடும்பத்தினரை முற்றிலும் குறை சொல்ல முடியாது. இறுதிகட்ட புற்றுநோயாளிகளின் பராமரிப்பு மிக கடினமானது. புற்றுநோயினால் வரக்கூடிய புண்களும், துர்நாற்றமும், சில சமயங்களில் வரக்கூடிய புழுக்களும் இவர்களை முறையான மருத்துவர் இல்லாமல் பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளி விடுகிறது.
சிறிய வீட்டில் குடும்பத்தோடு வசிக்கும் ஏழைகள் எப்படி இவர்களை பராமரிக்க முடியும். இவர்களது இறுதி காலத்தை பார்ப்பார்களா? அல்லது வளரும் பிள்ளைகளுக்கான செலவை பார்ப்பார்களா?
இவர்களது தார்மீக போராட்டத்தை கண்டு நான் அடைந்த வேதனையும், வலியும் அதிகம். எப்படி உதவுவது என்று கேள்வி என் மனதை அரித்து கொண்டே இருந்தது.
அப்படித்தான் உதித்தது ஸ்ரீ மாதா கேன்சர் கேர் இலவச புற்றுநோய் காப்பகம்.
இந்த மிகப்பெரிய சவாலின் பாரம் பல சமயங்களில் என்னை ‘அடுத்து எப்படி’ என்ற மூலைக்கு தள்ளி வேடிக்கை பார்ப்பது கடவுளின் விளையாட்டு என்றே நினைக்கிறேன்.
அந்த கடவுளே நல்ல உள்ளங்களை படைத்த மக்கள் மூலமாக வந்து உதவுவது தான் சிறப்பு.

மீண்டும் சொல்கிறேன். இது நம் ஒவ்வொருவருக்குமான தார்மீக கடமை. நமது சமுதாயத்திற்கான மிக பெரிய சவால். மருத்துவம் கைவிட்ட நிலையில் இவர்கள் எங்கு செல்வார்கள்? இவர்களுக்கு ஏற்படும் மரணவலியை தீர்க்கும் மருந்தை யார் கொடுப்பார்கள். தெரு ஓரங்களில் நமது சகோதர, சகோதரிகள் வலியிலும், அவமானத்திலும், சகதியிலும் கிடந்து இறப்பதை நாம் அனுமதிக்கலாமா?

என்னவானாலும் சரி! கடவுள் துணை! நல் உள்ளங் கள் துணை என்று ஆரம்பித்து, இன்று நிறைவை தொட உள்ளோம் என்ற நிலையில் சந்தோஷபடக் கூட இன்னும் மனம் துணியவில்லை.
கடனும், பாக்கிகளும் நிழலாக தொடர்வது உண்மை. ஆனால் நமது மக்கள் கைகொடுப்பார்கள், இதுவும் கடந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏழை புற்று நோயாளிகளுக்கான இந்த இலவச காப்பகம் எப்போது முடியும். எப்போது இந்த புத்தம் புதிய இல்லத்தில் உங்களது வாசம்?

விரைவில் என்று கடவுளிடம் அனுதினமும் வேண்டி போராடுகிறேன். இன்னும் ஒரு கோடி இருந்தால் உள்ளே சென்று விடலாம். மருத்துவ
பராமரிப்பு மிக அவசியம் என்பதால் சில சிறப்பு அம்சங்களையும் நாம் செய்ய வேண்டியுள்ளது.

கட்டிடம் எப்படி?

இந்த அன்பு இல்லம் மிகவும் சிறப்பானது. நான்கு மாடி கட்டிடம். மருத்துவமனையை சிறுக சிறுக கட்ட முடியாது என்பதால் ஒன்றாக கட்டி முடிக்க வேண்டிய சூழல். எனவே தான் எதிர்கால தேவைகளுக்கும் சேர்ந்து கட்டியுள்ளோம்.

வருங்கால திட்டங்கள் என்ன?

ஏழை புற்று நோயாளிகளுக்கான முற்றிலும் இலவசமான இந்த இல்லத்தை முடித்து உங்கள் பேராதரவோடு திறப்பு விழா நடத்த வேண்டும் முதலில்! பிறகு புற்றுநோய் இறுதிகட்டத்தை அடைய விடாமல், வருமுன் காக்க ஏழை எளியவர்களுக்கு முன்கூட்டியே இலவச பரிசோதனை செய்வது எங்கள் வருங்கால திட்டம். இதற்கான மருத்துவ கருவிகள் இதற்கு தேவையான மருத்துவ நிபுணர்கள் என்று தேவை பட்டியல் நீளம்தான். ஆனால் நிச்சயம் செய்ய வேண்டும் என்ற உறுதி உள்ளது.

உங்களுக்கு எப்படி உதவலாம்?

இன்று புற்றுநோய் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. உண்மையில் நான் சமத்துவத்தை இங்கு தான் பார்க்கிறேன். புற்றுநோய் யாருக்கு எப்போது எங்கே வரும் என்று சொல்லவே முடியவில்லை. நோய் வந்து விட்டது என்பதை அறியும் நேரம் மிக முக்கியம்.
ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து விட்டால் குணம் நிச்சயம். ஆனால் புற்றுநோயின் தன்மையே விசித்திரமானது தான். பல சமயங்களில் நோய் முற்றிய நிலையில் தான் தெரியவரும்.
அப்போது கடுமையான மருத்துவமும், முறையான பராமரிப்பும் ஓரளவு வெற்றியை தரும். ஆனால் ஏழை புற்று நோயாளிகளுக்கு இது சாத்தியமானது இல்லை.
இந்த ‘வலியில்லா பயணத்தை’ மட்டுமாவது நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும். இது நமது சமுதாயத்தின் தார்மீக கடமையல்லவா.
உங்கள் பொன் மனங்களை தான் பெரிதும் நம்பியுள்ளோம்.
உங்களது உதவிகளை நினைவு கூரும் விதமாக முகப்பில் உள்ள சுவரில் உங்களது பெயர்கள் பொரிக்கவே எண்ணம். ரூபாய் 2,50,000/–& மட்டுமே இதற்கான தொகை.
இவ்வளவு தொகை தான் நீங்கள் கட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. உங்கள் அன்பும், ஆதரவும் அதனோடு உங்களால் முடிந்த தொகையை கட்டுங்கள். அதுவே எங்களுக்கு போதும்.
இந்த ஏழை புற்றுநோயாளிகளுக்கான இலவச காப்பகத்தின் அவசர தேவையை உணர்ந்துள்ள ஒவ்வொருவரும் எங்களுக்கு முடிந்த உதவி செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

காதற்ற ஊசி கூட நம்மோடு வரப்போவதில்லை என்ற பேருண்மை நாம் அறிந்ததே.
இந்த ஏழை புற்றுநோயாளிகளின் இறுதி பயணத்தை வலியில்லா பயணமாக மலர் தூவி செம்மை படுத்துவோம்.
வாருங்கள்! தயை கூர்ந்து வாருங்கள்!!

உங்கள் அன்பு சகோதரி
விஜயஸ்ரீ மகாதேவன்
நிர்வாக அறங்காவலர்