கரோனா என்ற வைரஸ் உலகை உலுக்கி விளையாடி ஓய்ந்து ஒழிந்து கொண்ட நிலையில், இப்போது எம் பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரஸ், இப்போது மிக வேகமாக பரவி அச்சுறுத்தி, உலக மக்களை பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. கரோனா உடலுக்கு சேதாரம் இல்லாமல் உயிரை பறித்துக் கொண்டது என்றால், எம் பாக்ஸ் (எனப்படும் குரங்கம்மை) உடலை ரணமாக்கி, பாதிப்புக்குள்ளான நபரை சித்ரவதை செய்து, மரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவில் தொடங்கி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் பரவிய இந்த எம் – பாக்ஸ் வைரஸ், அதன் பரவல் வேகம் மற்றும் ஏற்படுத்தும் அதீத தாக்கம் ஆகியவற்றால், உலக சுகாதார நிறுவனத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பரவல் வேகம் காரணமாக, கரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டதைப் போல் மற்றும் ஒரு ‘உலக ஊரடங்கு’ பிறப்பிக்கப்டலாம் என்ற சூழலை இன்றைக்கு எதிர் கொண்டுள்ளோம். ஆனால், உலக சுகாதார நிறுவனம், ‘‘எம் பாக்ஸ் வைரஸ் ஆபத்தானதுதான். ஆனால், இதன் வெடிப்பு கரோனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது’’ என்று ஆறுதல் கூறியுள்ளது.
சொறி: Mpox இன் ஒரு தனித்துவமான அம்சம் தட்டையான புண்களாகத் தொடங்கும் ஒரு சொறி ஆகும், இது திரவம் நிறைந்த கொப்புளங்களாக உருவாகிறது, அவை அரிப்பு அல்லது வலியுடன் இருக்கலாம். இந்த புண்கள் இறுதியில் மேலோடு மற்றும் அவை குணமடையும்போது விழும். காய்ச்சல்: அதிக காய்ச்சல் அடிக்கடி சொறி உடன் வருகிறது. தலைவலி மற்றும் தசை வலிகள்: பல நோயாளிகள் கடுமையான தலைவலி மற்றும் தசை வலிகளை அனுபவிக்கின்றனர். வீங்கிய நிணநீர் கணுக்கள்: நிணநீர்க்குழாய் அழற்சி அல்லது வீங்கிய நிணநீர் முனையங்கள் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். சோர்வு: குறைந்த ஆற்றல் அல்லது சோர்வு என்ற பொதுவான உணர்வு பரவலாக உள்ளது. சொறியின் தீவிரம் மற்றும் இடம் மாறுபடலாம், சில நபர்களுக்கு ஒரு சில புண்கள் மட்டுமே உருவாகின்றன, மற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கான காயங்கள் இருக்கலாம். இந்த புண்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், முகம், வாய், பிறப்புறுப்பு பகுதி மற்றும் ஆசனவாய் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் தோன்றும்.
116 நாடுகளில் தாக்கம்
எம் பாக்ஸ் வைரஸ் இப்போதைய சூழலில் உலகின் 116 நாடுகளில், அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தடுப்பூசிகள் பயன்பாடுகள் குறைந்த ஆப்பிரிக்க நாடுகளில் உருவான இந்த வைரஸ், சுகாதார கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ள ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பெரும் தாகத்தை ஏற்படுத்தியுள்ளதை, சர்வதேச மருத்துவ உலகம் ஒரு வியப்பு கலந்த அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது உண்மை.
ஆயிரிக்க நாடுகளில்
இந்த எம் பாக்ஸ் வைரஸ் கடந்த வாரங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் மிகத் தீவிரமான பரவலை ஏற்படுத்தி 600க்கும் அதிகமான மரணங்களை நிகழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் இந்த வைரஸ் உருமாற்றம் கண்டு, பிற அண்டை நாடுகளுக்கும், அங்கிருந்த பயணிகள் வழியாக உலக நாடுகளுக்கும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்த தொற்றாளர்களில், இன்றைய தேதிக்கு 95 சதவீதம் பேர் காங்கோ நாட்டில் உள்ளனர் என்பது வருத்தமான விஷயம். இதனால்தான் உலக சுகாதார நிறுவனம் எம்.பாக்ஸ் தொற்றை நெருக்கடியாக அறிவித்துள்ளது.
எப்போது தோன்றியது?
எம் பாக்ஸ் வைரஸ், பாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. 1958ல் இந்த வைரஸ் சிறிய அளவில் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. பின்னர் பிற விலங்குகளிடம் இருந்து ஆப்பிரிக்காவின் மனிதர்களுக்கு பரவியுள்ளது. ஆப்பிரிக்காவில் மிகத் தீவிரமான தாக்கம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்டது. இப்போது வரை 18 ஆயிரம் பேர் வரை இந்த பாதிப்புக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 600க்கும் அதிகமானோர் தீவிர வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வைரஸின் மறு உருவாக்கமான கிளேட் 1, மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உருமாறி மிக வீரியத்துடன்
முன்னதாக, 2022ல் எம் பாக்ஸ் தாக்கத்தை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அன்றைய காலகட்டத்தில் 87 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 200க்கும் அதிகமானோர் பலியாகினர். இப்போது இந்த வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டு, அதிக வீரியத்துடன்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கோவில் உருவான இந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, நைஜீரியா, கேமரூன், கென்யா, ஐவரிகோஸ்ட், தென்னாப்பிரிக்கா, கானா, ருவாண்டா, தைவான், உகாண்டா, மலாவி, ஸ்வீடசன், போர்ச்சுக்கல், புருண்டி, கென்யா, உகாண்டா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா உட்பட பல நாடுகளிலும் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை…
சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான விமான மற்றும் கப்பல் பயணிகள் சென்று வரும் நிலையில், வெளி நாடுகளில் இருந்து திரும்புவோரால் தொற்று பரவாமல் இருப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பு முடுக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளுக்கு காய்ச்சல் உட்பட பாதிப்புகள் இருந்தால், அதை தானியங்கி முறையில் செயல்படும் ‘மாஸ் பீவர் ஸ்கீரினிங்’ கருவி, சிவப்பு விளக்குடன் அலாரம் எழுப்பி அந்தப் பயணிகளை அடையாளப்படுத்திவிடும். அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை வழங்கப்படும். விரிவான சிகிச்சை தேவைப்படும் என்ற நிலையை எதிர் நோக்கி, சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி உட்பட பெரிய விமான நிலையங்கள் உள்ள நகரங்களின் அரசு மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகளுடன் தனிமை வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிமணியன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சொல்வது என்ன?
எம். பாக்ஸ் வைரஸ் உலகை பீதியில் ஆழ்த்தினாலும், இது தொடர்பாக பெரிய அளவில் அச்சம் கொள்ள வேண்டாம் என்கிறார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் டாக்டர் அழக வெங்கடேசன். இது தொடர்பாக அவர் கூறியதாவது :
எம் பாக்ஸ் தொற்றை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் பொது சுகாதாரத்துறை அவசர நிலையாக (Public Health Emergency of international concern) அறிவித்துள்ளது.
உண்மையில், இந்த எம் பாக்ஸ் வைரஸ் என்பது 1958ல் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே முதன் முதலில் கண்டறியப்பட்டதால், மங்க்கி பாக்ஸ் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த வைரஸ் குரங்குகளில் இயற்கையாக குடிகொண்டு வாழ்வதில்லை. ஆனாலும், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து பரவுவதால், இதுபோன்ற பெயர் வைத்தால், அது இன அருவருப்புத் தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், சுருக்கமாக எம் பாக்ஸ் என்கின்றனர்.
இந்த எம் பாக்ஸ் வைரஸ் உலகை அச்சுறுத்திய பெரியம்மை வைரஸின் குடும்பமாகும். 1970ல் ஆப்ரிக்க நாடான காங்கோவில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அப்போது முதலே தொடர்ந்து காங்கோ நாட்டிலும் அதற்கு அக்கம்பக்கம் உள்ள நாடுகளிலும் இந்த வைரசின் தொற்றும், தாக்கமும் அவ்வப்போது ஏற்பட்டு, பிரச்னையை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ், சிறிய வகை பாலூட்டி இனங்களான எலிகள், அணில்களிடமும் குரங்குகளிடமும் காணப்படுகிறது.
எப்படி பரவுகிறது?
எம் பாக்ஸ் பாதிக்கப்பட்ட விலங்குகள் வழியாக நேரடியாகவும், இந்த விலங்குகளில் இருந்து பரவிய வைரஸசால் பாதிக்கப்பட்ட பிற விலங்குகள் மற்றும் அந்த விலங்குகள் மனிதர்களை கடிப்பது, பிராண்டுவது, அவற்றின் உமிழ் நீர் மற்றும் அவற்றின் இறைச்சியை சாப்பிடுவது, தொடுவது ஆகியவற்றால் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. மனிதர்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபருடன் உடல்ரீதியான நேரடி தொடர்பு, அசுத்தமான ஆடைகள், எச்சில், சிறுநீர் உட்பட பல்வேறு வழிகளில் பரவும்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
எம் பாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு, தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு 5 முதல் 21 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் உடலில் தோன்றத் தொடங்கும். அம்மை பாதிப்பு ஏற்பட்டால் உடல் முழுவதும் அரிப்பும், கொப்புளமும் ஏற்படுமோ. அதே தாக்கத்தை எம் பாக்ஸ் ஏற்படுத்தும். உடல் முழுவதும் அரிப்புடன் கூடிய செந்நிறப்படை தோன்றும். நாளடைவில் இது கொப்புளமாக மாறிவிடும். முறையான சிகிச்சை, ஓய்வு இருந்தால் அந்தக் கொப்புளம் சருகாக உலர்ந்து காய்ந்து விழும்.
கொப்புளங்கள் கூடவே காய்ச்சல் உடல்வலி, இருமல் போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம். பொதுவாக பெரும்பான்மையினருக்கு சாதாரண தொற்றாக குணமாகிவிடும். ஆனாலும், கர்ப்பிணிகள், குழந்தைகள்.
முதியவர்கள், (சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீகர தொற்று உட்பட) இணை நோய்கள் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு எம் பாக்ஸ் அதிக தீவிரத்தை வெளிப்படுத்தும். அத்துடன், இலவச இணைப்பாக இந்தநோய் பாதிப்பு பல்வேறு வகை தொற்றுகளுக்கும், நியூமோனியா எனும் நுரையீரல் தொற்று நிலைக்கும், மூளைக்காய்ச்சலுக்கும் கண் பார்வை குறைபாட்டுக்கும் வழி செய்துவிடும்.
தடுப்பது, தவிர்ப்பது எப்படி?
நம்மைப் பொறுத்தவரை இந்த வைரசானது ஒரு மனிதனிடம் இருந்து, இன்னொரு மனிதனுக்கு பரவும் நோயாக இருப்பதால், இது தொடர்பாக நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தொற்றுக்குள்ளான நபர்களுடன் தோளுடன் தோள் உரசும்படி இருந்தால் தொற்று எளிதில் பரவும். அத்துடன் தொற்றுக்குள்ளான நபரின் எச்சில், விந்து, சிறுநீர் வழியாக பரவும். தொற்றுக்குள்ளான நபருடன் உடலுறவில் இருந்தால் எளிதில் பரவும். ஒருவருக்கு அறிகுறிகள் தோன்றியதில் இருந்து, உடல் முழுவதம் தோன்றிய கொப்புளங்கள், காய்ந்து சருகாகி குணமாகும் வரை, அந்த கொப்புளங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் வழியாகவும் பிறருக்கு தொற்று ஏற்படலாம். தனிமை படுத்துதல் தான் சிறந்த வழி.
2 வகை கூறுகள்
இதுவரை இந்த எம் பாக்ஸ் வைரசில் 2 வகை கூறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவை கிரேடு 1,
கிரேடு 2 ஆகும். இதில் க்ளேடு ஒன் மனிதர்களைப் பொருத்தவரை கொஞ்சம் தீவிரமாக வெளிப்படக்கூடியது. கிரேடு 2 ஒப்பீட்டளவில் பலம் குன்றிய வைரஸ் வகையாகப் பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கும்போது, அவரது ரத்தத்தில் இருந்து வைரஸின் டிஎன்ஏ வைப்பிரித்து பிசிஆர் பரிசோதனை செய்து நோய்க்கிருமியைக் கண்டறிய முடியும்.
அறிகுறி இல்லாமலும்…
பலருக்கு இந்தத்தொற்று அறிகுறிகள் இல்லாமலும் வெளிப்படும்( asymptomatic infection) மற்றும் பலருக்கு சாதாரண தொற்றாக வெளிப்படும் என்பதால் தொற்றுக்குள்ளான அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பதுகடினம். இதற்கு முன்பு ஜூலை 2022ல் உலக சுகாதார நிறுவனம் க்ரேடு 2 – பி வகை வைரஸ் பரவல் தாக்கம் ஏற்பட்டபோது, இதேபோன்று அவசர நிலையை அறிவித்தது. பின்னர், அவசர நிலை மே 2023ல் திரும்பப்பெறப்பட்டது. இந்த இடைப்பட்ட நாட்களில் 93 ஆயிரத்து 327 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்களில் 208 பேர் பலியாகினரர். நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் மரண விகிதம் (Case fatality rate) – 0.2 சதவீதமாகும். இதுவே இப்போது காங்கோவில் 18 ஆயிரத்து 245 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்களில் 919 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொற்று கண்டறியப்பட்டவர்களின் மரண விகிதம் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம் இந்தமுறை பரவுவது க்ளேடு – ஒன்று வகை வைரஸ் என்று கண்டறிந்துள்ளனர். கூடவே இந்த வைரஸ் பாதுகாப்பற்ற உடலுறவால் எளிதாகப் பரவுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
சிகிச்சை முறைகள் என்ன?
நம் நாட்டில் பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் சின்னம்மை தடுப்பூசி போடப்பட்டிருக்கும். அப்படி தடுப்பூசி போடபட்டிருந்தால், அப்பட்டிப்பட்ட நபர்களுக்கு எம் பாக்ஸ் பற்றிய அதீத அச்சம் தேவையில்லை. சின்னம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியும், எம்விஏ – பி என் எனும் தடுப்பூசியும் எம் பாக்ஸ் வைரசுக்கு எதிராக 86% செயல்திறனை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. டாக்டரை பொருத்தவரை, நோயின் அறிகுறிகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப பக்கபலமான சிகிச்சை முறைகளும் கூடவே சில வைரஸ் கொல்லி மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
தற்காத்து கொள்வது எப்படி?
எம் பாக்ஸ் வைரசுக்கு எதிரான போராட்டம் தொடங்கியுள்ள, இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் இந்த நோய்க்கு எதிரான சிகிச்சைக்கு மருந்துகளும், சரியான சிகிச்சை முறையும் உள்ளது ஆறுதலான விஷயம். ஆனாலும், தகுந்த விழிப்புணர்வு அவசியம். நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அந்த நபரை தனிமை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். அதாவது, காய்ச்சல், தலைவலி, தசைவலி, மூச்சுத் திணறல் உட்பட பிரச்சனைகள் தொடங்கி, கொப்புளங்கள் சருகாகி உலர்ந்து விழும்வரை அந்த நபரை தனிமை சிகிச்சையில் வைத்திருக்க வேண்டும். இருமல், சளி வழியாக பரவும் வைரஸ் என்பதால், மாஸ்க் அணிய வேண்டும். கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு தூய்மையாக கழுவ வேண்டும். தூய்மையான ஆடைகள் அணிவது அவசியம். சரியான ஆன்டி பயாடிக் மருந்துகள், ஓய்வுடன் கூடிய தனிமை சிகிச்சைகள், இந்த நோய் பரவுவதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.