பொதுத்தேர்வு நேரத்தில் மின்வெட்டு?தவியாய் தவிக்குது தமிழகம்!

திருவிளையாடல் படத்தில், நடிகர் சிவாஜிகணேசன், நடிகர் நாகேஷ் ஆகியோர் இடம் பெற்ற கேள்வி பதில் காட்சியொன்று இடம் பெறும். ‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என்ற நாகேஷின் கேள்விக்கு, ‘எதுகையும், மோனையும்’ என்று சிவாஜி பதில் சொல்வார். அந்தக் காட்சியை இப்போதைய தமிழக சூழலுக்கு எடுத்துக் கொண்டால், திமுக அரசும், மின் வெட்டுச் சர்ச்சையும் காலம் காலமாக பிரிக்க முடியாத பந்தத்துடன் பயணித்துக் கொண்டிருப்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சொல்லாமலேயே புரியும்.

பாரம்பரியம்

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு இலவச இணைப்பாக கிடைப்பது மின்வெட்டுதான். மிகச் சமீபத்தில் 2006 -11 திமுக ஆட்சியில், மின்வெட்டின் கொடூரம் என்ன என்பதை, மக்களுக்கு லைவ் ஷோவாக காண்பித்த பெருமை, இந்த ஆட்சிக் காலகட்டத்தில் மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமியையே சாரும். ஆனால், 1973ம் ஆண்டில் திமுக ஆட்சியில் மின்வெட்டு மிகமிக மோசமான ஒன்றாக இருந்ததாக, பல பேப்பர்களில் தலைப்புச் செய்தியாகின. அப்போதைய காலகட்டத்திலும், நடிகர் எம்ஜி ராமச்சந்திரன் தயாரித்து, இயக்கி, நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகவும் வெற்றிகமாக ஓடி, பெரும் வசூலை அள்ளியதாக நாளிதழ்களில் வந்த செய்திகளை, இப்போதைய மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டு வைப்பதாக இல்லை. எனவே, மின் வெட்டு என்பது திமுக அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

மின்துறை ஒரு காமதேனு

அரசு மற்றும் ஊழல்வாதிகளுக்கு எப்படி டாஸ்மாக் ஒரு அள்ள அள்ள கரன்சி குறையாத அக்ஷ்சய பாத்திரமாக உள்ளதோ, அதேபோல் மின்துறையும் எப்போதும் அள்ள அள்ள குறையாத ஒரு ஊழல் அட்சய பாத்திரமாகிவிட்டது. நிலக்கரி கொள்முதலில் தொடங்கி, வெளி நபர்களிடம் மின்சாரம் வாங்குவது வரை, எல்லாமே இந்தத்துறையில் கமிஷன்தான். அதாவது, கைமேல் காசு தரும்துறை. இந்தத்துறை, கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

குற்றமல்ல, லஞ்சம் நோக்கம்தான்

அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், எதிர்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் பிரபல்யம். ‘‘இந்த ஊர்ல செந்தில்பாலாஜினு ஒருத்தர் இருக்குறார். அவர் தம்பி செய்யும் அட்டகாசம் அதிகம். செந்தில்பாலாஜி ஊழல்வாதி. ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருந்தபோது, அடுத்த முதல்வர் யார் என்ற பெயர் பட்டியலில் செந்தில்பாலாஜி பெயரும் இருந்தது. இவர் கெட்டகேட்டுக்கு முதல்வர் பதவி வேறயா?’’ என்று பேசினார்.

எந்த செந்தில் பாலாஜியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தாரோ, அதே ஸ்டாலின் முதல்வரான பின்னர், பணம் கொழிக்கும் டாஸ்மாக், மின்துறையை செந்தில்பாலாஜி வசம் கொடுத்துள்ளார். எந்த ஒரு படிப்பறிவில்லாத நபரும் இதன் அடிப்படை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

கோவையில் முகாம் ரகசியம்?

சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தின் கோவை, திமுகவின் காலை வாரியது. இதனால், செந்தில்பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட, அவரும் கோவையில் நிரந்தரமாக தங்கி, திமுகவை வளர்த்தார். ஆனால், உண்மையில் அமைச்சர் அங்கு முகாமிட்டதன் நோக்கமே வேறு என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோவையில் உள்ளது. அங்குதான் முக்கியமான வர்த்தக டீல்கள் முடிக்கப்படுகின்றன. காற்றாலை மின்சாரக் கொள்முதலில் ‘டீல்’ முடிப்பதற்காகவே அவர் கோவையில் முகாமிட்டிருந்தார் என்கின்றனர் திமுகவின் நிர்வாகிகள் சிலர்.

எவ்வளவு லாபம்?

ஏற்கனவே சொன்னபடி, மின் கொள்முதல் தொடங்கி, மின்சார கொள்முதல் வரை எல்லாமே இந்தத்துறையில் பணம்தான். 2006ல் மின்வெட்டின்போது, தமிழகம் அனுபவித்த கொடுமை கொஞ்சநஞ்சம் அல்ல. தினமும் 8 முதல் 12 மணி நேரம் வரை நீடித்த மின்வெட்டுப் பிரச்னையைத் தாங்க முடியாமல், ‘‘மண்டலம் வாரியாக தினம் வெட்டு நேரத்தை அறிவித்தால், தொழிற்சாலை இயந்திரங்கள் தப்பிக்கும்’’ என்று தொழில்முனைவோர் கதறினர். இதனால், தமிழகத்தின் பல பகுதிகளை மண்டலங்களாக பிரித்து, மின்வெட்டு நேரத்தை அறிவித்து, அழகுபடுத்திய
அரசு, கருணாநிதியின் அரசுதான்.

மின்வெட்டு கொடூரம் எந்தளவுக்கு இருந்தது என்றால், ‘‘10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால், மாணவ, மாணவிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தேர்வு மையங்களின் பயன்பாட்டுக்காக ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு

சுற்றறிக்கை வந்தது, தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒன்றாகும்.

தரமான நிலக்கரி

அதேநேரத்தில், ஒரு கிலோ நிலக்கரியை எரித்தால், அதில் 30 சதவீதம் சாம்பல் இருக்கும். ஆனால், 2006 – 11 ஆட்சியில், குடும்பத்தில் ஒருவரின் பெயரில் நிலக்கரி டெண்டர் எடுக்கப்பட்டு, மின் உற்பத்தி முடுக்கப்பட்டது. ஆனால், இதில், ஒரு கிலோ நிலக்கரியை எரித்தால், 60 சதவீதத்துக்கும் அதிகமான சாம்பல் கிடைத்தது. அதாவது மட்டமான நிலக்கரி. அத்தனையிலும் பணம் கொள்ளையோ கொள்ளை!

போட்டு உடைத்த அண்ணாமலை

தமிழகத்தில் ஏப்ரல் 3ம் வாரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு, மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஏப்ரல் 20ம் தேதி இரவு தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும், சொல்லி வைத்தார்போல், ஒரே நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கொடுத்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘‘மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வரும் மின்சாரத்தில் 750 மெகாவாட் தடைபட்டதால், திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. அதேநேரத்தில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 4 யூனிட்கள் நிலக்கரி இல்லாமல் நிறுத்தப்பட்டது. தனியாரிடம் மின்சாரம் வாங்கி, நிலைமை சரி செய்யப்பட்டது’’ என்று விளக்கம் கொடுத்தார்.

தனியாரிடம் வாங்கினால் தான்…

தமிழகத்தின் மின் உற்பத்திக்கு தினம் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 50 ஆயிரம் டன் மட்டுமே மத்திய அரசு கொடுப்பதால், உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றார் செந்தில்பாலாஜி.

பதிலடி

பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களில், மிக மோசமான லோடிங் திறன் கொண்டவை தமிழக மின் நிலையங்கள்தான். நாட்டின் பிற அனல் மின் நிலையங்கள், தங்கள் மொத்த உற்பத்தித் திறனில், 85 சதவீதம் வரை லோடிங் திறன் கொண்டிருக்கையில், தமிழகத்தின் அனல் மின் நிலையங்கள் 57 சதவீதம்தான் கொண்டுள்ளன. இந்தத் திறனில் மின் உற்பத்திக்கு தினம் 50 ஆயிரம் டன் போதும். அதேநேரத்தில், ஏப்ரல் 20ம் தேதி இரவு, தூத்துக்குடி அனல்மின் நிலையம் தொடர்பாக தமிழகமின்வாரியம் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ‘போதுமான மின் உற்பத்தி இருந்து, நுகர்வு சரிந்ததால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது’ என்று அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், தமிழக அமைச்சர் நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், ஏப்ரல் 20 முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருப்பில் இருந்தது.

அரசு மவுனம் ஏன்?

தமிழக அரசின் ஒரே நோக்கம், தனியாரிடம் மின் உற்பத்தி செய்வது கொள்ளை லாபம் அடிப்பதே. இதற்காகவே டான்ஜெட்கோ என்ற காமதேனுவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்’’ என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, திமுக தரப்பில் இதுவரை மவுனம்தான் பதிலாக கிடைத்துள்ளது.

மீண்டும் பொதுத்தேர்வு அச்சம்..

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதி நடத்தியும், நடத்தாமலும் நிறைய பாடங்கள் உள்ளன. மாணவர்கள் வழக்கமான ஒரு மன நிலையில் இல்லாமல், கொஞ்சம் பதட்டமான மனோ நிலையில்தான் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதனால், பெற்றோர்களுக்கும் கொஞ்சம் மன உளைச்சல்தான். இந்த நேரத்தில், மாணவர்கள் தேர்வுக்கு அதிக நேரம் படிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இரவு நேரத்தில் மாணவர்கள் படிக்கும்போது, கிராமங்களில் பெரும் அளவில் மின்வெட்டு நீடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், 2006 -11 காலகட்டத்தில், பொதுத்தேர்வை எதிர் கொண்ட பதட்டமான சூழலில், இப்போதைய தேர்வையும் எதிர் கொள்ளும் சிக்கலில் மாணவ, மாணவிகள் உள்ளனர்.

பரிதாபம்தான்!!!