போதையில் தள்ளாடும் மாணவர்கள் தமிழகத்தில் தடம் புரளும் கல்வி

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். : குறல் எண் 131

இதன் பொருள் என்னவெனில், ‘‘ஒழுக்கமே ஒருவருக்கு உயர்வு தரக்கூடியது என்பதால், அந்த ஒழுக்கம் உயிரைவிட மேலானதாக போற்றப்படுகிறது’’ என்பதுதான். அதாவது, நாகரிகமான சமுதாயக் கட்டமைப்பின் முதல் நிலை, ஒழுக்கம்தான். எப்படி நெல்லை ஒரே நாளில் விதைத்து, அறுவடை செய்ய முடியாதோ, அதேபோல்தான் ஒழுக்கமும். இது ஒருநாள் பயிரல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் இந்த ஒழுக்கமே வாழ்நாள் பயிராகிறது.

ஒழுக்கம் என்பது பிறப்பால், வளர்ப்பால், இறுதியாக கல்வியால் வடிவமைக்கப்பட்டு, சமூகத்துக்கு சிறந்த மனிதர்களை உருவாக்கிக் கொடுக்கிறது. இந்த வகையில், ஒழுக்கத்தின் திறவு கோலாக கல்வி உள்ளது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால், தமிழகத்தின் கல்வியின் தரம் எப்படி உள்ளது. ஒருசிறிய பார்வை பார்ப்போமா?

கீழ்படியாத மாணவர்கள்

ஆசிரியர், மாணவர் உறவின் முதல் அடையாளம் கீழ்படிதல். எந்த ஒரு மாணவராக இருந்தாலும், தன் ஆசிரியருக்கு சிறப்பு செய்யும் வகையில், அவரை அடிபணிவது என்பது மரபு.. இந்தியாவின் 9வது ஜனாதிபதியாக 1992 முதல் 1997 வரை பதவியில் இருந்த டாக்டர் சங்கள் தயாள்சர்மா, ஓமன் நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றார். இவ்வாறு வெளிநாட்டு அரசு விருந்தினர்கள், ஓமனுக்கு வரும்போது, அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் வந்து வரவேற்று அழைத்துச் செல்வதுண்டு.

கார் ஒட்டிய ஒமன் அதிபர்

ஆனால், டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஓமனுக்கு சென்றபோது, அவரது விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஓமன் மன்னர், டாக்டர் சங்கர் தயாளுக்கு காரோட்டியாக வந்து, கார் ஓட்டிச் சென்றார். இது ஓமன் மன்னர் பரம்பரையில் இல்லாத ஒரு மரபு. அதையும் அந்த மன்னர் உடைத்து, டாக்டர் சங்கர் தயாள் சர்மாவுக்கு வரவேற்பு வழங்கினார்.

அவர் எனது குரு

ஓமன் மன்னரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி, ‘‘முன் எப்போதும் இல்லாத வகையில், டாக்டர் சங்கர்தயாள் சர்மாவுக்கு நீங்கள் கார் ஓட்டியது ஏன்?’’ என்று கேட்டனர். ‘‘அவர் இந்தியாவின் ஜனாதிபதி என்பதற்காக, நான் அவருக்கு கார் ஓட்டவில்லை. நான் இந்தியாவில் கல்வி பயின்ற காலத்தில் என் ஆசிரியராக இருந்து, ஒழுக்கத்தை கற்பித்தவர். அதனால், என் குருவுக்கு கார் ஓட்டினேன்’’ என்றார்.

அவ மதிப்பு

இந்த சூழலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவர்கள், தங்களுக்கு பாடம் நடத்துவதற்காக வந்த, பார்வைத்திறன் இல்லாத வரலாற்றுப் பாட ஆசிரியரை நாற்காலியில் அமரவைத்து, கும்மியடித்து, கிண்டல் செய்தது மறக்க முடியாதது.

படிக்கும் வயதில் காமவெறி

கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை, கைச் செலவுக்கு பணம், தறுதலைப்போக்கான மன நிலை, குடும்பத்தார் கண்காணிப்பு இல்லாதது ஆகியவை, ஒரு மாணவரை எப்படியெல்லாம் பாழடிக்கிறது என்பதை, சமீபத்திய உதாரணங்கள் வழியாக இங்கு புரிய வைக்க முயல்கிறோம்.

விருதுநகரில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4 பேர் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் பெண் டாக்டர் ஒருவர், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கைதானவர்களில் 2 பேர் மாணவர்கள்.

கோவையில் வாக்கிங் சென்ற 42 வயது பெண் டாக்டரை, பூங்காவில் மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில், 10ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

இதெல்லாம் ஒருபானை சோற்று ஒருசோறு பதம் என்ற நிலையில்தான். நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. வெளியில் தெரியவந்தது இது. திரைமறைவு தடுமாற்றங்கள் பல.

படிக்கும் வயதில் போதை வெறி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் போதையில், பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் தகராறு செய்யம் வீடியோ சமூக வலைத்தளத்தை மட்டுமல்ல, காண்போர் அத்தனை பேரையும் அதிரச் செய்தது. ‘ஏறுனா ரயில், இறங்குனா ஜெயில், போட்டா பெயில்’ என்று அடுக்கு மொழில், அரிவாளுடன் மிரட்டிய மாணவனிடம் இருந்து, உயிரைக் காப்பாற்றக்கோரி, பள்ளிக் கல்வித்தறை அதிகாரிகளிடம் சரணடைந்த ஆசியர்கள், கல்வி அதிகாரி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிக்கும் மாணவிகள்

அதேபோல், சென்னை திருக்கழுக்குன்றம் அருகே, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓடும் பஸ்ஸில் பீர் குடித்து, கும்மாளமடித்தனர். கல்லூரி மாணவிகள் 13 பேர் வகுப்பு நேரத்தில் குளிர் பானத்தில், மதுவைக் கலந்து குடித்து, அந்த வீடியோ சர்ச்சையாக, 13 மாணவிகளும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பள்ளிச் சீருடையில் காட்டுப் பகுதியில் மாணவிகள் சிகரெட் புகைப்பதும், பீர் குடிப்பதுமான வீடியோக்கள் எல்லாம் அவ்வப்போது வெளியாகி, எல்லோரையும் அதிரச் செய்துள்ளது.

எங்கே தவறு நடந்தது?

அடியாத பிள்ளையும், ஒடியாத முருங்கையும் ஊருக்கு உதவாது என்பது பழமொழி. அதாவது, அடித்து, கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படாத மாணவனும், ஓடிக்கப்பட்டு ஒழுங்கு படுத்தபடாமல் வளர்க்கப்பட்ட முருங்கையும் வேருடன் வீழும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். பள்ளி வளாகத்தை நெருங்கும்போதே மாணவர்களிடம் ஒருவிதமான அமைதி, ஒழுக்கம் மனதளவில் ஏற்பட்டது. பள்ளியில் வகுப்பறை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்வது என்பது போன்ற அடிப்படை ஒழுக்கப் பழக்கங்கள் இயல்பாகவே கற்றுக் கொடுக்கப்பட்டது.

பணிகள்

ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால், ஒவ்வொரு 5 மாணவர்களுக்கும்
வகுப்பை சுத்தம் செய்வது தொடங்கி, தண்ணீர் எடுப்பது வரையிலான பணிகள் கொடுக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இந்த அடிப்படை ஒழுக்க முறைமைகள் எல்லாம் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமை என்பது போன்ற சித்தரிப்பு, வளர்த்தெடுக்கப்பட்டு, அதுவே உண்மை என்ற பிம்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் அடிப்படை, சுய ஒழுக்கம் ஆகியவை தொடக்கத்திலேயே கிள்ளியெறியப்பட்டது.

கட்டுப்பாடு இல்லாத பெற்றோர்

40 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் 3 முதல் 4 குழந்தைகள் வரை இருந்தனர். இதனால், பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக சிரமப்படவில்லை. காரணம், மூத்த குழந்தைகள் தங்கள் சகோதரர், சகோதரிகளை ஒழுங்குபடுத்தினர். போதாதற்கு ஆசிரியர்கள் கட்டுப்பாடு. இதனால், பள்ளியில் இருக்கும் ஒழுங்கு, வீட்டிலும் கொண்டு வரப்ப்பட்டு, அதுவே தொடர்ந்தது.

ஓரிரு பிள்ளை

ஆனால், காலப்போக்கில் மக்கள் தொகை மாற்றம் வந்தது. பல இந்துக் குடும்பங்களில் ஒன்றிரண்டு குழந்தைகள் உள்ளனர். லட்சக் கணக்கான குடும்பத்தில் ஒரேஒரு ஆண் அல்லது பெண் குழந்தை உள்ளது. இதனால், அதிக செல்லம், கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை, குழந்தைகளின் சிறகை விரித்துள்ளன. சுதந்திரத்தின் கடைசி எல்லை எது என்பதை இப்போதை அறியத் துடிக்கின்றனர்.

செல்லம்

ஒற்றைப் பிள்ளை என்பதால், தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை துணிச்சலாக கண்டிக்க பெற்றோர் தயங்குகின்றனர். இதனால், குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர் பூஜ்ஜியம் என்ற நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். டிரைவரின் கட்டுப்பாட்டில் பஸ் இருப்பது நலம். கட்டுப்பாட்டை இழந்த பஸ் டிரைவருடன் சேர்த்து, பலரையும் காலி செய்துவிடும். இங்கே பஸ்டிரைவர் பெற்றோர். பஸ் என்பது மாணவ, மாணவிகள்தான். எனவே, பெற்றோர்களின் கண்காணிப்பில், குழந்தைகள் இருப்பது நலம்.

பெற்றோர் கண்டிப்பு

இன்போசிஸ் நாராயணமூர்த்தி அடிக்கடி சொல்லும் ஒருவிஷயம், ‘‘ஒரு குழந்தைக்கு ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால், வாழ்நாளில் ஒரே ஓரு பெற்றோர்தான். பெற்றோர் தங்கள் குழந்தைகளை சரியாக வளர்க்காவிட்டால், அல்லது குழந்தைகள் தங்கள் பெற்றோரை மதிக்காவிட்டால் எல்லாம் வீண்’’ என்பதுதான். இது இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

உடை முதல் சிகை வரை ஒழுங்கீனம்

பள்ளிக்கு சீருடை எவ்வளவு முக்கியமோ, அதேபோல், படிக்கும் வயதில் ஒழுக்கமான சிகை அலங்காரம் மிக முக்கியம். சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள், தங்கள் வகுப்பில் ஒழுங்காக முடிவெட்டிக் கொண்டு வராத மாணவர்களை வகுப்புகளை விட்டுவெளியில் அனுப்பினர். இது ஒருவிதமான தண்டனைதான். ஆனால், இன்று இவ்வாறு செய்வது மனித உரிமை மீறல் என்று குறியீடு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. ஒரு குரங்காட்டி கையில் குச்சி இருக்கும் வரை, குரங்கு பயத்துடன் எல்லா வேலைகளையும் செய்யும். ஆனால், அந்தக் குச்சியை குரங்காட்டி கீழே வைத்துவிட்டால், குரங்கு தன் இயல்புத் தன்மையை காண்பிக்கத் தொடங்கிவிடும்.

இங்கே குரங்காட்டி என்பது ஆசிரியர்கள் கையில் இருக்கும் பிரம்பு. குரங்கு என்பது வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் மனோ நிலை. நியாயமான சிகை, உடை அலஙகாரங்களை ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். அதேபோல், ஒழுக்கமற்ற சிகை அலங்காரம், உடைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

தேவை முத்தரப்பு ஒத்துழைப்பு

பள்ளிக்கல்வி, பெற்றோர் ஆசிரியர் மற்றும் முடிதிருத்துபவர் ஆகியோர்கள் கொண்ட கூட்டம் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்க, இப்படித்தான் முடி வெட்டப்பட வேண்டும் என்ற வரையறை நிர்ணயம் செய்யப்படவேண்டும். வகுப்பறையில் தங்கள் மாணவனின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பெற்றோர்கள் நேரில் சென்று ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இது செல்போன் யுகம். மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்களை ஆசிரியர்கள் கேட்டுப் பெற்று, மாணவர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறும்போது, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து, கண்டிக்கும்படி அறிவுறுத்தலாம். கட்டுப்படாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கி, வெளியேற்றலாம். காரணம், வாழைத்தோப்பில் சீமைக் கருவேல் முள் இருப்பது, ஒட்டு மொத்த தோப்பையும் சிதைத்துவிடடும்.

திருந்தட்டும் தமிழக அரசு

2021 தேர்தலில் வெற்றிபெற்று, திமுக ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு மது இருக்காது என்று இப்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறினார். அவரது தங்கையும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்னும் ஒருபடி மேலேபோய், ‘‘இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்’’ என்று பேசிய பேட்டி, சமூக வலைத்தளங்களில், அவ்வப்போது உலாவந்து, திமுகவின் மது ஒழிப்பு கொள்கைகளை கிண்டலடிக்கிறது.

மது குடிக்கும் வயது

இந்தியாவில் ஓட்டுரிமைக்கு 18 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மது குடிப்பதற்கான வயது என்று எதுவும் நிர்ணயம் இல்லை. இதனால்தான் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே மாணவ, மாணவிகள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். கல்வியை மட்டுமல்ல, கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கமான வாழ்க்கை, தங்களது நியாயமானே வேலை வாய்ப்பு, சமூகத்தில் சம்பாதித்த நற்பெயர் என்று எல்லாவற்றையும் இழக்கின்றனர்.

இவற்றை எல்லாம் சீர் படுத்த வேண்டிய தமிழக அரசின் தலையாய கடமையாகும். உண்மை இவ்வாறு இருக்க, தமிழக அரசு டாஸ்மாக வழியாக ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பது ஒழுக்கத்தை விற்று, அவமானத்தை சம்பாதிக்கும் செயலாகவே; இருக்கும்.

இதுதான் திராவிட மாடல்?

தமிழக முதல்வர் ஸ்டாலின், நம் மாநிலத்தில் மட்டுமல், பிற மாநிலங்களில் ஏதாவது கூட்டங்களில் கலந்து கொண்டால் கூட, ‘தமிழகத்தின் திராவிட மாடல் நிர்வாகத்தை, நாடு முழுவதும் கொண்டு செல்வோம்’ என்று பேசிக் கொண்டிருக்கிறார். நாட்டின் பல மாநிலங்கள் கல்வி வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும்போது, தமிழகம் 22ம் இடத்தில் உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வருத்தப்பட்டிருப்பது இங்கே சுட்டிக்காண்பிக்க வேண்டிய விஷயம். நமது மாநிலத்துக்கு உடனடியாக தேவை எல்லாம், சீட்டு கட்டு சார்ந்த ஒழுகக்கேடான கல்வியல்ல. ஒழுக்கத்தை போதிக்காத திராவிட மாடல் கல்வியும் அல்ல. கல்வி, வேலை வாய்ப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் தமிழர்களை முன்னிறுத்தும் வகையிலான அறிவு, அறிவியல் சார்ந்த தரமான கல்விதான்.

போதையில் தள்ளாடும்

இதற்கான சரியான திட்டமிடல் ஏதும் இல்லாத நிலையில், தமிழகத்தின் கல்வித்தரம் போதையில் தடம் புரளத் தொடங்கியது. இதை சரி செய்வதற்காக, சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையில் 13 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு நியமித்துள்ளது. பார்க்கலாம், இந்தக் கமிட்டி, கல்வித்துறையை எப்படி நிமிரச் செய்கிறது என்று…