Friday, March 29, 2024

நம்மில் ஒருவர் இமயம் போல் உயர்ந்தவர்!

தர்மத்தை நாம் ரட்சிக்க தர்மம் நம் அனைவரையும் காக்கும் என்று தான் செய்த தர்மத்திலும் மற்றவர்க்கு பங்கு தரும் தங்க மனம் கொண்டவர் தான் ஜே. பாலசுப்ரமணியம் அவர்கள்…
மணித்துளிகள் நேரங்களாக உருண்டோடினாலும் சுவாரஸ்யமான தனது கருத்துக்களால் மக்களை கவரும் செம்மல் இவர். பல சமயங்களில் இவர் கடந்து போகும் நேரத்தில் சொல்லி செல்லும் கருத்துகளின் ஆழமும் உண்மையும் நம்மை சிந்தனையில் தள்ளும் அற்புத சக்தி கொண்டது.
யார் இவர்? என இவரை தெரிந்தவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். கடின உழைப்பால் வாழ்கையின் விளிம்பு நிலையில் இருந்து முன்னேறிய பெரிய மனிதர்களில் மாணிக்கமாக திகழ்பவர் தான் ஜே.பி….

கலை, கோயில், பாரம்பரியம், கல்வி என இவரது ரசனை விரிந்து கொண்டே போகையில், இந்த கலா ரசிகரை சுற்றி ரசிகர்களும் விரிந்து கொண்டே தான் போகிறார்கள்….
இவர் நகைச்சுவையுடன் கலந்து தரும் வாழ்வியல் தத்துவங்களால் கவரப்படாதவர்கள் இருக்க முடியாது.
அவருடன் அவரது கருத்துக்களை புரிந்து கொள்ள ஒரு நேர்காணல்…

 

சாவித்திரி ஃபவுண்டேஷனின் வெள்ளி விழாவில் உங்களை சந்திக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் என்ன?

தாயிற் சிறந்த கோயில் இல்லை. ஆனால் என் தாயை காப்பாற்ற முடியாமல் அந்நாளில் வறுமை தடுத்துவிட்டது. என் தாயின் மூளையில் வளர்ந்து வரும் கட்டியினை அகற்ற பெரிய ஆஸ்பிட்டல், வெளிநாட்டு மருத்துவர் என அதிகம் செலவு செய்ய வேண்டும்! உங்களால் முடியாது. எனவே 3 மாதங்கள் வரை இவருக்கு வலி போக்கும் மாத்திரைகளை கொடுத்து வருகிறோம் என்று டாக்டர் கூறி விட்டார்.
எங்கள் பெரிய குடும்பத்திற்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கே தடுமாறும் சூழல். என்ன செய்வது?
எங்கள் தாயை கண்ணெதிரே காலனுக்கு பறிகொடுத்த கொடுமை என்னை இன்றளவு வாட்டுகிறது.

அதனால் தான் எனது தாயாரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, கல்வி உதவி, வைத்திய உதவி, அன்னதானம், ஏழை பெண்களுக்கு திருமண மாங்கல்யம் அல்லது பட்டுப் புடவை அறிவு கண்ணை திறக்கும் புத்தக வெளியீடு என்று என்னால் முடிந்த வரையில் செய்து வருகிறேன்.

‘‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஒர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ - என்பது பாரதி வாக்கு

என் தாயிற்கு கல்வியின் மேல் அபார நம்பிக்கை உண்டு. கல்வி ஒன்று தான் நம்மை முன்னேற்றும். பெரிய படிப்பு படித்து விடு… என்று அடிக்கடி சொல்வாள்.. அம்மா கூறுவது தான் சத்தியம் என்பது என் ஆழ் மன நம்பிக்கையானது. பல துன்பங்களிடையே, சவால்களிடையே நான் படித்தேன் என் அம்மாவிற்காக!!

உங்கள் குடும்பம் பெரியது என்று சொன்னீர்களே... எப்படித்தான் சமாளித்தீர்கள்!

எங்கள் குடும்பத்தில் குழந்தைகள் 7. நான் தான் மூத்தவன். என் தந்தை ஜெமினி சினிமா கம்பெனியில் டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தார். மிக குறைந்த சம்பளம். சிறு சிறு வேலைகள் பள்ளி காலம் முதல் செய்வேன். எனக்கு ஒரே ஒரு எண்ணம்தான். எங்கள் வீட்டிற்கு இன்னும் கொஞ்சம் அதிக பணம் எப்படி வரும் என்பதுதான். பத்தாம் வகுப்பு பள்ளி விடுமுறையில் அகத்தியர் கோயிலில் எப்போதும் போல வாழை பழத்திற்காக நிற்கிறேன். கோயில் அறங்காவலர் கோவிந்தராஜ் செட்டியார் வந்தார். என்னை பார்த்து ‘வேலை செய்கிறாயா’ என கேட்க தலையாட்டினேன்.
அன்று தொடங்கிய இந்த பந்தம் வாழ்நாள் முழுவதும் இருந்தது. என்ன வேலை என்று பார்த்தால் அட்டெண்டர் வேலை தான். அவரது ஆபிஸூக்கு பல விநியோகஸ்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு டீ, காபி வாங்கி கொடுக்க வேண்டும். வரும் கடிதங்களை கொண்டு கொடுக்க வேண்டும். இப்படியே 3 மாதங்கள் போனது. சம்பளம் தரவில்லை.

 

விடுமுறை முடிந்தது. 11ம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆன மொத்த செலவும் நான் தருகிறேன் என்றார். அப்போதிலிருந்து நான் பி.காம் படிக்கும்வரை என் மொத்த படிப்பு செலவும் அவர் தான் தந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேலை செய்வேன். நான் பி.காம் படிக்க ஆரம்பித்தவுடன் கணக்கர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன்.
மேலும் சிஏ படி நான் மாதம் பணம் வீட்டு வாடகைக்கு தருகிறேன் என்று சொல்ல அப்படித்தான் நான் படித்தேன். என் தம்பி பாஸ்கருக்கும் டாக்டராக படிக்க உதவியது செட்டியார் தான். நல்ல வேலை கிடைத்தது. குடும்பத்தினருக்கு உதவி செய்து இன்று எல்லோரும் வசதி, வாய்ப்புகளோடு உள்ளனர்.

வறுமை கோட்டில் இருந்து உயர வந்து விட்ட உங்களின் அறிவுரை என்ன?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

என்பதனை முதலில் சொல்லிக் கொள்கிறேன். வசதி இருந்தாலும் கொடுக்க மனம் இருக்க வேண்டும். கல்வி தானம் என்பது ஒரு ஏழைக்கு மட்டும் அல்ல. அவனது குடும்பமே முன்னேறி விடும்.

இந்த புண்ணியம் உங்களது 7 தலைமுறைகளுக்கு வந்து சேரும் சிறப்புடையது. எனவே நான் சொல்லக் கூடியது எல்லாம் ஒன்றுதான். தயை செய்து பிறருக்கு குறிப்பாக ஏழைகளுக்கு கல்வி தானத்தை கொடுங்கள். உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.
இன்று படுக்கிறோம். நாளை காலையில் நமக்கு காபியா? இல்லை பாலா என்று இறைவன் தீர்மானிக்கிறான்.
கொடிய பசியை அனுபவித்தவன் நான்! அன்னதானம் செய்ய வேண்டும் என்பதை ஒரு தவமாகவே ஏற்றுக் கொண்டுள்ளேன்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் (பி)யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.

என்ற ஔவையார் வாக்கில் உள்ள உண்மையை என் மனம் வேதமாகவே ஏற்றுக் கொண்டுள்ளது.
என் குடும்பத்தினருக்குத் தேவையானதை நான் செய்து விட்டேன். இனி என் எண்ணமெல்லாம் கடவுள் எனக்கு உடல் நலத்தையும், பொருள் வளத்தையும் தர வேண்டும். நான் தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்! கொடுத்து பிறர் மகிழ வாழுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

 

கலை உலகின் அடுத்த நல்லி குப்புசாமி நீங்கள் தான் என்று பெயர் காரணம் என்ன? உங்களுக்கு பிடித்த கலை எது?

கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கலையம்சம் கொண்ட நாடகங்கள் என பலவித ரசனைகள் உண்டு.
நல்ல கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களது கலையினை மிளிர செய்வது ஒரு கலை சேவை. இதற்கென ஆரம்பிக்கப்பட்டதுதான் JB கல்ச்சுரல் பவுண்டேஷன். 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. பல நல்ல கலைஞர்களின் ஆற்றலை ஊக்குவித்து அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது எங்கள் அறக்கட்டளையின் நோக்கம்.

அரசியல் ஈடுபாடு உண்டா?

ஆன்மீக அரசியலில் ஈடுபாடு உண்டு. அரசியலை பற்றிய செய்திகள், கட்டுரைகள் படிப்பேன். பல அரசியல் தலைவர்களை எங்களது கலை மேடைகளில் சந்தித்து வருகிறேன். ஒரு சமுதாயம் ஒற்றுமையாக வளமாக, நலமாக இருப்பது நல்ல அரசியல்வாதிகளின் கையில்தான் உள்ளது.

தேச நலன் காக்க தொடர்ந்து நீங்கள் எடுத்து வரும் முயற்சியினைப் பற்றி..

எனது தேச பற்று தான் பாரத நாட்டில் மக்கள் வளமாக, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற தீராத ஏக்கத்தை தருகிறது. எனவே தான் நான் முடிந்த வரையில் நமது பெருமைகளை, பாரம்பரியத்தை ஒற்றுமையை எடுத்துச் சொல்லும் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்கிறேன்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் வெளிப்படை யானவை. எல்லோருக்கும் பொதுவானவை. நான் ஒவ்வொரு இந்தியனுக்குமான பாரத பிரதமர் என்றே அவரது பேச்சும், செயல்களும் உள்ளன. நிர்வாக திறன், ஆளுமை, தேச பற்று கொண்ட அவர் போன்ற தலைவர்களை நாம் கொண்டாட வேண்டும். பாரதம் மீண்டும் உலகத்தின் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே என் கனவு.

உங்களை மனசாந்தியோடு வைக்கும் தாரக மந்திரம் என்ன?

கொடுத்து வாழ அந்த தெய்வம் வழி செய்ய வேண்டும். சேவை செய்ய உடலும், மனமும் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றே கடவுளை வேண்டுவேன்.
சிறந்த புத்தகங்களை வெளியிடுவதில் எனக்கு கொள்ளை பிரியம். ஏனெனில் பல லட்சம் மக்கள் அந்த புத்தகத்தால் பயன் அடைவர். தூய்மையான கருத்துக்கள், தெய்வீக சிந்தனைகள், மருத்துவ குறிப்புகள் என பலவற்றை எங்களது அறக்கட்டளை மூலம் வெளியிட்டுள்ளோம்.

மனதுக்கு மிகவும் சாந்தி தந்தது ‘பெரியவா அந்தாதி’ புத்தக வெளியீடு தான்.

எனது முதலும் முடிவுமான பதில், எனது தாரக மந்திரம் கொடுத்து வாழ வேண்டும்.