ஜயமே வேதம்… வேதமே ஜயம்

“பைத்ருகம்” படத்தின் இயக்குனர் ஜெயராஜ்.

1993-ல் வெளிவந்த படம்.

இந்தப் படத்தின் கதை கேராளவில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு வைதிக பிராஹ்மணக் குடும்பத்தைப் பற்றியது.

ஒரு கிராமத்தில் வேத வைதிக கர்மங்களில் பாண்டித்யம் மிக்கவரும், ஸந்த்யாவந்தனம், அக்நிஹோத்ரம் முதலிய நித்ய கர்மாநுஷ்டானங்களைத் தவறாமல் பின்பற்றுபவருமான ஒரு பிராஹ்மணர் வசித்து வருகிறார்.

அவருக்கு இரண்டு பிள்ளைகள்

அவர்களில் மூத்தவன் ஒரு நாத்திக இயக்கத்தில் சேர்ந்து நாத்திகனாகி விடுகிறான்.

மத நம்பிக்கைகள், மதச்சடங்குகள், வழிபாடுகள் இவற்றை யெல்லாம் எதிர்த்துப் பொதுக் கூடங்களில் பேசி வருகிறான்.

அவன் திருமண செய்து கொண்ட பெண் குடும்ப மரபுப்படி வாழ்கிறாள்.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை.

தன் மனைவியையும் தனது நாத்திக வழிக்கு இழுக்க முயற்சிக்கிறான்.

ஆனால் அவள் அவன் வழியைப் பின்பற்ற மறுத்து விடுகிறாள்.

அதனால் அவன் மனையோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை.

நாத்திக பிரசாரம்

எப்போதாவது வீட்டுக்கு வருவது வந்த நேரங்களில் தந்தையின் வைதிக வாழ்க்கையை எதிர்த்து விமர்சனம் செய்வது மற்ற நேரங்களில் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஊர் முழுக்க நாத்திக பிரச்சாரம் செய்வது இப்படிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.

இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சஞ்சலத்தில் இருக்கிறார்கள்.

ஜாதகர்மம்

ஒருநாள் அவனது தந்தை அவனிடம்,
”உன் குழந்தைக்கு ஜாதகர்மம் (தலைமுடி மழித்தல்,சாதம் ஊட்டுதல்,காதுகுத்தல்,பூணல் போடுதல் என்ற சடங்குகள்) செய்ய வேண்டிய வயது வந்துவிட்டது. அதைச் செய்ய வேண்டும்” என்கிறார்.

உடனே அவன் அவரைக் கோபப் பார்வையால் பார்த்து,
”என் குழந்தைக்கு ஜாதகர்மம் தேவையில்லை.என் பிள்ளையை மனிதனாக வளர்க்கப் போகிறேன்” என்கிறான்.

காயத்ரி மந்திரம்

அதற்கு அவனது தந்தை, “மனிதனாவதற்குத்தான் ஜாதகர்மம் செய்வது.உன் பிள்ளையை காயத்ரி மனிதனாக்கி விடுவாள்” என்கிறார்.

ஆனால் அவன் ஸம்மதிக்கவில்லை.

இதற்கிடையில் கிராம மக்கள் அந்த வைதிக ப்ராஹ்மணரைப் பார்க்க வருகிறார்கள்.
அவர்கள் அந்த ப்ராஹ்மணரை வணங்குகிறார்கள்.

அவர் அவர்களை ஆசீர்வதித்து அவர்கள் வந்த காரணத்தை வினவுகிறார்.

மழைக்கான யாகம்

“திருமேனி! நம் ஊரில் பலகாலமாக மழையில்லை.குளம், குட்டைகள் எல்லாம் வறண்டு விட்டன.நம்மூரில் யாகம் செய்தும் பலவருடங்களாகிவிட்டது. தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும்.”என்கிறார்கள்.

அதற்கு அவர், “வைதிக கர்மங்கள் மீது மக்களுக்கு இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. செய்வது பெரிதல்ல. நம்பிக்கையோடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பலன் கிடைக்கும். அதனால் இன்றைய சூழலில் அது சரி வராது என்று நினைக்கிறேன்” என்கிறார்.

பலன் கிடைக்க நம்பிக்கை வேண்டும்

அதற்கு ஊர்மக்கள், “திருமேனி! நாங்கள் நம்புகிறோம். தாங்கள் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். தாங்கள் நடத்தியே தீரவேண்டும்” என்கிறார்கள்.
பிறகு அவர் யாகம் செய்ய ஸம்மதிக்கிறார்.

அதிராத்ரம் எனும் யாகம்

(அதிராத்ரம் என்ற ஒரு யாகம்.அந்த யாகம் செய்தால் மழைவரும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதைச் செய்ய பணச்செலவாகும். 12 நாட்கள் செய்ய வேண்டிய யாகம் அது.)

ஊர் மக்களின் ஒத்துழைப்போடு அதிராத்ரம் என்ற அந்த யாகத்தைச் செய்ய ஆரம்பிக்கிறார்.
அவர் யாக சாலையை நோக்கிப் புறப்படும் போது அவரது நாத்திக மகன் வந்து அவரை வழிமறித்து

இது முட்டாள் தனம்…

“நீங்கள் ஊரை ஏமாற்றுகிறீர்கள்.மூடநம்பிக்கையை மக்களிடம் பரப்புகிறீர்கள். எத்தனை காலத்திற்கு இப்படி சடங்கு ஸம்ப்ரதாயமென்று மக்களை ஏமாற்றுவீர்கள்? எத்தனையோ மக்கள் பட்டினியால் வாடும் போது லக்ஷக்கணக்கான ரூபாய் செலவழித்து இந்த யாகம் செய்வது முட்டாள் தனமில்லையா? யாகம் செய்தால் மழை பெய்யும் என்பது முட்டாள்தனம். அதை நீங்கள் செய்யக்கூடாது” என்று தடுக்கிறான்.

அப்போது அவர், “இது எனது கர்மம். இதைச் செய்தே தீருவேன்” என்கிறார்.

சவால்

அப்போது அவன், “உங்கள் யாகத்தால் மழை பெய்யா விட்டால், என் வழிக்கு மாறுவீர்களா?’ என்று சவால் விடுகிறான்.

அதற்கு அவர், “அப்படி விதியிருந்தால் நடக்கும்” என்கிறார்.

யாகம் 12 நாட்கள் நடக்கிறது.

யாகம் பூர்த்தியானவுடன் யாகசாலை யாகாக்னியால் எரியூட்டப்படுகிறது.

யாகம் செய்து வைத்த அந்த ப்ராஹ்மணர் மற்ற புரோஹிதர்களுடன் அவபிருத ஸ்நாநம் செய்யச் செல்கிறார்.

அப்போது மழைக்குரிய எந்த அறிகுறியும் வானத்தில் காணப்படவில்லை.

இது மூட நம்பிக்கை

அப்போது அந்த நாத்திக மகன் தன் கூட்டத்தோடு ஊர்மக்களைப் பார்த்து,

மக்களே! பார்த்தீர்களா? என் அப்பா யாகம்

செய்தால் மழை பெய்யும் என்று நம்பினீர்களே! மழை பெய்ததா? வானத்தில் அதற்குரிய அறிகுறியாவது தென்படுகிறதா? இனியாவது இந்த மூட நம்பிக்கையைக் கைவிடுங்கள்”
என்று உரக்கக் கத்திச் சொல்கிறான்.

அதைக் கேட்டு ஊர்மக்கள் திகைத்து நிற்கின்றனர்.

அடுத்த கணத்தில் வானத்தில் கார்மேகங்கள் அடுக்கடுக்காய் கிளம்புகின்றன.

மழை கொட்ட ஆரம்பிக்கிறது.

மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அந்த நாத்திக மகனும் மழையில் நனைகிறான்.

அப்போது தனது நடவடிக்கையும் தான் தனது தந்தையை விமர்சித்ததும் தவறு என்று உணர்ந்து தன் தந்தையை வணங்கி மன்னிப்புக் கேட்க எண்ணி தன் வீட்டுக்கு வேகமாக வருகிறான்.

மனமுடைந்த பிராஹ்மணர்

இதற்குள் யாகம் முடித்து இல்லம் திரும்பிய அந்த பிராஹ்மணர் தன் மகனின் போக்கை நினைத்து மனமுடைந்தவராய் அக்நிஹோத்ர சாலைக்குச் சென்று அணையாத அக்நிஹோத்ர அக்நியில் தன்னை எரித்துக் கொள்கிறார்.

வீட்டுக்கு வந்த அவன் அப்பா! அப்பா! என்று சொல்லிக் கொண்டே வீடு முழுக்க அவரைத் தேடுகிறான்.

இறுதியாக அவர் அக்னிஹோத்ர சாலையில் எரிந்து கொண்டிருப்பதைக் காண்கிறான்.

தவறு செய்து விட்டேன்

“அப்பா! என்னை மன்னித்து விடுங்கள. தவறு செய்துவிட்டேன்.தங்கள் வழியே சிறந்த வழி. அதை ஏற்கிறேன்.” என்று கதறி அழுகிறான். அப்பா இறந்து விடுகிறார்.

மனம் திருந்திய நாத்திகன்

பிறகு அவன் தானும் உபநயனம் செய்து கொண்டு தன் பிள்ளைக்கும் அப்பா சொன்னபடி உபநயனம் செய்து வைக்கிறான்.

படம் முடிகிறது. இதுதான் படத்தின் சுருக்கமான கதை.

கலங்கிய கண்கள்

யாக முடிவில் மழை பெய்த போதும் கடைசிக் காட்சியின் போதும் எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டி விட்டது.கண்ணீரை அடக்க முடியவிலை.

வெற்றி

வைதிகத்தின் வெற்றியை எவ்வளவு அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

இன்னும் அந்த நம்பிக்கை கேரளாவில் இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் படம் எடுப்பவர்கள் பிராஹ்மணனைத் திட்டியும் கேவலப்படுத்தியும் ஸநாதன மதமரபுகளை விமர்சித்தும் படம் எடுக்கிறார்கள்

அப்படியெல்லாம் கேரளாவில் படமெடுத்தால் கேரள மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டர்கள்.

அம்மக்கள் தங்களது ஸநாதன சமய கலாச்சார பண்பாட்டு மரபுகளின் மீது இன்றும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதுடன் அந்தப் பண்பாட்டு மரபின் வேர்களில் நீர் ஊற்றி இன்னும் வளர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பிராஹ்மண த்வேஷமும் வேதவைதிக த்வேஷமும் ஸநாதனப் பண்பாட்டு மரபு மீறல்களும் அறுபதுகளுக்குப் பிறகு தோன்றி இன்று விருக்ஷமாக வளர்ந்து நிற்கிறது.

இருப்பினும் ஸநாதந தர்மம் இங்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதை அழித்துவிட முடியாது. அமரத்வம் வாய்ந்தது அது.

மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளில் மங்களம் பெறுகுவதோடு நாடும் செழிக்கும்.

நான்மறையில் நம்பிக்கையும் மறையோரின் ஆசியும் என்றும் வாழவைக்கும்.

ஜெயமே வேதம் …. வேதமே ஜெயம்