Friday, March 29, 2024

விவசாயி கடன்... தீர்வு என்ன!?

வேளாண்மை நாடான இந்தியாவில், இன்னமும் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் கிராமங்களில் விவசாயத்தை நம்பியே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு முறைசாரா விவசாய நாடு. அதாவது மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் இல்லை. சரியான நீர் மேலாண்மை இல்லை. உர மேலாண்மை இல்லை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு தினமும் 3 வேளை சோறு போட்டால் போதும் என்ற நிலையில்தான் இதுவரை நாட்டை ஆண்ட அரசுகளும் விவசாயத்தை வைத்திருந்தன.

 

காரணம், இந்தியாவின் விவசாயம் எப்போதும் பருவமழையை நம்பி இருந்ததுதான். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகளால் இந்தியா மழை பெற்றாலும், எல்லா ஆண்டிலும் இது ஒரே சீராக இருந்தது இல்லை. அதாவது, நிச்சயமற்ற மழைப்பொழிவு என்பது இந்திய விவசாயத்தின் சாபக்கேடு எனலாம். அதேநேரத்தில், மழை சிறந்த நாட்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு விலைச் சரிவும், வறட்சி காலத்தில் வேளாண் பொருட்கள் மீதான விலை உயர்வும், இப்போதும் விவசாயிகளின் வாழ்க்கையில் பரமபதம் ஆடிக் கொண்டிருக்கிறது.

agriculture

இப்படி, திட்டமிடப்படாத முறை சாரா விவசாயம், இந்தியாவின் விவசாயப் பெருங்குடி மக்களின் ஒரு பிரிவினரை எப்போதும் கடன்காரர்களாகவே வைத்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்திய விவசாயத்தை 2 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். பெரும் நிலச்சுவான்தாரர்கள் மற்றும் சிறுகுறு விவசாயிகள். 5, 10 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளை சிறு, குறு விவசாயிகள் எனலாம். இதற்கு அப்பால் 10 முதல் 20 ஏக்கர் வைத்துள்ள நடுத்தர விவசாயிகள், 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகள், அப்புறம் இத்யாதி பண்ணையாளர்கள்.

 

பயிர்களின் தன்மை!

இவர்களில் சிறு விவசாயிகள் பலர் உணவுதானியங்களான நெல் சாகுபடியை நீர்பாசன சிக்கல்களால் பெரிய அளவில் மேற் கொள்வது இல்லை. மலர்செடிகள் சாகுபடி, மானாவாரி சிறுதானிய சாகுபடி என்று மாற்றிக் கொண்டுள்ளனர். 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி கரும்பு, வாழை என்று சாகுபடி செய்கின்றனர். இதில் கரும்பு விவசாயிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது சர்க்கரை ஆலைகள்தான். வாழை பணப் பயிர், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக சந்தைக்கு வருகிறது.

 

மீண்டும் மீண்டும் கடன்!

என்னதான் விவசாயிகள் கையில் பணம் புரண்டாலும், எல்லாம் கையில் இருக்கும் வரைதான். பருவமழைத் தொடங்கிவிட்டால் பட்டா, சிட்டா அடங்கல், வீட்டு பத்திரம், நகைகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடனுக்கு வரிசையில் நிற்கின்றனர். இப்படி, விவசாயிகளின் வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்டக் கடன், சில நேரங்களில் மத்திய மாநில அரசுகளின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்பது, இந்திய பொருளாதாரத்தின் சாபக்கேடு எனலாம்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கும் கடனின் அளவு 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இருக்கும். இதையும் எளிதில் அடைக்கும் வகையில்தான் வாங்குகின்றனர். இதைவிட கொஞ்சம் கூடுதல் தொகையை பொதுத்துறை வங்கிகளில் பெறுகின்றனர். இவ்வாறு பெறும் சிறிய ‘பெரும்’ கடன் தொகை, வறட்சிக் காலங்களில் காலை வாரி விடுகிறது. இதனால், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, வங்கிகளுக்கும் பெரும் சுமையாக மாறிவிடுகிறது.

 

மாநில கடன் தள்ளுபடிகள் சாத்தியம் ஏன்?

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெரும் கடன் சிறிய அளவில் இருக்கும் என்பதால், மாநில அரசுகள் சூழ்நிலைக்குத் தகுந்தார்போல் முடிவெடுத்து, அவற்றைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிடுவது உண்டு. இந்த வகையில் தமிழகத்தில் பலமுறை கூட்டுறவு வங்கிகளில் பெறப் பட்ட விவசாயக் கடன்கள் பெரும் அளவில் தள்ளுபடி செய்யப்பட்டதும் உண்டு. ஆனால், எந்த ஒரு சூழ்நிலை யிலும், கூட்டுறவுவங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டத் தொகை, மீண்டும் அந்த வங்கிகளுக்கு வழங்கப்பட்டதில்லை.

 
FARMER2

இதனால், தமிழகத்தில் இன்றுள்ள கூட்டுறவு சங்கங்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. சிலபல நிலவள வங்கிகளில், விவசாயிகளிடம் கொடுத்த பல லட்சம் ரூபாய் கடன் தொகையை, வசூலித்தே சம்பளம் போடக் கூடிய துர்பாக்கிய நிலைமை உள்ளது. கொடுக்கப்படாத கடன் நிலுவைத் தொகை, கூட்டுறவு வங்கிகளையே இப்படி ஆட்டிப் படைக்கும்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டாம்.

 

கடன் தள்ளுபடியால் யாருக்குப் பயன்?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் வேளாண்மைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் கடன் தள்ளுபடி நடைபெற்றது. இந்த இருபெரும் கடன் தள்ளுபடிகளால் சிறிய விவசாயிகளுக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை. பல வங்கிகளில் முறைகேடுகள் செய்த தலைவர், செயலாளர்கள், கட்சியினர் ஆதாயம் அடைந்தனர். உண்மையான விவசாயிகளுக்கு பெயரள வில் கடன் தள்ளுபடி போய் சேர்ந்தது. இதனால், தொடர்ந்து கடன்கார விவசாயிகளாக தத்தளிக்கின்றனர்

 

என்ன ஒற்றுமை இவர்களிடம்...

ஏறக்குறைய இதே நிலைதான், 2014ம் ஆண்டில் மோடியின் அரசு பதவி ஏற்கும் காலகட்டத்தில் இருந்தது. காரணம், அதற்கு முந்தைய அரசுகள் விவசாய வளர்ச்சிக்கு

ஒதுக்கிய நிதியின் லட்சணம். தேசத்தின் 50 சதவீத வேலை வாய்ப்பு, 17 சதவீத வளர்ச்சியைக் கொடுக்கும் விவசாயத்துக்கு… பொருளாதாரப் புலி மன்மோகன் சிங் அரசு ஒதுக்கிய நிதி 8லட்சம் கோடிக்கும் குறைவான தொகையாகும். இதனால், நாட்டின் வேளாண்மைத்துறை தத்தளித்துக் கொண்டே பயணம் செய்தது என்றால் மிகையல்ல. அரசின் தவறான வேளாண்மைக் கொள்கையால் ஆந்திரா, மகாராஷ்டிராவில் விவசாயிகள் பல்லாயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் புது முயற்சி

SinghLiveMint
Modi (1)

பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்னர் பட்ஜெட்டில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டத் தொகை, ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. 2017–18ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டத் தொகை 10 லட்சம் கோடி ரூபாய். இதே நிதி நடப்பு நிதியாண்டில் 11 லட்சம் கோடியாக ஒதுக்கப்பட்டது. இப்போது மோடி அரசை குறை சொல்பவர்கள் யார் வேண்டுமானாலும், இதை சரிபார்த்துக் கொள்ளலாம். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில், நாடு முழுவதும் குளிர் பதனக் கிடங்குகள் அமைத்தல், பால் உற்பத்தி மேம்பாடு, மின்னணு ஏல முறையில் நாட்டில் உள்ள சந்தைகளை இணைத்தல் என்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன.

 

திடீர் போர்க்கொடி ஏன்?

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவம்பர் 30ம் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட்டன. பிரதமர் மோடி நினைத்திருந்தால், உடனடியாக கடன் தள்ளுபடி அறிவிப்பை கொடுத்து, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், கடன் தள்ளுபடி என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய இருமுனைக் கத்தி என்பதால் அமைதி காத்தார் என்பதே உண்மை.

 

பொதுத்துறை வங்கிகளில் வேளாண் கடன் எவ்வளவு?

இன்றைய தேதியில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பற்று வேளாண்மைக் கடன் தொகையின் அளவு 4 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இதில் பயிர்கடன் என்ற வரிசையில் சில விவசாயிகள் டிராக்டர்கள் வாங்கிடவும், சில விவசாயிகள் நவீன வேளாண்மைப் பண்ணைகள் அமைக்கவும், சிலர் ஜேசிபி இயந்திரங்கள் வாங்கிடவும் கடன் பெற்றுள்ளனர். இந்தக் கடன் தொகையை கணக்கு வழக்குப் பார்க்காமல் ரத்து செய்ய உத்திரவிட வேண்டும் என்பது விவசாய சங்கங்களின் கோரிக்கை. இதில், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர் கட்சிகளும் அடக்கம்.

 

கூட்டுறவு சங்கங்களின் கடன் பாதிக்காதா?

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறிய விவசாயிகளுக்கு பயிர்கடன் கொடுக்கப்படுகிறது. இந்தக் கடன்களில் சிலவற்றை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தள்ளுபடி செய்துள்ளனர். எப்படியென்றால், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் மட்டும் தள்ளுபடியாகியுள்ளது. மீதம் 2 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் அப்படியே நீடிக்கின்றன. கர்நாடகா போன்ற மாநிலங்களில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. பெரும் கரும்புத் தோட்ட ஜமீன்கள் லாபம் அடைந்துள்ளனர். எனவே, கடன் தள்ளுபடி என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டி ஒரு விஷயம். மாநில அரசின் பட்ஜெட்டை கூட்டுறவு சங்கங்களின் கடன் தள்ளுபடி பாதித்தால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் தள்ளுபடி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தலாம்?

 

தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி எப்படிப்பட்டது?

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் 4 லட்சத்து 15 ஆயிரம் கோடி என்று முன்பே பார்த்தோம் அல்லவா? இந்தக் கடன் தொகையின் மதிப்பு 56 பில்லியன் டார்களாகும். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சகத்தின் பரிந்துரையால் வழங்கப்பட்ட கடன்களின் அதிகபட்ச அளவு 48 லட்சம் கோடிகளாகும். இவற்றில் 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு என்பிஏ எனப்படும் அசையா முதலீடு அல்லது வராக்கடன்களாக உள்ளன. இவற்றை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்ததன் வழியாக, நவம்பர் இறுதி வரை 2 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் வரை பொதுத்துறை வங்கிகளுக்குத் திரும்பியுள்ளது. மீதம் உள்ள பெரும் கடன்களில், இன்னும் எவ்வளவு வராக்கடன் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இந்த வராக்கடன்கள் எல்லாம் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்கடன்கள். அவர்களின் சொத்துக்களைப் பறித்து, ஏலம் விடுத்து மீட்கலாம். காரணம், இவை அனைத்தும் பொது மக்களின் பணம்

 

விவசாய கடன்!

ஆனால், விவசாயக் கடன்கள்? இவை வராக்கடன்கள் பட்டியலில் இல்லாமல் தனித்து நிற்கும் ஒரு கடன் தொகையாகும். சரி, விவசாயிகள் கேட்கிறார்கள் என்று அத்தனை கடன்களையும் தள்ளுபடி செய்திட முடியுமா? அதற்கு சாத்தியமே இல்லை. காரணம், இந்தக் கடன் தொகை, ஏற்கனவே 9 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனுடன் இணைந்து 13 லட்சம் கோடியாக வளர்ந்துவிடும். வராக்கடன் மீதான இந்த வளர்ச்சி, நாட்டின் நடப்புப் பற்றாக்குறையின் அளவு கடுமையாக பாதிக்கப்படும். நடைமுறை ரொக்கப் பரிவர்த்தனையைத் திரட்டுவதற்கு தள்ளாடிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளின் அடிப்படை செயல்பாடு அப்படியே முடங்கிவிடும். இது தற்காலிகம் தான் என்றாலும், இந்தக் கடன் தொகையை ஈடுகட்டுவதற்காக புதிதாக வரும் மத்திய அரசு, அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே, கடன் தள்ளுபடி இந்தியப் பொருளாதாரத்தை உலுக்கி எடுக்கும் வல்லமையுடன் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

கடன் தள்ளுபடி வரலாறு உள்ளதா?

கடன் தள்ளுபடி என்பது தேசிய அரசியலில் புதிய விஷயம் அல்ல. 2004-2009ம் ஆண்டில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதனால், கிராமப்புற விவசாயிகளை திருப்திப்படுத்த 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மன்மோகன் அரசு தள்ளுபடி வழங்கியது. இதனால்தான் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடம் கிடைத்தது. தமிழகத்தில் திமுகவை கரப்பான் பூச்சியைப் போல் காங்கிரஸ் கையாண்டது இதனால்தான்.

ஆனால், இப்போது சிக்கல் வேறு விதமாக உள்ளது. இப்போது கேட்கும் கடன் தள்ளுபடி, 2008ம் ஆண்டின் தொகையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 5 மடங்குக்கும் அதிகமான ஒரு தொகையாகும். ஒரே நேரத்தில், இவ்வளவு பெரிய கடன் தொகையை தள்ளுபடி செய்வது, நிச்சயமாக ஒரு பொருளாதார வீழ்ச்சியை தற்காலிகமாக ஏற்படுத்தும் என்பதே உண்மை.

 

எப்படி கடன் தள்ளுபடி வழங்கலாம்?

தேசிய வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களின் அளவை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இதில் தகுதியான கடன் அளவு எவ்வளவு என்பதை இறுதி செய்ய வேண்டும். அதாவது 2 முதல் 3 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால், அதற்கான விவசாயிகளின் தகுதியை நிர்ணயிக்க வேண்டும். இப்போது நிறைய பொதுத்துறை வங்கிகளில், விவசாயத்தின் பேரில் நகைக்கடன் நிறைய வழங்கப்பட்டு வருகிறது. சம்பந்தம் இல்லாமல் நிறைய பேர் பயனடையும் ஆபத்தும் உள்ளது.

 

ஆய்வு தேவை!

கடன் கடன் தள்ளுபடி என்று உறுதி செய்யப்பட்டால், கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் மேற் கொண்ட விவசாயத்தின் தன்மை, அவர்களது நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கள். வேளாண் விற்பனை மையங்களில் அவர் பதிவு செய்துள்ளாரா? அவரது பயிர் சாகுபடி முறை என்ன? எந்தெந்த பயிர்களை சாகுபடி செய்துள்ளார்? என்பதை பட்டியலிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கலாம் இந்த முறையில். இப்படி தள்ளுபடி செய்யும்போது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடியாகும். நிச்சயமாக சில கோடி விவசாயிகள் பயனடைவார்கள். அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாது.

 

இதுவே கடைசி!

எனவே, கடன் தள்ளுபடி என்று வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல், நியாயமான வழிகளில், நேர்மையான முறையில் விவசாயிகள் மத்திய அரசுடன் பேசலாம். மோடியின் அரசு நியாயமான கோரிக்கைகளை எப்போதும் புறம் தள்ளியது இல்லை. அதே நேரத்தில், இப்போதைய கடன் தள்ளுபடி, நாட்டின் கடைசி கடன் தள்ளுபடியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை. 2022ம் ஆண்டுக்குப் பின்னர் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும்போது, கடன் என்ற பேச்சுக்கு அங்கு இடம் இருக்காது அல்லவா?