எங்கே செல்கிறது தமிழ் சினிமா?சமீபத்திய கதறல்களின் ரகசியம்

தமிழர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாய், திராவிட மாயையின் ஒரு பகுதியாக இன்றைக்கும் கோலோச்சும் சினிமாவின் நிஜங்களாய் மெய்ப்பித்து இருப்பது, உண்மையில் ஒரு சாபக்கேடான விஷயம் என்றே சொல்ல வேண்டும். சினிமா என்பது இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு என்ற நிலைக்கு அப்பால், தமிழ் சினிமாவின் நடிகர்கள் சொல்வதே வேதவாக்கு, உண்மையின் நிலைப்பாடு என்ற நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். அதாவது, நிழல் சொல்வதே நிஜம், நிஜ உலகின் நடைமுறையையே நிழற்படத்தில் தங்கள் ஆதர்ச கதாநாயகன் சொல்கிறார் என்று நம்பும், இன்றைய தலைமுறை இளைஞர்கள், மெத்தப்படித்தும், ஆறாம் அறிவினைப் பயன்படுத்தாத ஒரு தலைமுறையினராக இருப்பது வருத்தமான ஒரு விஷயம்.

சினிமா டிக்கெட்டும்,
பெட்ரோல் விலையும்!

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாயை எட்டிவிட்டது என்று கதறும் லட்சக் கணக்கான இளைஞர்கள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 முதல் 30 கி.மீட்டர் தூரம் பயணிக்கும், விலை உயர்ந்த புல்லட்கள் மற்றும் நவீன பைக்குகளை வைத்துள்ளனர். இந்த சூழலில் சமீபத்தில் திரைக்கு வந்த பீஸ்ட் படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகம். அதாவது, இரண்டரை மணி நேர பொழுது போக்கிற்கு, ஒரு ரசிகன் செலவிட்டத் தொகை.
இதில், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கேள்வி கேட்கும் இளம் தலைமுறையினர், தாங்கள் பார்க்கும் சினிமாவுக்கான டிக்கெட் தொடர்பாக கேள்வி கேட்பதே இல்லை. மற்றொரு விஷயம், பெட்ரோல், டீசல் மீதான வரி, அரசின் கஜானா வழியாக, மக்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஆனால், தியேட்டர்களில் செலவிடும் தொகை? படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தும் தமிழகத்தின் 2 பெரும் திராவிட குடும்பங்களுக்கேச் செல்கிறது என்பது நிதர்சன உண்மை. ஆனால், திராவிடம் சொல்வது என்னவென்றால், வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.

தடம் மாறிவிட்ட தமிழ் சினிமா

தமிழ் நடிகர்கள் எல்லாம் 2014க்கு முன்னர் ஓரளவு சரியாகத்தான் இருந்தனர். ஆனால், 2014ல் மத்தியில் மோடி என்பவர் பிரதமராக வந்த பின்னர், தேசம் ஏதோ பெரிய சிக்கலில் சிக்கிவிட்டது போலவும், தாங்கள் அதை மீட்கத் துடிப்பதுபோலவும் அரசுக்கு ஆலோசனை சொல்லும் ரீதியில் படங்கள் எடுக்கத் தொடங்கினர். நாட்டின் பெரும் தொழிலதிபர்கள் அரசாங்கத்தை ஆட்டுவிப்பதாக அட்வைஸ் செய்து, மக்களை திசை திருப்பும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். இந்த வகையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி தொடங்கி, வேளாண் சட்டங்கள் வரை எல்லாம் தவறு என்ற ரீதியில் படங்கள் வரத் தொடங்கின.

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்

அதிலும், பிரகாஷ்ராஜ், சூர்யா, கார்த்திக், விஜய் என்று ஒரு பட்டாளமே, தொடர்ந்து இந்துவிரோத, தேசத்தையும், அதை ஆளும் நபர்களையும் குதர்க்கமாக்கும் வகையில், படங்கள் எடுக்கத் தொடங்கினர். இதில், பிரகாஷ் எல்லாம் வேற வெலலில் களம் இறங்கி, தூங்கி எழுந்ததும் மோடியை திட்டத் தொடங்கிவிடுவார்.

ஜாதி, மத மோதல்

இதில், வெற்றிமாறன், ரஞ்சித், நெல்சன், அட்லி, அமீர் என்ற வரிசையில் சினிமா இயக்குனர்கள் கூட்டம், எங்களை நசுக்கிவிட்டான், பிதுக்கிவிட்டான் என்று கூறி, ஜாதி, இன, மோதல்களை மையப்படுத்தி சினிமா எடுத்து, மக்கள் மத்தியில் ஒருவிதமான பதட்டத்தை ஏற்படுத்தி, அது குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். தேசிய அளவில் தாங்கள்தான், சிறந்த திரையுலகம் என்று மார்தட்டிக் கொள்வார்கள்.

மூக்கை உடைத்த ஆர்ஆர்ஆர், காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கேஜிஎப்

தமிழ் சினிமா தமிழகத்தைத் தாண்டி, ‘பான் இந்தியா’ என்ற அந்தஸ்த்தை தொட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யா, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளிகள் போல் சித்தரித்து, எடுத்த ஜெய்பீம் படம் ஆஸ்கார் விருதுக்கு சென்றதாக, பொய்களைப் பரப்பினர். ஆனால், ஆஸ்கார் விருது விழாவில் வில்ஸ்மித், நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு விட்ட அறை, ஏறக்குறைய ஜெய்பீம் என்ற ஆஸ்கார் பித்தலாட்டத்துக்கு கொடுத்தது என்று கூட கூறலாம். அதாவது, எல்லாவற்றிலும் சுய விளம்பரம். இப்படியெல்லாம், இன, மத உணர்வுகளை புண்படுத்தினால் மட்டுமே படம் ஓடும் என்ற நிலையை தமிழகத்தில் கட்டமைத்துள்ளனர்.

பல 100 கோடிகளை அள்ளிய
காஷ்மீர் ஃபைல்ஸ்

ஆனால், ஆந்திராவின் பிரபல சினிமா இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர், கன்னட திரையுலகின் கேஜிஎப் சேப்டர் 2, அத்துடன் காஷ்மீர் பண்டிட்களின் கண்ணீர் கதையைச் சொன்ன காஷ்மீர் பைல்ஸ் ஆகிய 3 திரைப்படங்களும் பான் இந்தியா சினிமாக்களாக பல நூறு கோடி ரூபாய் வசூல்களை அள்ளின. இதில், கேஜிப் சேப்டர், ஆர்ஆர்ஆர் படத்துடன் போட்டியிட்ட தமிழ் நடிகர் விஜயின் பீஸ்ட் படம் போட்டியிட்டது. ஆனால், முயல் வேகத்தில் ஓடி, ஆமை வேகத்தில் கவிழ்ந்தது. ஆனால் படத்தை எடுத்த சன் பிக்சர்ஸ், வெளியிட்ட ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய 2 நிறுவனங்களும் திமுகவின் மாமன், மச்சான் நிறுவனங்கள்
என்பதால், தியேட்டர் உரிமையாளர்கள் ஒருவித நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்ல கதை போதும்

ஒரு நல்ல சினிமாவுக்கு பிரதமரை திட்ட வேண்டாம், மதத்தை இழிவுபடுத்த வேண்டாம். நல்ல கதைக்களம், சிறந்த நடிகர் இருந்தால் போதும் என்பதை கேஜிஎப், ஆர்ஆர்எஸ், காஷ்மீர் பைல்ஸ் உணர்த்தின. ஆனால், தமிழ் சினிமா இன்னமும் எங்களை நசுக்கிட்டாங்க, ஒதுக்கீட்டாங்க என்ற பித்தலாட்டத்தை முன்வைத்தே இன்னும் பல ஆண்டுகளுக்கு உருண்டு கொண்டிருக்கும்.

நடிகர்கள் திடீரென புரட்சி பேசுவது ஏன்?

தமிழ் நடிகர்கள் பலர் ராக்கெட்டுக்கு பற்ற வைத்ததுபோல், பின்னால் எரியத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளாகத்தான். இது தொடர்பாக மூத்த வரி ஆலோசகர் ஒருவரிடம் கேட்டபோது அவர் சொன்ன ‘வரிக்கு வரி ரகசியம் இதுதான்…’’

கருப்பு பணம்

நம்ம தமிழ் சினிமா, கருப்புப் பணம் புழங்கும் மிகப் பெரிய ஏரியாக்களில் ஒன்றாகும். 2014க்கு முன்னர் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கும்போது, பிளாக் பஸ்டர் ஹீரோக்கள் கருப்பு / வெள்ளை என்ற ரீதியில்தான் சம்பளம் வாங்குவார்கள். காரணம், முழுமையாக வருமான வரி கட்டுவதற்கு சங்கடப்பட்டுத்தான். இப்படி தயாரிப்பாளர்களிடம் தாங்கள வாங்கும் வெள்ளைக்குத்தான் வருமான வரி கட்டுவார்கள்.

கருப்பு பணம்

கருப்புப் பணம் அப்படியே பிற துறைகளின் முதலீடாகவிடும். இந்த வகையில், மோடியின் நிர்வாகத்துக்கு முன்னர் இருந்த சினிமாத்துறை வேறு, இப்போதுள்ள சினிமாத்துறை வேறு. சாதாரண மக்களுக்கே ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் கொண்டு வந்து ஒழுங்கு படுத்திய மத்திய அரசு, நடிகர்கள் உட்பட கலைத்துறையினரை சும்மா விட்டு வைக்குமா? கொஞ்சம் இருக்கமாகத்தான் பிடித்துள்ளது.

வரி செலுத்துவதில் குளறுபடி

நடிகர்கள் வருமான வரி செலுத்துவதில் பல குளறுபடிகள் செய்கின்றனர் என்று தெரிந்தும், ஜிஎஸ்டியில் சேவை என்ற பிரிவில் 18 சதவீத வரியை நடிகர்களுக்கு கொண்டு வந்தது. இதில், நடிகர்கள் தொடங்கி இசை அமைப்பாளர்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும். இதுதவிர, நடிகர்களின் நேரடி சம்பளம் முழுவதும் கணக்கில் வரவேண்டும். கணக்கில் வரும்போது குறைந்தபட்சம் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்து கட்ட வேண்டும். இந்த வகையில் மொத்தமாக 28 சதவீதத்துக்கும் அதிகமான வருமானம், மத்திய அரசுக்குச் செல்கின்றது. யாரும் தப்பிக்கவே முடியாது.

டிமிக்கி கொடுத்த நாயகர்கள்

வருமான வரி என்ற ஒன்று மட்டும் இருக்கும்போது, டிமிக்கி கொடுத்த பல மாஸ் ஹீரோக்கள், இப்போது, இந்த வரிகளை கட்டிவிட்டு, அப்புறம் மற்ற வேலையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லா சினிமாத்துறைக்கும் இது பொருந்தும் என்பதே உண்மை. இந்த வகையில், தமிழ் சினிமாவின் கருப்புப் பண நடமாட்டத்துக்கும், சில நடிகர்களின் டிரஸ்ட் விஷயங்களிலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கொஞ்சம் ஆட்டம் காண்பித்ததால், இப்போது நடிகர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

அநாகரிகமான அவதூறும், ஒப்பீடும்.

சமீபத்தில், தமிழ் சினிமா உலகம் இன்னமும் ஒருபடி மேலே போய், யார் எல்லாம் பிரதமர் மோடியைப் பற்றி நல்ல விஷயங்கள் சொல்கிறார்களே, அவர்களையும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டது. தமிழ் சினிமா உலகத்தை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தன் இசையால் தாலாட்டிய, மேஸ்ட்ரோ இளையராஜா, ‘‘அம்பேத்கரின் கனவை, பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார். இன்று அம்பேத்கர் இருந்திருந்தால், பிரதமர் மோடியை பாராட்டியிருப்பார்’’என்று, பிரதமர் மோடியின் புத்தகத்துக்கு விமர்சனம் தெரிவித்து இருந்தார்.

எதிர்த்த இளையராஜா

உடனே இந்த திராவிட கும்பல்கள், இளையராஜாவாவது…. என்று தரக்குறைவான வார்த்தைகளால் டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் ஆபாச அர்ச்சனைகளைத் தொடங்கினர். ஆனால், தன் மீது வீசப்பட்ட விமர்சனங்களுக்கு இளையராஜா துளியும் அசைந்து கொடுக்கவில்லை. ‘‘நான் சொன்னக் கருத்தில் பின் வாங்கப்போவதும் இல்லை. என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்லப்போவதும் இல்லை’’ என்று அசால்டாக கடந்துவிட்டார்.

நெல்லை கண்ணனின்
கருத்துரிமை கருத்து

நெல்லை கண்ணன் முதல்வர் ஸ்டாலினை, காமராஜரோடு ஒப்பிட்டு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பேசியபோது வெளிப்படாத கருத்துரிமை, திமுக எம்பி கனிமொழியை, வீர மங்கை வேலுநாச்சியாரோடு ஒப்பீடு செய்து பேசும்போது வெளிப்படாத கருத்துரிமை எதிர்ப்பு, அம்பேத்கருடன், பிரதமர் மோடியை ஒப்பீடுசெய்து இளையராஜா பேசியபோது கொப்பளித்துக் கொண்டு வந்தது. இளையராஜா பதவியை எதிரபார்த்து இப்படி பேசுகிறார் என்று கொச்சைப்படுத்தினர்.

ஏ.ஆர். ரகுமானின் உருது பாசம்

ஆனால், இதே காலகட்டத்தில், மற்றொரு இசை அமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமான், தன் பங்குக்கு தமிழசை அசிங்கப்படுத்தும் வகையில், ‘தமிழணங்கு’ என்ற பெயரில், ஒரு அருவருக்கத்தக்க படத்தை பதிப்பிட்டு, தன் கருத்துரிமையை வெளிப்படுத்தினார். இத்தனைக்கும் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் தமிழன்னைக்கு அழகுற சிலை இருப்பது, ஏ.ஆர்.ரகுமானுக்குத் தெரியாது போல. காரணம், அவர் தீவிர உருது முஸ்லிம்.

தமிழணங்கு

மொழியின் பெயரால், தமிழன்னையை அசிங்கப்படுத்தும் வகையில், தமிழணங்கு உருவத்தை வெளியிட்ட, இதே ரகுமானுக்கு தான் சார்ந்த மதத்தின் இறைதூதர் என்று போற்றப்படும் முகமது நபி அவர்களின் படத்தை வெளியிடும் தைரியம் உள்ளதா? தமிழகத்தில் ஒரு காலைப் பத்திரிகை தவறுதலாக அந்தப்படத்தை பதிப்பித்தற்கு, பெரும் அளவில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டமும், பிரான்சின் சார்லிஹெப்டோ பத்திரிகை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, 20க்கும் அதிகமானோரைக் கொன்றதும் இந்த உலகம் அறிந்த விஷயம்.

காங்கிரஸ் சிதம்பரத்தின் கருத்து

ஆனால், தன் தவறை மறைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியாவுக்குள் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்துங்கள்’ என்ற வார்த்தையை மாற்றி, ‘தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று உல்டா அடித்தார். ஆனால், இதே இந்தியை ராஷ்ட்ர பாஷையாக மாற்ற வேண்டும் என்று, உள்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் சிதம்பரம் பேசியபோது, இவர்களுக்கு தமிழ் உணர்வு கொப்பளிக்கவில்லை. காரணம், அப்போது மத்தியில், திமுகவின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருந்தது.

தமிழ் சினிமாவை பிடித்துள்ள பேய்

ஏறக்குறைய தமிழ் சினிமாவை திராவிட மாயை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என்பதையே இது காண்பிக்கிறது. தான் சொல்வதே சட்டம், தான் சொல்வதே வேதவாக்கு என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பது சினிமாவை ஆட்டுவிக்கும் திமுக, படத் தயாரிப்பு கம்பெனிகளின் எண்ணம். அதனால்தான், பெருமைக்குரிய இளையராஜாவை பல்வேறு தரப்பில் கழுவி ஊற்றிய பின்னர், ‘‘இளையராஜா பற்றி யாரும் அவதூறு பேசக்கூடாது’’என்று நிழல் முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பண்ணையார் காலத்து கடை களம்

இந்திய சினிமாக்கள் அடுத்த 20 ஆண்டுக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இதே காலகட்டத்தில்தான், தமிழ் சினிமா 30 ஆண்டுகளுக்கு பிந்தைய பண்ணையார் காலத்துக்கு கதைகளை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, இன்னமும் தமிழர்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் நிதர்சன உண்மையும் கூட.