அந்தர் பல்டிகளும்…பொன்மொழிகளும்…

கலைஞர் கைக்கு திமுக தலைமை வந்த பிறகு சந்தித்த முதல் தேர்தலில் இருந்தே தொடங்குகிறேன்

1971

இந்திரா காங்கிரஸ் + இந்தியக் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு. எதிர் அணியில் ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம் இருந்த போது…

“இந்திராவின் விஞ்ஞான சோஷலிசத்தை வரவேற்கிறோம் – காமராஜரின் திருமலைப் பிள்ளை ரோடு பங்களா பாரீர், இவரா ஏழைப் பங்காளர்? இரண்டு கிழவர்கள் காமராஜரும், ராஜாஜியும் ‘இந்தியாவைக் காப்போம்; ஜனநாயகம் காப்போம்’ என்கிறார்கள். முதலில் இரண்டு கிழவர்களும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்!”

1977 தேர்தல்

எமர்ஜென்சியில் செமத்தியாக அடி வாங்கிய பிறகு “இந்திராகாந்தி சேலை கட்டிய ஹிட்லர் மீசை இல்லாத முசோலினி! பாசிசப் பாப்பாத்தி! சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் உயிர் குடித்த பூதகி; கங்கைக் கரையில் இருப்பவள் காவிரிக் கரைக்கு வருகிறாள் கழக அடலேறே அவளுக்குப் புரியவை நீ யார் என்று”

(பிறகு 1977 தேர்தலில் தோற்று இந்திரா காந்தி மதுரை + திருச்சி வந்தபோது கழகத் தோழர்கள் தாங்கள் யார் என்று ‘புரிய’ வைத்தார்கள்! கருப்புக் கொடி என்ற பெயரில் கல்வீச்சு! நெடுமாறன் மட்டும் இல்லை என்றால் அன்றே இந்திரா கதை மதுரையில் முடிந்திருக்கும்! இந்திரா காந்தி சிந்திய ரத்தம் குறித்து ‘ரத்தம் வடிந்ததாமே! அது வேறு ரத்தமாக இருக்கும்!’)

1980 தேர்தல்

அதே இந்திரா காந்தியுடன் கூட்டு! “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியைத் தருக!”

1984 தேர்தல்

இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தபின் வந்த தேர்தல். அப்போது MGR அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக திமுக பேசிய ‘நக்கல்’ டயலாக் :- “சாவுக்கு ஒரு வோட்டு நோவுக்கு ஒரு வோட்டு!”

1989 தேர்தல்

ராஜீவுக்கு எதிராக ஜனதா தளத்துடன் கூட்டணி
“போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் பாரீர்! ஐயகோ, நாட்டு மக்களே, ராஜீவ் காந்தி குடும்பம் கொள்ளையோ கொள்ளை!”

1998 தேர்தல்

முதல் முறையாக அதிமுக + பாஜக + பாமக + மதிமுக கூட்டணி! எதிர் அணியில் திமுக+ தமாகா + இந்தியக் கம்யூனிஸ்ட். அப்போது திமுக பிரசாரம்

“பாஜக ஒரு பரதேசிப் பண்டாரக் கட்சி! மதவெறி பிடித்த ஆக்டோபஸ்! இது பெரியார் மண்! இங்குக் காவிகள் காலூன்ற முடியாது! ஜெயலலிதா தனது பார்ப்பன புத்தியைக் காட்டிவிட்டார்!

அண்ணாவின் பெயரைக் கட்சிப் பெயரில் வைத்துக் கொண்டு இந்துத்வா கட்சியுடன் கூட்டா?”

1999 தேர்தல்

ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் அரசு ஒரே ஒரு வோட்டில் தோற்று அதனால் வந்த தேர்தல்! அதற்கு ஒரு மாதம் முன்பு வரை ‘பண்டாரக் கட்சி பரதேசிக் கட்சி ஆக்டோபஸ்’ ஆக இருந்த BJP உடன் திமுக கூட்டு!

“வாஜ்பாய் எனது 40 ஆண்டுக் கால நண்பர் கழகம் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது!”

2004 – 2009 தேர்தல்கள்

“மதவெறியை முறியடிக்கவே பரந்த அளவில் UPA கூட்டணியை உருவாக்கி ‘சொக்கத் தங்கம்’ சோனியா தலைமையில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளோம்!”

2014 தேர்தல்

‘சொக்கத் தங்கம்’ சோனியா தலைமையில் காங்கிரஸ் இலங்கையில் முள்ளிவாய்க்கால் சம்பவங்களை அரங்கேற்றி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் கொல்லப்பட்டு, ஈழப்போர் முடிந்ததும் 2009ல் நமது இந்தியத் தேர்தல்கள் முடிந்து ரிசல்ட் வரும் நேரத்தில்- நடந்த சம்பவங்கள்! பிறகும் அதன் பதவிக்காலம் முடியும் வரை (2009 – 2014) கிட்டத்தட்ட 2013 வரை காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது திமுக!

ஆனால் 2014 தேர்தல் நெருங்கியவுடன் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது!

“நாம் TESO அமைப்பின் மூலம் தனி ஈழம் கோரி அழுத்தம் கொடுத்தோம்! டில்லி அரசுக்குக் கடிதங்கள் எழுதினோம்! மனிதச் சங்கிலி நடத்தினோம்! ஐயகோ, கூடா நட்பு கேடாய் முடிந்தது! எனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்!” (அதில் திமுகவே பங்கேற்ற மத்திய அரசுக்கு-ஈழப் பிரச்னை தொடர்பாக-திமுக வே கடிதம் எழுதி அனுப்பியது ஒரு சோகக் காமெடி!)