திமுகவின் கார்ப்பரேட் தேர்தல்…

ஒட்டு மொத்த தமிழர்கள் மட்டுமல்ல, இந்திய தேசமும் எதிர்பார்த்த 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல்களில் வெற்றி வாகை சூடி, முதல்வர் பதவியேற்க உள்ள தமிழகத்தின் ஸ்டாலின், புதுச்சேரி ரங்கசாமி, மேற்கு வங்கத்தின் மம்தா பேனர்ஜி, கேரளாவின் பிணராயி விஜயன் மற்றும் அசாமின் சோனோவால் ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில், சுதேசி மகிழ்கிறது.

தேர்தல் வியூகம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ஒரு மாபெரும் டுவிஸ்ட் எனலாம். 2019 லோக்சபா தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்ற திமுக, காங்கிரஸ், காம்யூனிஸ்ட்கள், விசி மற்றும் அதன் 11 கட்சி கூட்டணி அப்படியே சட்டசபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது. ஆனால், இதற்கான தேர்தல் வியூகம் 2019 லோக்சபா தேர்தல் முடிந்ததும், தொடங்கப்பட்டது.

கட்டமைப்பு

இன்னும், சொல்லப்போனால், அதிமுக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், முதல்வர் பதவிக்கு பழனிசாமி வந்த நாளில் இருந்தே இதற்கான கட்டமைப்பை திமுக மிகச் சிறப்பாக கட்டமைப்பு செய்தது. இதன் முதல் அறுவடை லோக்சபா தேர்தல், 2ம் அறுவடை சட்டசபைத் தேர்தல்.

தமிழ் இன துரோகி…

அறுவடைக்கு திமுக விதைத்தது மோடி கெட்டவர், நீட், ஜிஎஸ்டி, அடிமை அரசு என்ற விதைகளைத்தான். இந்த விதைகளில் விளைந்ததைத்தான் திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது.

மாறியது திமுகவின் வியூகம்…

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரால் 60 ஆண்டுகாலமாக முன்னெடுக்கப்பட்ட திராவிட அரசியல், 2019 மற்றும் 2021 தேர்தலில், கார்ப்பரேட் அரசியலாக மாறிவிட்டது.

ஐபேக் நிறுவனம்

இந்தியன் பொலிடிகள் ஆக்ஷன் கமிட்டி எனப்படும் ஐபேக் நிறுவனத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் நேரடி கண்காணிப்பில்தான், இந்த சட்டசபைத் தேர்தலை திமுக எதிர் கொண்டது.

தேர்தலையே கார்பரேட் ஆக்கியுள்ளது திமுக…

மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்கிறது என்று முழங்கிய திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், இந்த சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டதே ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாகத்தின் கீழ்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும்? தேர்தல் மேடையில் எப்படி பேச வேண்டும்? ஒவ்வொரு ஊருக்குமான பிரச்சார லிஸ்ட் என்று ஸ்டாலினின் நடை, உடை பாவனையை அழகு படுத்தியது இந்த கார்ப்பரேட் அரசியல்தான்.

கார்ப்பரேட் அரசியலை நம்பலாமா?

பொதுவாக டிவி விளம்பரங்களில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும் பிரபல பிராண்டுகள், விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கும்போதே டிவி திரையில் மெல்லிய எழுத்துக்களை ஓடவிடுவது இப்போதை நடைமுறை.

காரணம் சட்ட சிக்கல்களை தவிர்க்கத்தான். உதாரணமாக ஊட்ட பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களின்போது, ‘‘இது தனி உணவு அல்ல. இணை உணவுதான். மற்ற உணவுகளுடன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறி, தங்கள் பொறுப்புகளைத் துறந்திருக்கும். ஆனால், விளம்பரம் என்னவோ, அந்த ஊட்ட உணவுதான் நம் உடல் வளர்ச்சிக்கே
பிரதானம் என்பதுபோல் இருக்கும். ஆனால், அதன் பொறுப்புத் துறப்பை யாரும் கவனிப்பார் இல்லை.
ஏறக்குறைய அப்படியோரு விளம்பரத் திணிப்பாகத்தான், திமுக தலைவர் ஸ்டாலினை, முதல்வர் வேட்பாளராக ஐ – பேக் திணித்தது. ஆனால், அது பொறுப்புத்துறப்பு எதையும் அறிவிக்கவில்லை. காரணம் இது தன் நேரடி பிராண்ட் திணிப்பாக ஸ்டாலினை முன் நிறுத்தியது.

ஸ்டாலினை பற்றி நாங்கள் உறுதி தரவில்லை..

மறைமுகமாக சொன்ன விஷயம், ‘‘திமுக, ஸ்டாலின் யார் என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இயக்குகிறோம். இதனால், ஏற்படும் ஆட்சி விளைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர். தமிழக ஆட்சியில் எது நடந்தாலும், நீங்கள் ஐ பேக்கை கேட்க முடியாது. பெரும்பாலும் கார்ப்பரேட்கள் வியாபாரம் செய்வார்கள் என்ற நிலையை மாற்றி, இப்போது பணம் / லாபம் கிடைத்தால் பெரும் அளவில் அரசியலும் செய்வார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலுக்கு நல்ல போக்கை ஏற்படுத்தாது.

ஸ்டாலின் – பழனிசாமி ஒப்பீடு

திமுகவை பொறுத்தவரை 2009ல் ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு வந்தது முதல், அவரது தலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டது. அதாவது, கருணாநிதிக்கு பின்னர் எல்லாமே அவர்தான் என்ற நிலையை அப்போதே புரிய வைத்தனர். தன் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களை எல்லாம் ஸ்டாலின் மெல்லவே ஓரம்கட்டினார்.

2016 தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியால் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாதபோது, ஸ்டாலின்தான் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அவரது நமக்கு நாமே என்பதன் பலனை, பிரசாந்த் கிஷோர் இப்போதுதான் அறுவடை செய்து கொடுத்துள்ளார். அதாவது, 2016 சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் மேற் கொண்ட அரசியல் வியாபாரம் நஷ்டமான நிலையில், அந்த வியாபாரத்தை கார்ப்பரேட் சித்தாந்த அடிப்படையில் லாபகரமானதாக, அதன் பலனாக முதல்வர் பதவியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஸ்டாலினுடன் ஒப்பிடும்போது, எதிர்கட்சி தலைவராகவுள்ள பழனிசாமியும் மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்தான். யாரும் மறுக்கவே முடியாது. ஆனால், அவர் முதல்வர் ஆனது எதேச்சையாகத்தான்! எல்லோரும் அதைத்தான் சுட்டிக் காண்பித்தனர்.

ஆனால், அவர் தான் முதல்வராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் திறம்படச் செயல்பட்டார் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. இந்த 4 ஆண்டுகளில் அவரது கடின உழைப்புதான், ஐபேக் நிறுவனத்தின் கருத்து கணிப்பான திமுக 205 இடங்களில் வெற்றிபெறும் என்ற நிலையை உடைத்து, அதிமுகவுக்கு 65 எம்எல்ஏக்களை பெற்றுத் தந்து, கட்சியை காப்பாற்ற உதவியது எனலாம். ஆட்சியை கவிழ்ப்பேன் என்று 4 ஆண்டுகளாக கதை சொன்ன பூச்சாண்டியை சரிகட்டி, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, கரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி என்று நிறையவே உழைத்துள்ளார். இந்த உழைப்பின் மிச்சம்தான் அவரது இப்போது எதிர்கட்சித் தலைவர் பதவி பாராட்டுகள்.

ஏமாற்றிய அரசு ஊழியர்கள்?

தமிழகத்தைச் சுற்றிலும் உள்ள மற்ற மாநிலங்களில் கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் கரோனா ஏற்பட்ட போது, எல்லா மாநிலங்களும் சம்பள வெட்டை அறிவித்தன. ஆனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இப்போது வரை சம்பள வெட்டு இல்லாமல் முழு அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஆசிரியர்கள் பாடு கெண்டாட்டம்தான். ‘‘நாங்கள் பள்ளிக்கு வந்து பணி செய்கிறோம்’’ என்று ஒரு தரப்பினர் கூறினாலும், 70 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், இருந்தனர். அரசு ஊழியர்களிலும், சுழற்சி அடிப்படையில் பணிக்கு வந்தவர்கள் அதிகம்.

ஏமாந்த முதல்வர் எடப்பாடி

பழனிசாமி எதிர்பார்த்தது ஒன்றுதான். ‘‘நாம் அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு செய்கிறோம். தேர்தல் நேரத்தில் நிச்சயம் நம்மை அவர்கள் காப்பாற்றுவார்கள்’’ என்ற எதிர்பார்ப்பை அவர் ரொம்பவே முன் வைத்தார். ஆனால், அரசு ஊழியர்கள் எப்போதும் திமுக விசுவாசிகள். அவர்களது தபால் ஒட்டுகள் அனைத்தும் திமுகவுக்கு செல்லும். தபால் ஒட்டுகள் மட்டுமல்ல, குடும்ப ஓட்டுகளும் அப்படியேதான். இதில், எந்த ஒரு நிலைப்பாடும் மாறாது. அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை திமுக ஒரு பணம் காய்ச்சிமரம். அந்த மரத்தைப் பாதுகாக்கவே அவர்கள் முயல்வார்கள். இதனால், பழனிசாமியை அவர்கள் தோற்கடித்தனர் என்பதே உண்மை.

இனி காத்திருக்கு சவால்கள்

தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருக்கும்போது, திமுக, அதிமுக கட்சிகள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அதிகம். இவற்றை நிறைவேற்றுவதற்கு குறைந்தது ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை, அடுத்த 5 ஆண்டுகளில் கடனாக வாங்க வேண்டியிருக்கும். 2006 -11 ஆட்சியில் மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்தால், 2026 தேர்தலில் பதில் சொல்வார்கள். ஆனால், அதுவரை வாங்கியது வாங்கியதுதான்.

ஸ்டாலின் வாக்கு மூலம்…

தங்கள் கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் கூறியதை இங்கு நினைவுபடுத்திக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
குறிப்பாக நீட் தேர்வு, இந்த ஒரு விஷயத்தை வைத்தே திமுகவின் 4 ஆண்டு கால அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வை நீக்க முடியாது என்று ப.சிதம்பரம் மனைவி வக்கீல் நளினி சிதம்பரம் திட்டவட்டமாக கூறிய பின்னரும், அதைக் கொண்டு அரசியல் செய்யும் திமுகவுக்கு, இனி காத்திருக்கு நெருக்கடி. சொன்னபடி நீட் தேர்வை நீக்க முடியாவிட்டால், இதற்காக திமுக மக்களிடம் தர்ம சங்கடமான சூழலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

வரிகளையும் குறைக்க முடியாது..

ஜிஎஸ்டி வரி, பெட்ரோல் வரி என்று எதிலும் கை வைக்க முடியாது. அப்படி வைத்தால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்க வேண்டியிருக்கும். டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னால், ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அவுட். எனவே, எப்படிப் பார்த்தாலும், திமுக பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும், முள்மேல் நடப்பது போன்ற ஒரு தர்ம சங்கடத்துடன்தான் இருக்கும்.

சிக்கும் திமுக

அதிமுகவை அடிமை அரசு என்று விமர்சனம் செய்த திமுக, காங்கிரஸ் கட்சியினர், தங்கள் சுயமரியாதையைக் காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு, மத்திய அரசுடன் மோதவே முடியாது. சில விஷயங்களில் பணிந்துதான் சென்றாக வேண்டும். இனி வரும் நாட்கள் திமுகவுக்கு கடினம். காரணம், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இப்போதுள்ள நடைமுறையை அப்படியே முன்னெடுத்துச் செல்வது ஒன்றே, நடைமுறைக்கு சாத்தியமானதாகும். இல்லாவிட்டால், பதவியேற்ற 100 நாட்களுக்குள் துண்டு சீட்டு பிரச்சனைகளை தீர்ப்பதாக சொன்ன முதல்வர் ஸ்டாலினுக்கு, நூறு நாட்களில் கரோனாவை கட்டுப்படுத்துவதே பெரும் சவாலாகிவிடும்.

ஏற்கெனவே ஸ்டாலின் துண்டு விரித்து விட்டார் மத்திய அரசுடன் இணக்கமாகவே நாங்கள் செயல்படுவோம். டெல்லி சென்று பிரதமரை பார்க்க நேரம் கேட்டு உள்ளார்.

கலைஞர் திருந்தி, மக்களுக்கு ஒரளவு ஆபத்தில்லா ஆட்சியை கொடுக்க நினைத்த போது அவரது குடும்பத்தினர் திக்கெட்டும் பறந்து நில அபகரிப்பு, சினிமா ஆக்ரமிப்பு, கமிஷன், கட்ட பஞ்சாயத்து, அரசாங்க அப்ரூவல் என்றே புகுந்து கலக்கினர். ஸ்டாலினுக்கு கொஞ்சம் ஞாபகம் படுத்தவே…