இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன்ஜீ அவர்களின் வேலூர் போராட்டம்…

அப்போது வேலூர், திருவண்ணாமலை இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே மாவட்டமாக, வட ஆற்காடு மாவட்டம் என்ற பெயரில் இருந்தது. வேலூரில் ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று சில இளைஞர்களுடன் நடந்த கூட்டத்தில்
திரு. இராம.கோபாலன் கேட்டார்.

ஜல கண்டேஸ்வரர் பிரதிஷ்டை…

Stitched Panorama

என்ன சார் ? எங்க ஊரில் சாமியே இல்லாத கோயில் இருக்கு சார். இதை விட வேறென்ன அவமானம் வேண்டும் . இந்தப் பிரச்சினையை முதலில் உங்களால் தீர்க்க முடியுமா ? முடியும் என்றால் சொல்லுங்க சார் . நாங்கள் அதுக்காக எதையும் செய்வோம் என்றனர்.
இதை உங்களுடன் சேர்ந்து பொது மக்களை யெல்லாம் ஒன்றுதிரட்டி ஹிந்து எழுச்சியை உருவாக்கி அதன்மூலம் சாமியை வைக்க முடியும் என்று உறுதியளித்தார்.

சரித்திரமான நிகழ்வு…

வேலூரின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது அந்த நிகழ்வு. வேலூர் கோட்டை கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக 300 க்கும் மேற்பட்ட தெரு முனைப் பிரச்சாரங்களும் 100 க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களும் தொடர்ந்து 4 மாதங்கள் நடைபெற்றன.
கந்திலி , திருப்பத்தூர் , நாட்றம்பள்ளி முதல் ஆரம்பித்து வந்தவாசி , செய்யார் , தெள்ளாறு , செங்கம் என்று வேலூர் , திருவண்ணாமலை மாவட்டங்கள் முழுவதும் இந்த பிரச்சார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன .

தொல் பொருள் துறையின் அத்து மீறல்…

இறுதியாக வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் “ கோட்டையும் , ஜலகண்டேஸ்வரர் ஆலயமும் இந்துக்களுக்குச் சொந்தமானது , இதில் பராமரிப்பு என்ற பெயரில் மத்திய அரசின் தொல்பொருள் துறை ஆலயத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை நாங்கள் கண்டிக்கிறோம் . வழிபாடு செய்ய ஆலயத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் . நாட்டிலேயே வேலூர் கோட்டையில் மட்டும் தான் சாமியில்லாத கோயில் இருக்கிறது . இந்த நிலையைப் போக்க வேண்டும் .

ஜல கண்டேஸ்வரர் கோயில்…

600 ஆண்டுகட்கு முன்பு இந்து மன்னர்களான திம்ம ரெட்டி , பொம்மி ரெட்டி என்னும் சிற்றரசர்கள் ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டினார்கள் . அந்தக் கோயிலுக்கு சேவை செய்பவர் களுக்காக சில வீடுகளும், அரசுப் பணியாளர்கள் தங்குவதற்கு சில வீடுகளும் ஆலயத்திற்குப் பின்புறம் கட்டப்பட்டது.

திப்பு சுல்தானின் நாச வேலை…

திப்பு சுல்தானின் படையெடுப்புக் காலத்தில் வேலூர் கோட்டையும் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் முஸ்லிம்கள் வசம் வந்தன . கோயில் சூறையாடப்பட்டது . சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டன . கருவறையில் இருந்த லிங்கம் பெயர்த்தெடுக்கப்பட்டு பாலாற்றில் வீசி எறியப்பட்டது.

சிறிய கோவில் ஜல கண்டேஸ்வரர்…

சத்துவாச்சாரியைச் சேர்ந்த துணிவுமிக்க பக்தர்கள் சிலர் சிவலிங்கத்தைக் கண்டெடுத்து , தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்று , சிறிய கோயிலைக் கட்டி பக்தியுடன் வழிபாடு செய்து வந்தனர் . அதன் பின்பு வந்த வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்திலும் அதே நிலை நீடித்தது .கோட்டை… படைவீரர்களின் கொத்தளமாகவும், ஆலயம்…குதிரை லாயமாகவும், வெடிமருந்து கிடங்காகவும் , பயன்படுத்தப்பட்டன . நாடு சுதந்திரம் பெற்ற பின்பு கோட்டைக் கோயிலை மீட்க வேலூர் நகரத்தைச் சேர்ந்த பெரியோர்களால் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டது . இப்போது இந்து முன்னணி அறிவித்துள்ள போராட்டம் அத்தகைய பெரும் முயற்சிகளின் தொடர்ச்சியே ஆகும்.

பிரதிஷ்டை நடந்தேறும்…

நாங்கள் இப்போது முடிவாக சொல்லுகின்றோம் . கோட்டை கோயிலில் சாமியை பிரதிஷ்டை செய்ய அரசும் , தொல்பொருள் இலாக்காவும் அனுமதிக்க வேண்டும் . அப்படி அனுமதிக்காவிட்டால் , எத்தகைய எதிர்ப்புகளையும் தடைகளையும் மீறி கோயிலில் சாமியை வைத்தே தீருவோம் “ என்று ஆணித்தரமாகவும் , உறுதியாகவும் இராம . கோபாலன் அவர்கள் பேசினார்கள் . கோட்டை கோயிலை மீண்டும் வழிபாட்டிற்குக் கொண்டுவர செய்த முயற்சிகளில் , திருமுருக . கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த முயற்சி வேலூர் வரலாற்றில் என்றும் நினைவுகூரத் தக்கது.

வாரியாரின் முயற்சி…

வேலூர் பொதுமக்கள் அப்போது ஒரு லட்ச ரூபாயை நிதியாகத் திரட்டி வாரியார் சுவாமிகளிடம் ஒப்படைத்தனர் . வாரியார் அவர்கள் டெல்லி சென்று பல நாட்கள் தங்கியிருந்து , அப்போதைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களையும் , மத்திய கல்வி மற்றும் தொல்பொருள் இலாகா அமைச்சரையும்
சந்தித்து மத்திய அரசின் அனுமதியைப் பெற தீவிர முயற்சி செய்தார். ஆனால் மத்திய அரசோ வாரியாரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வில்லை . வாரியார் சுவாமிகள் வருத்தமுடன் ஊர் திரும்பினார்.

வாரியார் மண்டபம்…

மக்கள் கொடுத்த பணம் ஒரு லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அந்தப் பணத்தைக் கொண்டுதான் வேலூர் டோல்கேட் அருகில் இருக்கும் வாரியார் மண்டபம் கட்டப்பட்டது. 1981 ஜனவரி மாதம் கோட்டை மைதானத்தில் இராம. கோபாலன் பேசிய கருத்துக்கள் காவல்துறை மூலம் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் கங்கப்பா அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர் இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு, “ யார் இந்த இராம.கோபாலன், வீரபாகு, அவர்களை அழைத்து வாருங்கள் “ என்றார்.

சாமியை வைத்து விட முடியுமா??

சாமியை நீங்கள் வைத்துவிட முடியுமா ? “ என்று ஆட்சியர் கேள்வி எழுப்பினார் . வீரபாகு உறுதியுடன் “ மக்கள் ஆதரவுடன் வைத்துவிடுவோம் “ என்றார். பின்பு 1981 பிப்ரவரி மாதத்தில் இராம . கோபாலன், மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நடந்தது. வேலூர் கோட்டையில் சாமி பிரதிஷ்டை செய்வது பற்றி மாவட்ட ஆட்சியருடன் இராம. கோபாலன் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டார்.

1981 மார்ச் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வீரபாகு அவர்கள் ஆட்சியரை சந்தித்தார் . தெருவில் தூக்கும் மண்டித் மூட்டைத் தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோரை வீரபாகு சந்தித்துப் பேசி அவர்களை தயார் நிலையில் வைத்திருந்தார் . ஆனால் ஜலகண்டேஸ்வரர் ஆலயமோ சமூக விரோதிகள் கூடாரமாகத் திகழ்ந்தது . அங்கே அனைத்து அயோக்கியத்தனங்களும் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தன.

ஆஞ்சநேயருக்கு பூஜை…

மயிலை குருஜி சுந்தர்ராம் சுவாமிகள் கோட்டைக்குள் ரகசியமாகச் சென்று, ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தூணில் இருந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்தார் . லிங்க பிரதிஷ்டை காரியம் வெற்றிகரமாக நடைபெற பிரார்த்தனை செய்து கொண்டார் . ரகசிய திட்டங்களின்படி மார்ச் 13 ந் தேதி இரவு ஆலய பிரகாரத் திற்குள் மண்டிக்கிடந்த குப்பைகள் , கழிவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன . 15.3.1981 ஞாயிறு இரவு 12.00 மணி அளவில் சத்துவாச்சாரியில் சுவாமி கிருபானந்த வாரியாரின் பக்தர்களான திரு . கே.எஸ் . மணி முதலியார் , ஏ.எஸ்.ஏ பேக்கரி உரிமையாளர் பரமசிவம் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த வெல்லமண்டி புலாபாய் தேசாய் , ராதாகிருஷ்ண நாயுடு , வேலூர் விபாக் பிரச்சாரக் திரு . ம . வீரபாகு ஆகியோரின் தலைமையில் சுமார் 50 ஹிந்து இளைஞர்கள் திரண்டனர்.

சத்துவாச்சாரி மக்களின் பெருந்தன்மை…

400 ஆண்டுக் காலமாக சத்துவாச்சாரியில் ஊர் மக்களால் பூஜிக்கப்பட்டு வந்த சிவலிங்கத்தை அப்புறப்படுத்த அவ்வூர் மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை . பிறகு திரு . மணி முதலியார் மற்றும் அன்றைய ஆர்.எஸ்.எஸ் நகர் சங்கசாலக்காக இருந்த திரு. ஏழை .அ .முனுசாமி அவர்களும் ஊர்மக்களைச் சந்தித்து சமாதானப்படுத்தினர். “ கோட்டையில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்படுவது ஹிந்து வரலாற்றில் சாதாரணமான நிகழ்வு அல்ல. பாரத நாட்டிற்கே இதன் மூலம் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பிறக்கும் . வேலூரின் ஹிந்து வரலாற்றில் அழிக்க இயலாத தீரமிகு சம்பவமாக இது அமையப்போகிறது. அந்த பொன் வரலாற்றில் சத்துவாச்சாரியின் பெயரும் இடம் பெறும் “ என்றெல்லாம் எடுத்துக்கூறி , ஊர் பெரியவர்களின் முழு ஒத்துழைப்பை பெற்றார்கள் .

தலையில் தேங்காய் உடைத்து பிரார்த்தனை…

மயிலை குருஜியின் தலைமையில் லிங்கத்தை பெயர்த்தெடுத்தார்கள் . ஆனால் லிங்கத்தை அவ்வளவு சுலபத்தில் பெயர்த்தெடுக்க முடியவில்லை . மயிலை குருஜி சுவாமிகளோ மனமுருகி பிரார்த்தனை செய்து தன் தலையில் தேங்காய் உடைத்தார்கள் . அதன் பின்பு சில நிமிடங்களில் லிங்கம் , பீடம் , ஆவுடையார் என மூன்றாகப் பிரித்து எடுக்கப்பட்டது . லாரியில் ஏற்றி வேலூர் கோட்டைக்கு எடுத்துச் செல்லும் போது விடியற்காலை மணி 4.00 ஆகிவிட்டது . விடிந்தால் திங்கட்கிழமை . காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரை ராகு காலம் . அதன் பின்புதான் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியும் . தொல்பொருள் இலாகாவும் , காவல் துறையும் தடுத்து நிறுத்தினால் , அதையும் மீறி லிங்கத்தை கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமானால், வெறும் 50 நபர்களால் மட்டும் முடியாது. இதை முன்கூட்டியே உணர்ந்திருந்த திரு.ம. வீரபாகு அவர்கள் ஞாயிறு இரவு 1 மணியளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸிஷிஷி பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காதோடு காது வைத்தாற்போன்று வீட்டின் கதவைத் தட்டி ரகசிய செய்தி அனுப்பினார்.

உயிர் கொடுத்தேனும்…

அச்செய்தியின்படி திங்கட்கிழமை விடியற்காலை 5.30 மணி அளவில் வேலூர் கோட்டைக்குள் யாரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாத இடத்தில் அனைவரும் ஒன்றுகூடச் செய்தார் . இறை வழிபாட்டிற்கு பிறகு தொண்டர்களுக்கு கடந்த சில தினங்களாக நடைபெற்ற சம்பவங்கள் , ரகசியத் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டன. அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது . அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டன . அன்றைய தினம் தொழில் மற்றும் பணிக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி ஊழியர்களுக்கு கட்டளை இடப்பட்டது . வீட்டுக்கு திரும்பிச் சென்று, தனிப்பட்ட ஒவ்வொருவரும் 10 முதல் 20 நபர்களை ரகசியமாக திரட்டிக்கொண்டு கோட்டைக் கோயில் வாசலில் சரியாக 9 மணிக்கு அணிதிரள வேண்டும் . காவல் துறை , தொல்பொருள் இலாகா எதிர்ப்புகளை மீறி லிங்கத்தை எதிர்ப்புகளை மீறி உயிர்கொடுத்தேனும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று திரு .ம. வீரபாகு அவர்கள் ஆவேசமாகப் பேசினார்.

உற்சாகம்…

ஸ்வயம் சேவகர்கள் தன் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறாக கருதி, மிகுந்த உற்சாகத்துடன் கலைந்து சென்றனர். திட்டமிட்டபடி காலை 9 மணி சுமாருக்கு 3,000 த்திற்கு மேற்பட்ட ஹிந்து பக்தர்கள் ஒன்று கூடிவிட்டனர் . ‘ ஹரஹர மகாதேவ ‘ என்ற கோஷத்துடன் பக்தர்கள் லாரியில் வைக்கப்பட்டிருந்த லிங்கத்தை கருவறைக்குள் எடுத்துச் சென்றனர்.

பிரதிஷ்டை…

மயிலை குருஜி சுந்தர்ராம் சுவாமிகள் அவர்களால் பிரதிஷ்டைக்கான பூஜைகளும் சடங்குகளும் செய்யப்பட்டன. ( மண்டித்தெருவைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் ஞாயிறு இரவு ரகசியமாக கோட்டைக்குள் நுழைந்து, கோயிலின் பிரதான வாயில், உட்புற கதவுகள் மற்றும் கருவறைக் கதவுகளின் பூட்டுக்களை உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தக் காரணத்தினால், லிங்கத்தை கருவறைக்குள் எளிதில் கொண்டு செல்ல முடிந்தது ) பிரதிஷ்டைக்கான வேலைகள் கருவறையில் நடந்துகொண்டு இருக்கும்போதே, கோயில் வளாகத்தில், ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது . வால்போஸ்டர்கள், ஆட்டோ மூலம் பிரச்சாரம், கோயிலில் குடிதண்ணீர் ஏற்பாடு மற்றும் தரிசனத்திற்காக வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் வேலைகள் திட்டமிடப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஏற்றுக்கொண்ட வேலைகளை கனகச்சிதமாக நிறைவேற்றினர்.

வழிபாடு செய்ய வாரீர்…

வால்போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு அனைத்துப் பேருந்துகளிலும் ஒட்டப் பட்டன. வேலூர் நகரில் ஆட்டோக்கள் மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் லிங்கம் பிரதிஷ்டையான செய்தி ஒலிபரப்பாகியது. திருப்பத்தூர் முதல் வந்தவாசி வரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிக்கும் வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டார்.வழிபாடு செய்ய வாரீர் என்ற செய்தி பரப்பப்பட்டது. செய்தி தெரிந்தவுடன் விடிய விடிய பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்ய குவிந்த வண்ணம் இருந்தனர்.

புகார்…

காலை 11.00 மணியளவில் வழக்கம்போல கோட்டை துறை அலுவலகத்திற்கு வந்த தொல்பொருள் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்கள். அதன்பின்பு எஸ்.பி.யை நேரில் சந்தித்தும் புகார் கொடுத்தார்கள். தொல்பொருள் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் ஹிந்துக்கள் சாமியை வைக்கிறார்கள். அதை மீட்டுக் கொடுங்கள் ‘ என்று புகார் கொடுத்தார்கள். முதல் நாளே திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த மாவட்ட ஆட்சியர் கங்கப்பா அவர்கள் காலை 9.00 மணியளவில் வேலூர் வந்து சேர்ந்தார்.

முதல்வர் எம்.ஜீ.ஆரின் அனுமதி..

கேம்ப் ஆபிஸில் இருந்தபடியே சம்பவத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். தொல்பொருள் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்த முயற்சித்தபோது , மாவட்ட ஆட்சியர் தடுத்து

நிறுத்தினார் . “ பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமி விட்டனர். இப்போது தடியடி செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை உருவாகும் “ என்றார். அதனால் காவல்துறையால் ஏதும் செய்ய முடியாமல் போனது. வேலூரில் நடைபெறும் ஹிந்துக்களின் எழுச்சிப் பற்றியும் கோட்டை கோயிலில் லிங்கம் பிரதிஷ்டை ஆவது பற்றியும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் . அவர்களுக்கு காவல்துறை மூலம் செய்தி அனுப்பப்பட்டது. தகவல் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தார். லிங்கம் பிரதிஷ்டைசெய்யப்படுவதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லிங்கம் பிரதிஷ்டை முழுமையாக நிறைவேற மாலை 3.00 மணிக்குமேல் ஆகியது . பின்னாட்களில், மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழ் மாநாட்டின் போது, எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட அருள்மிகு சோமசுந்தர பெருமான் நினைவுப் பரிசை வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார். அதை இன்றும் கோட்டை கோயில் வளாகத்தில் காணலாம்.

வெற்றி விழா…

ஏப்ரல் 5 ஆம் தேதி, வேலூர் கோட்டை மைதானத்தில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
அதில் திரு. தாணுலிங்க நாடார், திரு. இராம. கோபாலன், அரக்கோணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி ஹரிஜன பிரிவு தலைவர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்று எம்.ஜி.ஆரின் அமைச்சர் அவையில் இடம் பெற்றிருந்த திரு. விஸ்வநாதன் (அ.தி.மு.க ) அவர்கள், எம்.ஜி.ஆரின் அனுமதியின் பேரில் , வெற்றிவிழா கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார்.

இந்து முன்னணியின் அளப்பரிய சேவை…

அன்று கோட்டை மைதானம் விழாக் கோலம் பூண்டிருந்தது . மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஜலகண்டேஸ்வரர் ஆலய நிர்வாகத்தை வேலூர் நகர ஸ்வயம் சேவகர்களே நடத்தி வந்தனர் . அதன் பிறகு முறைப்படி நிர்வாகம் ஊர் பெரியவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. கோயில் நிர்வாகக் கமிட்டி அமைக்கப்பட்டு, அதில் வேலூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு. ஏழை . அ . முனுசாமி அவர்கள் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். அன்று முதல் இந்நாள் வரை திரு , ஏழை. அ. முனுசாமி அவர்கள் கோயில் நிர்வாகக் கமிட்டியில் அங்கம் வகித்து கோயிலின் வளர்ச்சிக்கு தொண்டு புரிந்து வருகிறார். இந்தப் புண்ணிய காரியத்திற்கு மூல காரணமாக இருந்து ஹிந்து சமுதாயத்திற்கு நம்பிக்கை கொடுத்தது இந்துமுன்னணி.