இணையவழிதிருட்டால் ரூ.23.5 லட்சம் கோடிஇழப்பு!

தலைப்பைப் பார்த்ததும் எந்தத் துறைக்கு, எப்படி இழப்பு என்ற குழப்பம் ஏற்படலாம். காரணம், இந்தத் தொகையின் பிரமாண்டம்தான். ஏறக்குறைய நம் இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டின் 80 முதல் 85 சதவீத நிதி, இதுதான் என்றால், பீதி ஏற்படத்தான் செய்யும். ஒவ்வொரு ஆண்டும் இந்தளவுக்கு பெரும் நிதி இழப்பும், நஷ்டமும் ஏற்பட்டக் கொண்டிருந்தால்? அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில்?

இணைய வழித் தாக்குதல்கள்

இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில், நாம் அதிகமாக பயன்படுத்தும் இணையம் வழியாகத்தான், ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரமாண்டமான நிதி இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆய்வுகள். இதுகுறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த காம்பாரிடெக் நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள், ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணைய வழித் தாக்குதல்களில் இருந்து, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கும்.

காம்பாரிடெக் ஆய்வு சொல்வது இதுதான்…

 • உலகில் ஒவ்வொரு ஆண்டும் 318 பில்லியன் டாலர் அல்லது 23 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இணைய வழித் தாக்குதல்களால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
 • மிக அதிகபட்சமாக ஐக்கிய அரபு எமிரேட் ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, இணைய வழித் தாக்குதல்களால் இழப்புகளை சந்திக்கிறது.
 • அமெரிக்கா இப்போது வரை இந்த இணைய வழித் தாக்குதல்களால் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 28 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
 • பிரேசில் வணிக உலகில் அதிகம் அறியப்படாத நாடாக இருந்தாலும், இணைய வழித் தாக்குதல் நடத்தும் நபர்கள் அதிகம் விரும்பும் நாடாக உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.
 • தொழில்நுட்ப உலகில் கோலோச்சும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.
 • சைபர் பாதுகாப்பு பிரிவில் முன்னணியில் உள்ளதாக கூறிக் கொள்ளும் ரஷ்யாவும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை, இணைய வழித் தாக்குதலுக்கு பறி கொடுத்துள்ளது.
 • ஒவ்வொரு ஆண்டும் 7 கோடியே 11 லட்சம் பேர் இந்த இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
 • லட்சம் பேருக்கு 900 பேர் வீதம் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 • ஒவ்வொரு நபர் அல்லது ஒவ்வொரு இணையவழித் தாக்குதல் நடக்கும்போதும் 33 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
 • இந்த ஆய்வுகள் 67 நாடுகளில் இருந்து பெறப்பட்ட இணையவழித் தாக்குதல் தொடர்பான தரவுகளில் இருந்து தொகுக்கப்பட்டது.
 • இந்தத் தரவுகளும் 2018-19 அல்லது 2019-20 ஆண்டுகளில் நிகழ்ந்த இணையத் தாக்குதல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
 • பல நாடுகளின் அரசாங்கங்கள், இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுக்காத நிலையில், பல சைபர் கிரைம் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை.
 • குட்டி நாடான இலங்கையில் இணையத் தாக்குதல் குற்றங்கள் 350 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
 • பெலாரஸ் நாட்டில் 176 சதவீதமும், இந்தோனேஷியாவில் 140 சதவீதமும், போர்ட்ரிகோவில் 125 சதவீதம், பனாமாவில் நூறு சதவீதம் அளவுக்கு இணையத் தாக்குதல்கள் வளர்ந்துள்ளன.
 • குரோஷியாவில் 59 சதவீதம், பாராகுவேயில் 58 சதவீதம், குவைத்தில் 27 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 7 சதவீதம், சீனாவில் 5 சதவீதம் அளவுக்கும் இணையத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
 • சரி, இவ்வளவும் சொல்லிவிட்டு நமது நாடு நாடு சந்திக்கும் இணையவழித் தாக்குதல்களின் இழப்பைச் சொல்லாமல் போனால், கட்டுரை நிறைவடையாது. நம் நாடு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது.